கர்த்தர்மேல் நம்பிக்கையாயிரு!
தியானம்: 2025 பிப்ரவரி 19 புதன் | வேத வாசிப்பு: சங்கீதம் 46:1-11

கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும் (சங்கீதம் 31:1).
நம்முடைய வழியைக் கர்த்தரிடத்தில் ஒப்புவிப்பதென்றால் என்ன? நமது திட்டங்கள், தீர்மானங்கள், விருப்பங்கள் எல்லாவற்றையும் ஜெபத்தின் மூலமாக ஆண்டவரின் பாதத்தில் வைத்துவிடுவதே “வழியைக் கர்த்தரிடத்தில் ஒப்புவிப்பதாகும்”. அதாவது, நம்முடைய சகல காரியங்களையும், பெரியதோ அல்லது சிறியதோ எல்லாவற்றையும் நாம் ஆண்டவரிடத்தில் ஒப்புவித்துவிடவேண்டும். இதிலே இன்னுமொரு பகுதியும் உண்டு. ஒப்புவித்துவிட்டு திரும்ப எடுத்துப்போகக் கூடாது. அமைதியாகக் கர்த்தருக்காக, அவருடைய நேரத்திற்காக காத்திருக்கவும் வேண்டும்.
ஒரு குழந்தை தன்னுடைய சகல தேவைகளுக்கும் தன் பெற்றோரைச் சார்ந்திருக்கும். அக்குழந்தை வளர்ந்து பெரியவனாக மாறமாற, அவன் பெற்றோரைச் சாந்திருப்பதை விட்டுவிட்டு, தன்னில்தானே காரியங்களைச் செய்யப் பழகிக்கொள்ளும். ஆனால், ஆவிக்குரிய வாழ்க்கை அதற்கு எதிர்மாறானது; ஒருவர் ஆவிக்குரிய முதிர்ச்சியை நோக்கிச் செல்லச்செல்ல, அவர் தன்னில்தானே சார்ந்திருக்காமல், ஆண்டவரில் அதிகமாக சார்ந்திருப்பதை நாடுவார். அப்படியாக தனது வாழ்க்கையின் சகல காரியங்களிலும் ஆண்டவரையே சார்ந்திருந்து, அவருக்குத் தன்னுடைய வாழ்வை முற்றும் முழுவதும் ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கைகொண்டு வாழும்போது, அவர் சார்ந்திருக்கும் கர்த்தரைத்தவிர வேறு யார் அவர் காரியங்களை வாய்க்கப்பண்ண முடியும்?
இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையானபோது, பார்வோனின் சேனை மீண்டும் அவர்களை அடிமைப்படுத்த பின்தொடர்ந்து வந்தனர். அப்போது, ஒருபுறம் செங்கடல்; மறுபுறம் அழிக்கவரும் பார்வோனின் சேனை. அந்த நிலையில் அவர்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை கர்த்தர் மாத்திரமே. அவர்கள் அவரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் அவர்களுக்குச் செவி கொடுத்து, அவர்களுக்குத் தடையாக நின்ற செங்கடலின் நடுவே ஒரு புதிய பாதையைத் திறந்து கொடுத்தார். பிரியமானவர்களே, இக்கட்டான நிலையில் இருக்கிறீர்களா? உங்கள் சுயமுயற்சிகளை விட்டுவிட்டு கர்த்தரை மாத்திரமே சார்ந்திருங்கள். இடுக்கண் வருமானால் தேவன் கிரியை செய்யும் நேரம் வந்துவிட்டது என்பதே அர்த்தம். கர்த்தர் நிச்சயம் உங்களுக்கு ஒரு புது வழியைத் திறந்து கொடுப்பார்; காரியத்தை வாய்க்கச்செய்வார். “உன் சுய புத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள். அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (நீதி.3:5-6). தேவபிள்ளையே, நாம் இப்போது யாரைச் சார்ந்து வாழப்போகிறோம்?
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, எங்கள் வழிகளை உம்மிடத்திலே ஒப்புவிக்கிறோம். எந்தவொரு சூழ்நிலையிலும், எங்கள் மாம்சபெலத்தையோ, பிறமனிதர்களின் தயவையோ நாடிசென்றிடாதபடி, உம்மையே உறுதியாய் பற்றிக்கொண்டு காத்திருக்க எங்களுக்கு உதவும். ஆமென்.