தேவனுடைய கரம்!

அதிகாலை வேளையில்… (மார்ச் – ஏப்ரல் 2025)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: எஸ்றா 8:21-31

நாங்கள் எருசலேமுக்குப்போக, முதலாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே, அகாவா நதியைவிட்டுப் பயணம் புறப்பட்டோம்; எங்கள் தேவனுடைய கரம் எங்கள்மேலிருந்து, வழியிலே சத்துருவின் கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் எங்களைத் தப்புவித்தது (எஸ்றா 8:31).

கிறிஸ்துவுக்கு இளைஞர்கள் என்ற இயக்கத்தின் தலைவரான பாப் குக் என்பவர் ஒரு YFC மாநாட்டில் “உங்களுடைய வாழ்க்கையிலும் ஊழியங்களிலும் நிகழ்வதை நீங்கள் விளக்கமுடிந்தால் தேவன் அதைச் செய்யவில்லை என்றே பொருள்; எனவே உங்களது வாழ்க்கையை அற்புதங்களின் அடிப்படையில் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று பல ஆண்டுகளுக்கு முன் கூறியதை என்னால் மறக்கமுடியாது. தேவனுடைய கரம் நம்மீது இல்லையெனில், தேவனுடைய வல்லமையை நாம் ஒருபோதும் அனுபவிக்க முடியாது. அதுவே கிறிஸ்தவ வாழ்விலும் ஊழியங்களிலும் முன்னேற்றத்தைத் தரும். இச்சத்தியத்தை விளக்கும் வேதாகம புத்தகம் எஸ்றாவின் புத்தகம் ஆகும். “தேவனுடைய கரம் தமது பிள்ளைகளுக்காக ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்தது” என்பதை அது நன்கு விவரிக்கிறது.

வழிநடத்தும் கரம்: “ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்” (நீதி. 21:1). யூதர்கள் எழுபது ஆண்டுகள் சிறைபட்டுப்போவார்கள் என்றும், பின்னர் தங்கள் தேசத்துக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் எரேமியா தீர்க்கதரிசி முன்னறிவித்திருந்தார் (எரே.25:1-14; 29:10,11). நாடு கடத்தப்பட்ட தீர்க்க தரிசி தானியேல் இவ்வுண்மையை அறிந்துகொண்டார். தேவனுடைய இவ்வாக்கு றுதியை உரிமை கோரி ஜெபத்தில் தன்னை அர்ப்பணித்தார். கோரேஸ் அரசரின் இருதயம் தேவனால் ஏவப்பட்டது. சிறைப்பட்டவர்களை விடுதலை செய்தார் (எஸ்றா 1:1-4). அரசியல் அழுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் லஞ்சம் இவைகளால் அல்ல; தேவனுடைய மக்கள் தேவனுடைய வாக்குறுதிகளை நம்பி ஜெபித்ததால் இது நடந்தது.

ராஜாவின் இதயம் தேவனுடைய கரத்தால் அசைக்கப்பட்டது. சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள் தங்களுடைய நாட்டுக்குத் திரும்ப முடிவெடுத்தனர் (எஸ்றா 1:5). சுமார் ஐம்பதாயிரம் பேர் பாபிலோனை விட்டு எருசலேமை நோக்கி நீண்ட பயணமாயினர். நாடுகடத்தப்பட்ட ஆண்டுகளில் அநேக குடும்பங்கள் வசதியாக வாழ்ந்தனர். எனவே அவர்கள் பாபிலோனில் தங்கியிருக்கவே விரும்பினர். ஆனால், அர்ப்பணித்திருந்த மீதியாயிருந்த மக்கள் விசுவாசத்தோடு தங்களது நாட்டுக்குத் திரும்பி ஆலயத்தைக் கட்ட பயணமாயினர். இப்பணிக்காக பாபிலோனில் தங்கியிருந்த யூதர்கள் தங்களது ஆஸ்தியில் தாராளமாகக் கொடுத்தனர். கோரேஸ் அரசர் ஆலயத்துக்குத் தேவையான பணிமுட்டுகளையும் ஆசாரியர்களுக்குக் கொடுத்தார் (வச.5-8). இந்த சிறப்பான நிகழ்வுகளுக்கு தேவனே மகிமைக்குப் பாத்திரர். ஜெபத்துக்கும் கர்த்தருடைய வசனத்துக்கும் நம்மை அர்ப்பணித்தால் இதைவிட அதிகமான அற்புதங்களை நாமும் உணரலாம்.

பாதுகாக்கும் கரம்: அதிவேகமான தகவல்தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் மிகுந்த இந்த காலத்தில் நீண்ட பயணங்களை மேற்கொள்ள நாம் தயங்குவதில்லை. ஆனால், அக்காலத்தில் இவ்வித வசதிகள் எதுவும் இல்லை. கொள்ளைக் கூட்டத்தார் சாலைகளில் பதிவிருந்தனர். எனவே பயணம் செய்வது பெரும் ஆபத்தாக இருந்தது. மேலும் அது வசதியற்றதாகவும், களைப்படையச் செய்த தாகவும் இருந்தது. ஆனால், தேவனுடைய கரம் இப்பயணத்தை மேற்கொண்ட யூதர்களைப் பாதுகாத்தது. அவர்கள் எருசலேமை அடைந்தவுடன் எருசலேம் திரும்பக் கட்டப்படுவதை விரும்பாத எதிரிகளால் தாங்கள் சூழப்பட்டிருந்ததை அறிந்துகொண்டனர். ஆனால், அவர்களுடன் சமரசம் செய்யாதவாறு தேவன் அவர்களுக்கு ஞானத்தையும் தைரியத்தையும் கொடுத்து காத்துக்கொண்டார். ஏமாற்றும் சர்ப்பமாகிய சாத்தான் பொய்சொல்லி தன்னுடைய தாக்குதலை ஆரம்பிப்பான் (எஸ்றா 4:1-5). அதில் அவன் தோற்றுவிட்டால் அவன் விழுங்கும் சிங்கமாக மாறிவிடுவான். ஆனால், தேவனுடைய கரம் வல்லமையுடையது; அவர் நமக்கு வெற்றியைத் தருவார்.

சீர்ப்படுத்தும் கரம்: எஸ்றா 9-10 மற்றும் நெகேமியா 9-13 ஆகிய அதிகாரங்கள் கர்த்தருடைய சட்டத்துக்கு கீழ்ப்படியாமல் அந்நிய ஜாதி பெண்களைத் திருமணம் செய்திருந்த யூதர்களின் சோக வரலாற்றைத் தெரிவிக்கின்றன. இந்த சமரசத்துக்கு தலைவர்கள் சம்மதித்தால் அது தேவபக்தியுள்ள ஜாதியைக் கலப்படம் செய்தவர்களாவார்கள் (மல். 2:13-16). தலைவர்கள், “கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவர்களை சிட்சிக்கிறார்” (எபி.12:5,6) என்ற கொள்கையில் பழகவேண்டும். ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படியும்பொழுது அவரது கரம் ஆசீர்வாதத்தை அளவில்லாமல் ஊற்றும். நாம் அவரை எதிர்க்கும்பொழுது அவரது கரம் நம்மேல் பாரமாயிருக்கும் (சங்.32:4). நாம் தேவனுக்குப் பணிபுரிய வாஞ்சிக்கும்பொழுது அவரது கரம் நம்மேல் எப்பொழுதும் நன்மையாக இருக்கும் என்பது உண்மை. கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது, கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ் செய்யும் (சங்கீதம் 118:16).

மொழியாக்கம்: திருமதி அகஸ்டா மங்களதுரை