4. வேதாகமம் நித்தியமானது. பரிபூரணமானது!
வேதாகமத்தின் தனிச்சிறப்பு (மார்ச் – ஏப்ரல் 2025)
Dr.உட்ரோ குரோல்
வேதாகமத்தின் தனித்தன்மைகள் பற்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். வேறு எந்தப் புத்தகத்துக்கும் இல்லாத தன்மைகள் சிறப்பாக வேதாகமத்தில் உள்ளன. அவை:
1. அகத்தூண்டல். 2. உட்கருத்தை உணர்த்தி காட்டுதல். 3. தவறு இல்லாமல் இருத்தல். 4. பிழை இருக்க வாய்ப்பே இல்லாதிருத்தல்.
இன்னும் இரண்டு தன்மைகள் உண்டு. அவற்றைக் குறித்து இப்போது பார்ப்போம்.
1. நித்தியமானது. 2. பூரணமானது.
வேதாகமம் நித்தியமானது. தேவன் நித்தியமானவராக இருந்தால் அவருடைய வார்த்தையும் நித்தியமானதுதானே! எனவே வேதம் நித்தியமானது என்றவுடன் ஆச்சரியப்பட எதுவுமில்லை. தேவன் ஆதியும் அந்தமும் இல்லாதவர். அதுதான் தொடக்கமும் முடிவும் இல்லாதவர். அவருடைய உள்ளத்தில் உலகம் தோன்றுவதற்கு முன்னரே இருந்த சிந்தனைகளும், வார்த்தைகளும் வேதாகமத்தில் உள்ளன. காலம்கடந்த பின்னரும் அவை அவருடைய மனதில் இருக்கும்.
நாம் ஒவ்வொரு காரியத்தையும் காலத்தோடு தொடர்புபடுத்திச் சிந்திக்கிறோம். ஆனால் தேவன் அப்படிச் செய்வதில்லை. அவர் காலத்துக்கு அப்பாற்பட்டவர். அவருடைய வார்த்தையில் காணப்படும் சத்தியங்கள் நித்தியமானவை. ஏனெனில் அவை என்றென்றும் சத்தியமாகவே இருக்கும்.
நிச்சயமாகவே இந்தச் சத்தியங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில்தான் எழுதப்பட்டன. ஆனால், இந்த எழுதப்பட்ட கர்த்தருடைய வார்த்தைக்குக் காலம் இல்லை; அது நித்தியமானது! ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன் சங்கீதக்காரனான தாவீது, “கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது” என்றான் (சங்.119:89)
தேவனுடைய வார்த்தையை பவுல் எழுதும்போது நிலைப்படுத்தப்படவில்லை. பவுல் எழுதுவதற்கு வெகுகாலத்துக்கு முன்னரே நிலைப்படுத்தப்பட்டிருந்தது. வேதாகமத்தின் முதல் ஆகமங்களான ஐந்தாகமங்களையும் எழுதும்போது வேதாகமம் நிலைப்படுத்தப்படவில்லை. வேதாகமம் மோசே இவைகளை எழுதுவதற்கு முன்னரே இருந்தது.
வேதாகமம் எழுதப்படுவதற்கு ஒரு ஆரம்பம் இருந்தது. ஆனால் அதில் இருக்கும் செய்திக்கும், சத்தியத்துக்கும் ஆரம்பம் இல்லை. இந்த வேதாகமம் நித்தியமானபடியால் எப்போதும் நடை முறையில் உள்ளதாகவே இருக்கும்.
கர்த்தருடைய வேதத்தை நித்தியமானதாக இல்லாமல் ஆக்கவும், அழித்துவிடவும் பலர், பலவகைகளில் முயற்சி செய்தனர். அதை அழித்து ஒழித்துவிடவும், வரலாற்றில் இடம்பெறாமல் செய்யவும் என்னவெல்லாம் செய்யமுடியுமோ, அனைத்தையும் செய்தனர்.
பாபிலோனியர் முயற்சித்தார்கள். தோல்வி அடைந்தார்கள்.
அந்தியோகு எப்பிபானஸ் யூத சமயத்தையும் அவர்களுடைய பரிசுத்த நூல்களையும் அழிக்க நினைத்தான். தோல்வியடைந்தான்.
புதிய ஏற்பாட்டுக்காலத்தில் ரோமச் சக்கரவர்த்தியான டயோக்கிளீஷியன் மக்கள் கிறிஸ்தவர்களாக மனந்திரும்பிக் கிறிஸ்தவம் வலுப்பெறுவதைத் தடுக்கச் சட்டத்தின்மேல் சட்டம் பிறப்பித்தான். அவன் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களைக் கொன்றான். வேதாகமங்களை சுட்டெரித்தான். மிகவும் பெருமிதத்துடன், கிறிஸ்தவ சமயம் அழிக்கப்பட்டுவிட்டது. விக்கிரக வணக்கம் புதுப்பிக்கப்பட்டது என ஒரு தாமிரப் பட்டயத்தில் எழுதினான். ஆனால், அந்த ரோமப்பேர ரசால் தேவனுடைய நித்திய வார்த்தை யாகிய வேதாகமத்தை அழிக்கவோ, ஒழிக்கவோ முடியவில்லை.
பிரான்ஸ் தேசத்தில் உள்ள, சமயப்பற் றில்லாத வால்ட்டயர் ஒருதடவை இப்படிக் கூறினான். இன்னும் நூறு ஆண்டுகளுக்குள் கிறிஸ்தவசமயம் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து ஒழிந்துபோகும். வரலாற்றில்மட்டும் இடம்பெறும் என்றான். ஆனால், அந்த வால்ட்டயர் 1778ஆம் ஆண்டு இறந்துபோனான். வேதாகமம் ஒருபோதும் அழிவதில்லை.
இன்றும் கதை அப்படியேதான் இருக்கிறது. ஹாலிவுட்காரர்கள், மனித இன நலக் கொள்கைக்காரர்கள், பரிணாமக் கொள்கைக்காரர்கள், சில சபைப்பிரிவினர் ஆகியோர் வேதாகமத்தை அழித்து விடவும், அதன் சக்தியைக் குறைக்கவும் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். தேவனுக்கு முன்பாகத் துணிகரமான பாவங்களைச் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால், வேதாகமம் நித்தியமானது!
வேதாகமத்தை எரித்துப்போடவும், அழித்துப்போடவும், துண்டுதுண்டாகக் கிழித்தெறியவும் எடுக்கப்படும் முயற்சிகள் யாவும் தோல்வியடையும். ஆண்டவராகிய இயேசு இப்படியாகக் கூறியிருக்கிறார்: வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை (லூக்கா 21:33).
வேதாகமத்தைத் தனிசிறப்புமிக்கதாக ஆக்கும் இன்னொரு அம்சம் என்ன வென்றால், வேதாகமம் பூரணமானது என்பதாகும்.இந்தத் தன்மை இதை வேறு புத்தகங்களிலிருந்து பிரித்து வித்தியாசமானதாகக் காட்டுகிறது. வேதாகமம் தேவனைப் பூரணமாக வெளிப்படுத்தும் ஒரு புத்தகமாகும்! தேவனைப்பற்றி வெளிப்படுத்துவதில் ஒருபகுதி மட்டுமல்ல, வெளிப்படுத்தப்பட்டது கொஞ்சம். இன்னும் வெளிப்படுத்தப்பட வேண்டியது உண்டு என்பதல்ல. வேதாகமம் பூரணமானது. ஒரு குறைவுமில்லாதது. அது பூரணமான வட்டம்!
உலகின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நிலைகளில் உள்ள (மேய்ப்பர்கள் முதல் இராஜாக்கள் வரை) வெவ்வேறு காலங்களில் 40 எழுத்தாளர்களால் 1500 வருடகால இடைவெளிக்குள் எழுதி முடிக்கப்பட்ட புத்தகங்கள் எப்படி பரிபூரண மானதாக இருக்கமுடியும்?
இந்த வேதாகமத்தின் கடைசிப்பகுதி 19 நூற்றாண்டுகளுக்குமுன் எழுதி முடிக்கப்பட்டது. அதிலிருந்து இதுவரை நாம் எவ்வளவோ காரியங்களைப் படித்து அறிந்துள்ளோம்.
(தொடரும்)
மொழியாக்கம்: ஜி.வில்சன்