லெந்து நாட்கள்

தியானம்: 2025 மார்ச் 5 புதன் | வேத வாசிப்பு: சங்கீதம் 139:1-24

YouTube video

தேவனே, என்னை ஆராய்ந்து, …. அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும் (சங்.139:23,24).

சாம்பல் புதன் என்றழைக்கப்படும் நாள் தொடங்கி, ஞாயிறு தினங்கள் தவிர்த்து, பெரிய வெள்ளிக்கு முந்திய பரிசுத்த வாரம் உட்பட்ட காலப் பகுதியே ‘லெந்து காலம்’ எனப்படுகிறது. முதல் மூன்று நூற்றாண்டு கிறிஸ்தவர்களினால், கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த பண்டிகை நாளுக்கு முன்பு மூன்று நாட்களாகவே இந்த லெந்து காலம் அனுசரிக்கப்பட்டு வந்தது. கி.மு. 140-202ம் ஆண்டளவில் வாழ்ந்த இரேனியஸ் என்ற இறையியல் பேராசிரியர், “இயேசு கிறிஸ்துவை தம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் எடுக்கும் முன்பாகத் தம்மை ஆராய்ந்து, தமது பாவங்களை அறிக்கையிட்டு, தம்மை கிறிஸ்துவுக்கு அர்ப்பணிப்பதற்காக இந்நாட்களை ஏற்படுத்திக்கொண்டனர். ஆனால், அதின் பிற்பாடு இந்த லெந்து நாட்கள் “நைசீன்” என்று அழைக்கப்பட்ட மன்ற உறுப்பினரால் கி.மு.325ஆம் ஆண்டளவில் நாற்பது நாட்களாக அதிகரிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர், இதுவே திருச்சபைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

கிறிஸ்தவ வாழ்வு என்பது, பாவத்தை அறிக்கை செய்து, ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வதோடு நிறைவுபெறுவதில்லை. இதுவரை பாவத்திற்கு அடிமையாயிருந்தவன், இப்போது கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய ஆரம்பத்திற்குள் வருகிறான்; அதாவது, அவன் ஒரு புதிய சிருஷ்டியாகிறான். அதற்காக, அவன் வேறு உலகில் வாழ முடியாது; பாவம் நிறைந்த இந்த உலகில்தான் தொடர்ந்தும் வாழவேண்டும். அதனால், பாவ சோதனைகளை அவன் சந்தித்துத்தான் ஆகவேண்டும். விட்டு வந்த பாவமான வாழ்வில் திரும்பவும் விழுந்துவிடாதபடி கிறிஸ்துவுக்குள் உறுதியாய் வளரவேண்டுமாயின், அவன் நித்தமும் தன்னை ஆராய்ந்து, கிறிஸ்துவுக்குள் தன் நிலைமையைச் சோதித்தறிந்து, தினமும் தன்னை தேவசமுகத்தில் சுத்திகரித்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். அப்போது, அவனுடைய உள்ளான மனுஷன் கிறிஸ்துவுக்குள் தினமும் புதுப்பிக்கப்பட்டு, அவன் தன் ஆவிக்குரிய வாழ்விலே வளர்ச்சியடைகிறான்.

இந்த வளர்ச்சிக்கு இந்த லெந்து காலம் நமக்கு மிகவும் உதவுகிறது. நமக்குள்ளான ஒரு கட்டுப்பாட்டில் வளரவும், உள்ளான மனுஷன் பெலப்படவும், இந்த லெந்து காலத்தில் நாம் செய்யும் ஜெபம், தியானம், உபவாசம் யாவும் நமக்குப் பெரிதும் உதவுகின்றன. சிலுவையைத் தியானிக்கத் தியானிக்க நம் உள்ளம் உண்மையாகவே உடைகிறது என்பதை நாம் அனுபவித்திருக்கிறோம். ஆகவே, இந்நாட்களில் நமது முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், மெய்யான கீழ்ப்படிதலோடும் தேவனைத் தேட நம்மை ஒப்புவிப்போமாக.

ஜெபம்: பரிசுத்தமுள்ள ஆண்டவரே, இந்த லெந்து நாட்களை எங்களது ஆவிக்குரிய வாழ்வுக்கு நாங்கள் அதிக பயனுள்ளதாக்கிக் கொள்ளவும், நீர் எங்களைப் புதுப்பிக்கும் படியாகவும் உம்முடைய சமுகத்தில் எங்களைத் தாழ்த்துகிறோம். ஆமென்.