பரிசுத்தம்!

தியானம்: 2025 மார்ச் 12 புதன் | வேத வாசிப்பு: 1 பேதுரு 1:13-16

YouTube video

நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே (1பேதுரு 1:16).

இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து மீட்டபின்னர், அவர்கள் வாழவேண்டிய முறைமைகளை மோசேயினூடாக தேவன் வெளிப்படுத்தினார். அப்போது, பரிசுத்தத்தைக் குறித்து தேவன் பலதடவைகள் வலியுறுத்தியதை மோசேயின் ஆகமங்களில் வாசிக்கிறோம். ஓய்வுநாளை ஆசரிப்பதில் பரிசுத்தம் (யாத். 16:23), ஆசாரியர்களின் பரிசுத்தம் என்று பல (யாத்.19:22, 40:13-15). சீனாய் மலையடிவாரத்துக்குப் போகுமுன்னர் மக்களின் பரிசுத்தம், தேவனுக்கென்று கட்டப்பட்ட ஆலயத்தில் உபயோகிக்கப்பட்ட எல்லாப் பாத்திரங்களினதும் பொருட்களினதும், அங்கு பணிசெய்த ஆசாரியர்களின் உடைகளிலும் இருக்கவேண்டிய பரிசுத்தத்தைக் குறித்து தேவன் மோசேக்கு விளக்கினார். மோசே அப்படியே செய்தார். மேலும், யோபு தன் குமாரரைப் பரிசுத்தப்படுத்தினான் என்றும் வாசிக்கிறோம் (யோபு 1:5). நியாயாதிபதிகள், ராஜாக்கள், தீர்க்கதரிசிகள் அனைவரும் தேவனுக்குள்ளான பரிசுத்தத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தனர்.

“பரிசுத்தம்” என்பது என்ன? நாம் நினைக்கிறபடி தூய்மையாக வாழுவது என்பது அல்ல, பரிசுத்தம். அது நம்மால் முடியுமா? மேலும், பரிசுத்தம் என்ற சொல் தேவனோடு சம்மந்தப்பட்டது. அப்படியானால், தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? ஆம், பரிசுத்தம் என்பதன் அர்த்தம், வேறுபிரிக்கப்பட்ட, தனித்துவமான வாழ்வாகும். தேவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்ட நாம் உலகத்தோடு ஒத்து ஓடமுடியாது. தேவனுடைய வார்த்தைக்கேற்ப நாம் வித்தியாசமானவர்களாக, தேவனையே பிரதிபலிக்கிறவர்களாக வாழவேண்டும். அதற்காகவே தேவன் இஸ்ரவேலைப் பிரித்தெடுத்தார்; இன்று நம்மை அழைத்திருக்கிறார். இதைத்தான், “நீங்கள் பரிசுத்தமாயிருக்கவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது” என்றும், “தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல; பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்” (1தெச.4:3,7) என்றும் பவுல் எழுதியுள்ளார். “பரிசுத்தத்தை அசட்டை பண்ணுகிறவன் மனுஷரையல்ல, தமது பரிசுத்த ஆவியைத் தந்தருளின தேவனையே அசட்டை பண்ணுகிறான்” (1தெச.4:8) என்றும் கூறினார்.

இப்படியிருக்க, பரிசுத்தத்தை அசட்டை செய்வது எப்படி? எப்போதும், எல்லாவற்றிலும் “பரிசுத்தராயிருக்க” நாடுவோமாக. தேவன் வெறுக்கின்ற அனைத்தையும் நாம் விட்டுவிடவேண்டும் என்ற வாஞ்சையோடு தேவசமுகத்தை நாடுவோமானால், தவறான சிந்தை, இருதயத்தின் திருக்கான நினைவுகள், தீய வார்த்தை, தூய்மையற்ற நடத்தை, யாவையும் தேவ ஆவியானவர் நமக்கு உணர்த்துவார். அவற்றை விட்டுவிடத் தீர்மானிக்கும்போது தேவாவியானவர் நமக்கு உதவி செய்வார். பரிசுத்தராகிய அவரே நம்மை பரிசுத்தத்தில் வழிநடத்த முடியும்.

ஜெபம்: அன்பின் தகப்பனே, பரிசுத்தத்திற்கே எங்களை அழைத்திருக்கீறீர்; நீர் வெறுக்கிற அருவருப்புகள் எங்களில் காணாதபடி அனுதினமும் பரிசுத்தமாய் வாழ உமதருள் தாரும். ஆமென்.