காண்கிற தேவன்!
தியானம்: 2025 மே 18 ஞாயிறு | வேதவாசிப்பு: சங்கீதம் 17:1-8

இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன் (யாத். 3:9).
அமெரிக்காவிலுள்ள நெப்ரஸ்கா என்னும் இடத்தில் ஷெரில் காசிடிஸ் என்ற மருத்துவதாதி ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒருநாள் மதியவேளையில் தனது மகள் ரேச்சலை நடன வகுப்பிலிருந்து அழைத்து வரச்சென்றார். பொதுவாக மகள் வகுப்பு முடிந்து வரும்வரை அவர் காரிலேயே அமர்ந்திருப்பார். ஆனால் அன்று வழக்கத்துக்கு மாறாக, அரங்குக்கு உள்ளே சென்று பார்க்க விரும்பினார். உள்ளே தனது மகள், அவளுடன் பயிற்சி எடுக்கும் ஆறு பிள்ளைகள், அவர்களின் நடன ஆசிரியை மற்றும் ஆசிரியையின் தந்தை ஆகிய அனைவரும் ‘கார்பன் மோனாக்ஸைட்’ வாயுவினால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்திருப்பதைக் கண்டார். உடனே எதிர் வீட்டில் வசிப்பவர்களது உதவியோடு அனைவரையும் காப்பாற்றினார். அச்சம்பவத்தைக் குறித்து அவர் சொன்னபோது, “இப்பிள்ளைகளை தேவன் கண்காணித்துக் கொண்டிருந்தார்” என்று நம்புகிறேன் என்று கூறினார். உண்மைதான், இல்லாவிடில் என்றுமில்லாமல் அந்தத் தாயார் அரங்குக்குள் சென்றிருப்பாரா?
அன்று மோசேயும் இதைப்போலவே இஸ்ரவேல் ஜனங்களைக் கண்காணிக்கும் ஒருதேவன் உண்டு என்பதை உணர்ந்தார். எப்படியெனில் “எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலைக் கண்டேன்” என்று கர்த்தர் மோசேயிடம் கூறினார். ஆம், நமது தேவன் “காண்கின்ற தேவன்” அன்று கைவிடப்பட்ட ஆகார் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தபோது அவளைக் கண்டவர் யார்? கர்த்தரல்லவா! அதனால்தானே அவள் அவருக்கு “என்னைக் காண்கிற தேவன்” என்று பெயரிட்டாள். கண்களைப் படைத்த அவர் குருடரல்ல. அவரது கண்களுக்கு மறைவானது ஒன்றுமில்லை. “அவருடைய கண்கள் ஜாதிகள் மேல் நோக்கமாயிருக்கின்றது” என்று சங்கீதக்காரன் கூறுகின்றார் (சங்.66:7). “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடு இருக்கிறவர்களுக்கு தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” என்று 2 நாளாகமம் 16:9இல் அதின் ஆசிரியர் கூறுகின்றார். ஆம், கர்த்தருடைய ஜனங்கள் அவரது கண்களுக்கு மறைவாக ஒருவினாடிகூட இருப்பதில்லை.
அருமையான தேவபிள்ளையே, நீ எங்கே இருந்தாலும், மனிதனால் எங்கே மறைத்து வைக்கப்பட்டோ அடைத்துவைக்கப்பட்டோ இருந்தாலும் உன்மேல் கண்ணோக்கமாய் இருக்கும் ஒரு ஆண்டவர் உனக்குண்டு. எனவே நீ பயப்படவோ கவலைப்படவோ தேவையில்லை. பரமபிதா உன்னை மறக்கவோ கைவிடவோ மாட்டார். சரியான நேரத்தில் அவரது வழியில் உன் எல்லாத் துன்பத்துக்கும் உன்னை நீங்கலாக்கி இரட்சிப்பார்.
நீ நெருப்பில் இருக்கும்பொழுது தேவனுடைய கண்கள் உஷ்ணமாயிருக்கும்!
ஜெபம்: எங்களை மறவாத ஆண்டவரே, தீங்கு எங்களைத் துக்கப்படுத்தாதபடிக்கு நீர் எங்கள்மேல் கண்ணைவைத்து பாதுகாக்கிறீர். உமக்கு நன்றி. ஆமென்.