இதில் என்ன நன்மை?

தியானம்: 2025 ஜுன் 11 புதன் | வேதவாசிப்பு: ரோமர் 8:1-28

YouTube video

… தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோமர் 8:28).

உயர்கல்வி, ரோமப் பிரஜாவுரிமை, யூதமத வைராக்கியம் யாவும் கொண்டவர் மாத்திரமல்ல, கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தத் தயங்காத மனுஷனுடைய வாழ்வில் இயேசுகிறிஸ்துவின் குறுக்கீடு முழுமையான ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. சகல வசதிகளோடும், சமுதாயத்தில் மதிப்போடும் வாழ்ந்த அவர், பின்பு அனைத்தையும் குப்பையாக எண்ணி, இயேசுவுக்காகவே வாழ ஆரம்பித்தார். சென்ற இடமெல்லாம் சுவிசேஷப்பணி செய்து, சபைகளை உருவாக்கி, உண்மைக் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை சத்தியங்களைக் கற்றுக் கொடுத்தார். இப்பாதையில் அவர் பல பாடுகளைச் சந்திக்க நேர்ந்தது. அத்துடன், தன் இறுதி நாட்களை கைதியாகவே கழித்து, சிரைச்சேதம் செய்யப்பட்டார். இவர் வேறு யாருமல்ல, பவுல் அடியார்தான்!

இதைப் பார்க்கும்போது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதில் “என்ன நன்மையை” பவுல் கண்டுகொண்டார் என்று நாம் கேட்கக்கூடும். ஆனால், இந்தப் பாடுகளுக்கூடாகக் கடந்துசென்ற பவுல், அப்படி நினைத்ததுமில்லை; தன் இறுதி வாழ்நாட்களின் சிறையிருப்பினால் மனமுடைந்து பின்வாங்கிப் போகவுமில்லை. மாறாக, சிறையிலிருக்கும்போதும் தான் விட்டுவந்த விசுவாசிகளைத் தொடர்ந்தும் பலப்படுத்தும்படி பல கடிதங்களை எழுதினார். இவற்றையே புதிய ஏற்பாட்டில் இன்றும் நாம் வாசித்து நம்மைப் பலப்படுத்திக் கொள்கிறோம். இவற்றில் சிலவற்றை பவுல் சிறையிலிருந்தே எழுதினார் என்று நம்பப்படுகிறது. முக்கியமாக, அவர் எழுதிய இறுதி நிருபம் தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் நிருபம். “நான் தேகத்தைவிட்டுப் பிரியும் காலம் வந்தது” என்று எழுதிய வரிகள் இன்றும் நமது உள்ளத்தையும் உடைக்கிறது.

தேவபிள்ளையே, பவுலுக்கு நடந்தவைகள் உலக பார்வையில் நல்ல காரியங்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால், சகலத்தையும் தேவன் நன்மைக்கு ஏதுவாக மாற்றினார் என்பதுதான் உண்மை. பாடுகளின் மத்தியிலும் பவுல் தேவனுக்கு சாட்சியாகவே வாழ்ந்துமுடித்தார். தேவபிள்ளைகள் வாழ்வில் எதுவுமே வீணுக்கல்ல. இன்றும் இயேசுவின் நாமத்தினிமித்தம் அன்றாடம் இரத்தச்சாட்சிகளாக மரிக்கிறவர்கள் அநேகர். ஆனாலும் அவர்களது மரணத்தினூடாகவும் தேவன் பெரிய காரியங்களைச் செய்துகொண்டே இருக்கிறார். இப்படியிருக்க, நாம் பாடுகளைச் சந்திக்கும்போது, கிறிஸ்துவுக்காக வாழுவதில் என்ன நன்மை என்று கேட்போமா? அல்லது, பாடுகளுக்குள் மறைந்திருக்கும் நன்மை வெளிப்படக் காத்திருப்போமா? எந்த சூழ்நிலையையும் தேவகரத்தில் ஒப்புவிப்போமானால், அவர் அந்த சூழ்நிலையைக் கரங்களில் எடுத்துக்கொண்டு, தமது நாமத்தை நிச்சயம் மகிமைப்படுத்துவார். பவுல் அந்த சந்தோஷத்தை மரணத்திலும் அனுபவித்தார். நாம் ஏன் பின்நிற்க வேண்டும்?

ஜெபம்: அன்பின் தேவனே, எங்களை உருவாக்கும் கருவிகளான பாடுகளையும் துன்பங்களையும் பவுலைப் போல நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். யாவற்றையும் நன்மையாக மாறப்பண்ணுவீர். உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.