காலம் தேவனுடையது!

தியானம்: 2025 அக்டோபர் 24 வெள்ளி | வேதவாசிப்பு: பிரசங்கி 3:1-10

YouTube video

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு (பிரசங்கி 3:1).

“ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு என்றால், அது அது நடக்க வேண்டிய நேரம் நடந்துதான் தீரும்; அவற்றிலிருந்து தப்பவும் முடியாது என்றால் கடவுளை ஏன் நான் கும்பிடவேண்டும்’ என்று தன் உடைமைகளை இழந்து போயிருந்த ஒருவர் அலுத்துக்கொண்டார். “இழந்துபோகும் காலத்திலே இப்படிப் பேசுகின்ற நீங்கள், புதியவற்றைத் தேடிச்சேர்த்துக் கொள்ளும்போது மவுனமாய் இருப்பது ஏன்” என்று கேட்டபோது, அவர் மவுனமாகிவிட்டார். அதேசமயம், “என் தேவன் தவறு செய்கிறவர் அல்ல; இந்த அநியாயத்தின் மத்தியிலும் தேவனுடைய நியாயம் விளங்கும் காலம் வரும்” என்று வீதியிலே குருதி வெள்ளத்தில் கிடந்த தன் கணவனுக்கு அருகில் முழங்காலிட்டு ஜெபித்தாளாம் ஒரு இளம் மனைவி. இவளைக் குறித்து என்ன சொல்லுவோம்!

“காலம்” என்பது மிகவும் முக்கியம். சாலொமோன் குறிப்பிட்டுள்ள பல சம்பவங்களும் அவருடைய அனுபவங்களும் அந்தந்த காலத்தில் நமது வாழ்விலும் நடக்கத்தான் செய்கின்றன. “ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரே.8:7). நமக்கு நடக்கும் பாதகமான சம்பவங்களைக் குறித்து நாம் அதிகமாகக் கலங்கிப்போவதுண்டு. அதேசமயம் அவற்றுக்கு எதிர்மாறாக நன்மைகளும் நிகழுகின்றன என்பதை சிந்திப்பது குறைவு. நாம் எந்தக் காலத்திலும் தேவனுக்குள் சந்தோஷமாக திருப்தியாக இருக்க வேண்டுமானால் ஆண்டவருடைய சரியான வேளையை அறிந்துகொண்டு, அதை ஏற்றுக்கொண்டு, கர்த்தர் சரியாகவே செய்கிறார் என்று மெச்சி வாழப் பழகவேண்டும். மாறாக, சந்தேகப்பட்டு, ஆத்திரப்பட்டு, தேவன் பிழை செய்தார் என்று அதைரியப்படுவோமானால், அது நமக்கு ஆபத்தாகிவிடும். மாத்திரமல்ல, அது தேவனைவிட்டு நம்மைப் பிரித்து, தேவனுக்கு விரோதமாக போர்செய்யும் ஆபத்திலும் நம்மைச் சிக்கவைக்கும்.

தேவபிள்ளையே, நாம் கடந்துவந்த காலங்களை சற்று திரும்பிப்பார்ப்போம். சிலர் என் வாழ்வில் ஒரே கஷ்டமாக இருந்தது என்று சொல்லலாம். அதற்காக ஒருவேளையாவது நன்மையாக இருக்கவில்லை என்று நாம் சொல்லமுடியுமா? நாம் அடைந்த துயரங்களையும் அழுகைகளையும் தோல்விகளையும்கூட தேவனுக்குள் வைப்போமானால், அவற்றுக்குள்ளும் நன்மையான தருணங்களை ஏற்படுத்த தேவனால் கூடும். ஏனெனில், காலங்கள் அவருடைய கரத்தில் இருக்கிறது (சங்.31:15). அதை யாராலும் மாற்றமுடியாது. ஆகையால், எக்காலத்திலும் எவ்வேளையிலும் தேவனையே நம்புவோமாக!

ஜெபம்: அன்பின் தகப்பனே, எந்த காலத்திலும் எந்த வேளையிலும் எங்கள் காலங்களை தம்முடைய கரத்தில் வைத்திருக்கிற உம்மை மட்டுமே துதித்து, உம்மையே நம்பியிருக்க தூயஆவியின் பெலனைத் தந்தருளும். ஆமென்.