துயருற்றது போதும்!

தியானம்: 2025 அக்டோபர் 27 திங்கள் | வேதவாசிப்பு: சங்கீதம் 30

YouTube video

கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு (பிரசங்கி 3:7).

இரத்தம் தோய்ந்த அங்கியை அடையாளம் கண்ட யாக்கோபு, மகன் மிருகத்தால் பீறுண்டுபோனான் என்று புலம்பி, தன் வஸ்திரங்களைக் கிழித்து, அரையில் இரட்டுக்கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் மகனுக்காகத் துக்கித்துக் கொண்டிருந்தாராம். சவுலும் யோனத்தானும் செத்துப்போனதைக் கேட்ட தாவீதும் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, புலம்பி அழுது சாயங்காலம் வரைக்கும் உபவாசமிருந்தார். அந்தநாட்களிலே தங்கள் துயரங்களை இப்படியாக வெளிப்படையாகக் காட்ட இயலுமாயிருந்தது. அதற்காக யாக்கோபும், தாவீதும் வாழ்க்கை முழுவதும் அழுதுகொண்டே இருந்தார்களா? யாக்கோபு, யோசேப்பை உயிரோடே பார்க்கப்போனபோது என்ன உடுத்திப் போயிருப்பார்! தாவீது தன் வாழ்வில் தேவன் செய்த மகத்தான கிரியைகளைக் கண்டபோது எப்படிக் களிகூர்ந்திருப்பார்!

இன்று நமது சூழ்நிலை சற்று வித்தியாசமானது. வெளிப்படையாக துயரத்தை வெளிப்படுத்துவது கடினம். கணவனை இழந்துவிட்ட விதவை, தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, அன்றாடம் வாழ்க்கைப் போராட்டத்தை நடத்தியாகவேண்டும். ஒரு பாடல், ஒரு புத்தகம், ஒரு சின்னக் காட்சி எதுவோ நாம் இழந்துபோனவைகளை அல்லது இழந்துபோனவரை ஞாபகப்படுத்தும்போது நமது உள்ளம் சுக்குநூறாய் உடைந்துவிடுகிறது. அதையும் மறைத்துக்கொண்டு அடுத்த காரியத்தைக் கவனித்துத்தான் ஆகவேண்டும். எது எப்படியிருந்தாலும், சாவின் அனுபவங்களுக்கூடாக நாம் கடந்து செல்லும்போது, கிழிக்கப்படுவது, அதாவது துயரப்பட்டு வாய்விட்டு அழுவது, எத்தனை ஆறுதலான வைத்தியம் என்பதை அதற்கூடாகக் கடந்துசென்றவர்கள் ஒத்துக்கொள்வார்கள். என் தாயார் இறந்தபோது, குழம்பிப்போயிருந்த தந்தையோடு நான் என்ன செய்வேன் என்று திகைத்த வேளை எனக்கு அழுகை ஒன்றுதான் சுகமான மருந்தாக இருந்தது. அதன்பின் அழுகையை நிறுத்திவிட்டேன். கர்த்தர் தமது ஆறுதலைத் தந்தார். என்னைச் சுமந்த தந்தையை நான் சுமக்க தேவன் பெலன் தந்தார்; தைரியத்தைத் தந்தார். துயரப்பட்ட நாட்கள் போய் மகிழ்ச்சியோடு கடமையைச் செய்ய ஞானத்தைத் தந்தார். அன்று நான் துயரப்பட்டபடியால்தான் இந்த சந்தோஷம் இன்று அதிக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. கிழிந்துபோனாலும் தைக்கப்படும்போது சந்தோஷம் அல்லவா!

துயரத்தில் தோய்ந்துபோயிருக்கும் தேவபிள்ளையே, துடைத்துவிட்டு எழுந்திரு. நீ தைக்கப்படும் காலம் வந்துவிட்டது. தாவீதுடன் சேர்ந்து, “நான் அமைதியாயிராமல் உம்மைப் பாடித் துதிக்கும்படி என் துயரத்தின் உடையைக் களைந்து மகிழ்ச்சியால் என்னை நிரப்பினீர்” என்று பாடுவோமா! நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர் (சங்.86:7).

ஜெபம்: அன்பின் தேவனே, என் புலம்பலை ஆனந்த களிப்பாக மாறச்செய்து என் இரட்டைக் களைந்துபோட்டு மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினபடியால் உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.