பேசவேண்டிய நேரம்!

தியானம்: 2025 அக்டோபர் 28 செவ்வாய் | வேதவாசிப்பு: சங்கீதம் 39:1-4; தீத்து 2:2-5

YouTube video

மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு (பிரசங்கி 3:7).

எல்லாவற்றுக்கும் ஒரு காலம் இருந்தாலும், மவுனமாயிருக்கவும் ஒரு காலமா? பேசாமல் இருக்கலாமா? மவுனமாயிருக்க யார் விரும்புவார்! மனதிலே எழுகின்ற எண்ணங்களை அலசி ஆராயாமல் அப்படியே கொட்டிவிடுகிறவர்கள் அநேகர். அதனால் வருகின்ற விளைவுகளோ ஏராளம். தன் நாவினாலே பாவஞ் செய்யாதபடி தன்னைக் காத்துக்கொள்ள தாவீது தன்னை அடக்கிக் கொண்டிருந்தார். “நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன். நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்” என்று பாடியுள்ளார் தாவீது.

தன் மகன் வீட்டிற்குச் சென்ற தாய்க்கு அங்கே எல்லாமே நன்றாக இருந்தது. நல்ல வீடு, நல்ல வசதிகள், மருமகள் தன் மாமிக்கு ஏற்ற உணவு வகைகளையும் சமைத்துக்கொடுத்தாள். எல்லாம் நல்லது. ஆனால், அந்த விடுதலை நாட்கள் அந்தத் தாய்க்கு மிகவும் குழப்பமுள்ள நாட்களாயிருந்தன. அதற்குக் காரணம், மருமகளுக்கும் அவளது பேரனுக்கும் நடந்த வாக்குவாதமே. அந்த வாக்குவாதத்தால் பேரன் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டுப் போய்விட்டான். இப்போது, தான் தன் பிள்ளைகளை வளர்க்கும்போது, தான் கற்றுக்கொண்டவற்றை இந்த மருமகளுக்குச் சொல்லவேண்டும் என்று இந்த மாமியின் மனது உந்தித் தள்ளிக்கொண்டே இருந்தது. ஆனால், ஏதோவொன்று அதைத் தடுத்துக்கொண்டும் இருந்தது. தன் மகன் குடும்பத்தில் தான் தலையிடுவதுபோல ஆகிவிடுமே, எனவே, இப்போது பேசுவதா? மவுனமாயிருப்பதா? என அவள் குழம்பினாள். நம்மில் அநேகர் ஆலோசனை என்ற பெயரிலே அநேக குழப்பங்களை ஏற்படுத்துகிறோம் என்பதை சிந்திப்பதில்லை.

யாக்கோபு இவ்வாறு எழுதுகிறார்: “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குத் தாமதமாகவும் இருக்கக்கடவர்கள்“ (யாக்.1:19). அதேசமயம், எப்படி ஆலோசனை கொடுக்கவேண்டும் என்று தீத்து 2:2-5இல் பவுல் தீத்துவுக்கு தெளிவாக எழுதியுள்ளார். அப்படியானால் எப்போது பேசுவது எப்போது மவுனமாயிருப்பது? மவுனம்தான் பேசுவதற்குரிய நேரத்தை நமக்குத் தெளிவாக்கும். பிறருடன் ஆலோசனை என்ற பெயரில் பேசுவதற்குமுன்பு, அதே ஆலோசனைகளை நாம் பின்பற்றியிருக்கிறோமா? நாம் பிறரோடு நல்ல உறவை வைத்துக்கொண்டா மற்றவர்களின் உறவின் விரிசல்களுக்கு ஆலோசனை கொடுக்கிறோம். நாம் பேசுவதற்கு எத்தனிக்கிற நோக்கம் நல்லதா? நாம் பேசுகின்ற நபர் என்ன விதமான எதிர்த்தாக்கத்தை காட்டினாலும் அதைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு இருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு மவுனமாக விடை காணுங்கள். ஆம் என்ற விடை உண்மையாகவே இருக்குமானால் அதுவே நீங்கள் பேசக்கூடிய நேரம். சுற்றி வளைத்துப் பேசாமல் நேராகப் பேசுங்கள்.

ஜெபம்: “அன்பின் பிதாவே, நாவை அடக்கவும், பேசவேண்டிய நேரத்தில் மவுனமாயிராமல் ஞானமாய் பேசவும், அமைதியைக் காக்கவும் கற்றுத்தாரும். ஆமென்.”