நீதி சாகாது!

தியானம்: 2025 அக்டோபர் 30 வியாழன் | வேதவாசிப்பு: பிர.3:15-17; ரோமர் 2:5-11

YouTube video

“சகல எண்ணங்களையும், சகல செய்கைகளையும் நியாயந் தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால்…” (பிரசங்கி 3:17)

நமது கண்கள் காணவே, “அநியாயம் செய்தவன் தப்பிப் பிழைக்கிறான். கொள்ளைக்காரன் சமூகத்திலே பெரியவனாய் வாழுகிறான். கொலைக்காரன் சாட்சிகளின் சாதுரியத்தால் விடுதலையாகிறான். அதேசமயம் அப்பாவி சட்டத்தின்முன் குற்றவாளியாகிறான். இருட்டிலே கொலை செய்யப்படுகிறான். மொத்தத்தில் நீதி விளங்கவேண்டிய இடத்திலே அநீதி துள்ளிக் குதிக்கிறது.” இன்று நாம் எழுப்பும் இதே கேள்விகளைத்தான் அன்று சாலொமோனும் எழுப்பினார். தேவபிள்ளையே, உங்கள் மனதிலும் இன்று இப்படியான கேள்விகள் எழும்பிக் கொண்டிருக்கலாம். உங்களுக்கு மிகவும் அருமையானவர்கள் அநீதியின் கைகளில் அகப்பட்டு, சட்டத்தாலேயே தண்டிக்கப்படலாம். இதனால் நீங்கள் வெறுப்படைந்து, நீதி செத்துவிட்டது என்று புலம்பலாம்.

ஆம், தேவன் ஆளுகைசெய்யும் இவ்வுலகிலே, இத்தனை அநீதிகள் நடக்கலாமா? அநீதியும் அக்கிரமமும் பெருகியிருக்கும் இக்காலத்திலே தேவனுடைய திட்டங்களும் காலங்களும் சரியாக நேர்த்தியாக இருக்கமுடியுமா? முடியும். ஒரு காரியத்தை நாம் சிந்திக்கவேண்டும். அநியாயமும் அக்கிரமமும் தேவனுடைய அநாதி திட்டத்தின் பரிபூரணத்தை ஒருவேளை மறைத்து வைத்திருக்கலாம்; ஆனால், அதன் நிறைவேறுதலை எதனாலும் தடுக்கவேமுடியாது. தேவனுடைய நாள் ஒன்று உண்டு. அன்று தேவநீதி விளங்கும். அதை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது. “தன் சுயவழிதான் நீதி” என்றிருக்கும் சன்மார்க்கனும், ”தேவனே இல்லை” என்கின்ற துன்மார்க்கனும் அழிந்துபோவதை அந்த நாளில் யாராலும் தடுக்கமுடியாது.

தேவன் நம்மீது வைத்திருக்கும் ஒரே நோக்கம் நாம் நித்தியத்தில் அவரோடே வாழவேண்டும் என்பதுதான். அந்த நித்தியத்தின் வாழ்வை இங்கேயே வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு. தேவனுடைய காலநேரங்கள் நமக்குத் தெரியாததினாலே நாம் எதையும் நியாயந் தீர்க்கக்கூடாது. “ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும் தேவன் நியாயத்திலே கொண்டு வருவார்” (பிரச.12:14). சாலொமோன் 3000 வருடங்களுக்கு முன்னரே இதைக் கண்டறிந்துகொண்டாரென்றால், இன்று நாம் ஏன் தைரியத்தை இழக்கவேண்டும்? தேவன் பட்சபாதமின்றி யாவரையும் நியாயத்திலே நிறுத்துவார்.

ஆகையால் தேவபிள்ளையே, அநியாயங்கள் மத்தியிலும் நியாயாதிபதியான தேவனையே பற்றிக்கொண்டு, அவருடைய நாளுக்காகக் காத்திருப்பதோடு, பொறுமையோடு நித்தியத்தின் வெளிச்சத்திலே வாழ நம்மை ஒப்புக் கொடுப்போமாக.

ஜெபம்: “அன்பின் பிதாவே, நீர் நீதியுள்ள தேவன். உமது நீதி விளங்கும் நாளுக்காகக் காத்திருக்கும் நான், இன்று உம்மையே பற்றி வாழ என்னை நீரே வழிநடத்தும். ஆமென்.”