வடராஜ்யம் வீழ்ந்தது!
தியானம்: 2025 நவம்பர் 1 சனி | வேதவாசிப்பு: எபிரெயர் 4:6-13

…ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு,.. (எபிரெயர் 4:11).
நவம்பர் மாதத்திற்குள் பிரவேசிக்கும்படியாக கர்த்தர் கிருபை செய்தபடியால் தேவனை ஸ்தோத்திரிப்போம். உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார் (செப்.3:17). இம்மாதத்தில் தேவனுடைய அனுக்கிரகமும் ஆசீர்வாதங்களும் ஒவ்வொரு குடும்பங்களிலும் நிறைவாய் காணப்பட்டு கர்த்தரால் வழிநடத்தப்படுவதற்கு நாங்களும் ஜெபிக்கிறோம்.
பத்துமாதங்களை சீக்கிரமாகவே கடந்து ஒரு புதிய மாதத்திற்குள் வந்து விட்டோம். தேவனுக்கும் நமக்கும் உள்ள உறவில் எவ்வளவுக்கு வளர்ந்திருக்கிறோம்? தேவவார்த்தைக்குக் கீழ்ப்படிவதில் எவ்வளவுக்கு ஜாக்கிரதையாக இருந்திருக்கிறோம்? இவற்றை சிந்திப்பது நல்லது. தேவனுடனான உறவின் வளர்ச்சிக்கு நமது கீழ்ப்படிதல்தான் அளவுகோல் என்பதை அன்றைய வட ராஜ்யமான இஸ்ரவேல் மறந்தது. இஸ்ரவேலை ஆண்ட சில ராஜாக்களின் வாழ்க்கையை கவனித்து, அதன் அடிப்படையில் நம்மை ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியம். சாலொமோனின் பாவத்தால் அவருடைய மகனின் ஆட்சிக்காலத்தில் ராஜ்யபாரம் இரண்டாகப் பிளந்தது. வடராஜ்யத்தின் முதல் ராஜாவாக ரெகொபெயாம் ஆண்டான். அவனது ராஜ்யபாரம் அத்துடன் முடிந்தது. அவன் பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளைச் செய்வித்து, இவைகளைப் பணிந்துகொள்ளும்படி ஜனங்களையும் வற்புறுத்தி, தன் மனதுக்கு ஏற்றபடி பண்டிகைகளையும் ஏற்படுத்தி, பலியிட்டான். மக்களைத் தேவனைவிட்டு வழிவிலகச் செய்த அவனுடைய இந்தப் பாவம் இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்கள் வாழ்விலும் தொடர்ந்தது. தனது மனைவி யேசபேலின் எண்ணத்துக்கு மதிப்புக்கொடுத்து பாகாலுக்கு வணக்கம் செய்த ஆகாப் வரையும் தொடர்ந்த இந்தப் பாவம், கி.மு.732ல் ஒசெயா இஸ்ரவேலின்மீது ராஜாவாகும் வரைக்கும் தொடர்ந்தது. எலியா, எலிசா உட்பட பல தீர்க்கதரிசிகளைக் கர்த்தர் எழுப்பி எச்சரித்திருந்தார். ஆனாலும், “அவர்கள் செவி கொடாமல்… தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் விட்டு விட்டு, பாகாலைச் சேவித்தார்கள்.” ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார் (2இராஜா. 17:14-18). வடராஜ்யம் அசீரியாவினால் சிறைப்பிடிக்கப்பட்டு, கி.மு.722ல் முடிவுக்கு வந்தது.
“அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாகவும் வெளியரங்கமாகவுமிருக்கிறது” (எபி.4:13). நம்மால் எதனையும் கர்த்தருக்கு மறைக்கமுடியாது என்று தெரிந்திருந்தும் நாம் ஏன் அடிக்கடி அவரைத் துக்கப்படுத்துகிறோம்? தமது வார்த்தைக்குக் கீழ்ப்படியும்படிக்கு கர்த்தர் புறவினத்தாரிடமா கேட்டார்? கீழ்ப்படிதல் ஒன்றைத்தவிர கர்த்தர் வேறே எதை நம்மிடம் எதிர் பார்க்கிறார்? நமது செயல்கள், சிந்தனைகள், கற்பனைகள் யாவையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் அவருக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்கள். இஸ்ரவேலை தமது முகத்துக்கு முன்னின்று தள்ளியவர் இன்று நமக்கு அருளியிருக்கும் கிருபையை நமக்குச் சாதகமாக்கி விடாமல், நம்மை ஆராய்ந்து அவரிடம் ஒப்புவிப்போமாக.
ஜெபம்: கர்த்தாவே, நான்; அடிக்கடி உம்மைவிட்டு விலகாதபடி கீழ்ப்படிந்து நடக்க என்னை அர்ப்பணிக்கிறேன். இப்புதிய மாதத்தை ஆசீர்வதித்துத் தாரும். ஆமென்.