இஸ்ரவேலை ஆண்ட ஆகாப்
தியானம்: 2025 நவம்பர் 2 ஞாயிறு | வேதவாசிப்பு: 1இராஜா.16:21-22;28-33

தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, … விற்றுப் போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை (1இராஜா.21:25).
வடராஜ்யத்தின் வீழ்ச்சியை தியானித்தாலும், அதன் முக்கியமான ஒரு ராஜாவாகிய ஆகாபைக் குறித்து இன்று கவனிப்போம். மனுக்குலம் இன்று தத்தளிப்பில் இருப்பதை மறுக்கமுடியாது. அடுத்த நிமிடம் என்னவாகும் என்று தெரியாத காலத்தில் நாம் வாழுகிறோம். ஆனாலும், சர்வத்தையும் படைத்து ஆளுகை செய்கிறவரும், கொடிய பாவத்தின் பிடியிலிருந்தும், நித்தியநரகத்தின் பயத்திலிருந்தும் நம்மை மீட்டு நடத்தி வருகிற தேவாதி தேவனைப்பற்றிக் கொண்டு வாழுவோமானால், என்ன நேரிட்டாலும் நாம் பயப்பட வேண்டியதில்லை. ஆனால் கர்த்தருடைய கரங்களைவிட்டு விலகினால் என்னவாகும் என்பதை இஸ்ரவேலின் வரலாறு வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
சாலொமோனின் பாவத்தால் அவன் மகனின் ஆளுகையில் இரண்டாகப் பிரிந்து வடபுறமாகச் சென்ற இஸ்ரவேல் ராஜ்யம் மீண்டும் இரண்டாகப் பிளந்ததை வாசித்திருக்கிறோமா? பின்னர் அவர்களில் ஒருவன் செத்துப்போக மற்றவன் உம்ரி பலத்தான். இவனுடைய மகன்தான் ஆகாப்; தகப்பனின் ஸ்தானத்தில் இஸ்ரவேலுக்கு ராஜாவானான். இவனைக்குறித்த முக்கிய குறிப்பு: ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். மேலும், இந்தப்பாவம் எல்லாம் கொஞ்சக் காரியம் என்பதுபோல, புறவினத்தாளாகிய யேசபேலை விவாகம் பண்ணினதுமல்லாமல், கர்த்தரைவிட்டு பாகாலைச் சேவிக்க ஆரம்பித்தான். ஏற்கனவே தேவனைச் சேவிப்பதில் பின்நின்ற ஒருவனாயிருக்கும்போது, அவன் தெரிந்தெடுத்த விவாக துணை அவனை தேவனைவிட்டு முற்றிலுமாகப் பிரித்துப் போட்டாள். அவனும் அவள் சொற்கேட்டு கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய தன்னை விற்றுப்போட்டான். ஆனால் இதன் விளைவை 1இராஜா.21:20-24 வரை வாசிக்கலாம். தேவனுடைய தீர்ப்பைக் கேட்ட ஆகாப் தன்னைத் தாழ்த்தியதால், தீர்ப்பு மாறவில்லை, அது அவன் மகன் நாட்களில் நடந்தேறியது (2இராஜா.9:30-37).
ஆன்று ஆகாபின் விழுகைக்கு தூண்டுதலாயிருந்தவள் யேசபேல்; இன்று நாம் தேவனை விட்டு சுயவழி செல்ல நமக்குத் தூண்டுதலாய் இருப்பது என்ன? அல்லது யார்? தேவனுக்கு விரோதமான பாவ வழியிலிருந்து நம்மை மீட்டெடுத்த இயேசுவின் இரத்தத்திற்கு இன்று நாம் கொடுத்திருக்கும் மதிப்பு என்ன? எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கின்ற வேத வாக்கியத்திற்குக் கீழ்ப்படிந்து தேவனைப் பிரியப்படுத்தி அவரைச் சேவிப்பதைத் தவிர நமக்கு வேறென்ன வேண்டும்? தேவனைத் துக்கப்படுத்தாதிருப்போமாக. ஆகாபின் பாவம் சந்ததியைத் தொடர்ந்தது. இன்று நமது காரியம் என்ன? தேவனுக்கு விரோதமாக அவருடனான உறவிலிருந்து என்னை பிரிக்கின்ற காரியம் என்ன?
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, எங்கள் சுயவழியில் செல்லாமல் உமக்கு பிரியமானதைச் செய்து உம்முடைய சித்தம் எங்கள் வாழ்வில் நிறைவேற கிருபை செய்யும். ஆமென்.