எச்சரிப்பின்றி தேவன் எதுவும் செய்யார்

தியானம்: 2025 நவம்பர் 3 திங்கள் | வேதவாசிப்பு: 2இராஜா.17:1-23

YouTube video

பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பி, …. என் கட்டளைகளையும் கைக்கொள்ளுங்கள் என்று …எச்சரித்துக் கொண்டிருந்தார் (2இராஜாக்கள்; 17:13).

கொடூரங்கள் சம்பவிக்கும்போதும், தனிப்பட்ட ரீதியில் துன்பங்கள் நெருக்கும்போதும் பல கேள்விகள் நமக்குள் எழத்தான் செய்கின்றன. அந்த சமயங்களில் சுய நியாயங்களை நாம் எடுத்துரைப்பதுண்டு. அதாவது, மறைமுகமாக நாம் தேவனுக்கு விரோதமாக முறுமுறுக்கிறோம் என்பதை ஏன் சிந்திப்பதில்லை. ஒரு எச்சரிப்போ, ஆலோசனையோ தராமல் நமது தேவன் எந்தவொரு காரியத்தையும் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம், அவருடைய ஓங்கிய புயத்தின் வல்லமைகளை ருசிபார்த்த ஜனம், சுதந்திர பூமியின் காற்றை சுவாசித்த ஜனம், சத்துருக்களுடன் போராடி தேவனுடைய பராக்கிரமத்திற்குச் சாட்சியாய் நின்றிருந்த ஜனம், கர்த்தராலேயே தள்ளப்பட்டுப்போனது. “கர்த்தர் இஸ்ரவேலின் மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்” (2ராஜா.17:18). வடராஜ்யம் சிதறடிக்கப்பட்டது. இது திடீரென நடக்கவில்லை. ஏற்கனவே அநேக தடவைகள் எச்சரித்திருந்தும், தேவன் இஸ்ரவேலுக்கு இறுதியில் மூன்று தருணங்களைக் கொடுத்திருந்தார் (15:19,29, 17:23). முதல் தடவை அசீரியாவின் வருகை எச்சரிப்பாக இருந்தது. இரண்டாம் தடவை சில குடிகளைச் சிறைப்பிடித்துக் கொண்டு போனார்கள். மூன்றாவது தடவை வந்த அசீரியர் இஸ்ரவேலை முற்றிலும் அழித்துப்போட்டு, அநேகரைச் சிறைப்பிடித்தும் சென்றுவிட்டார்கள். வடராஜ்யம் முடிந்தது. தேவனுக்கு விரோதமாக இஸ்ரவேல் செய்தவற்றின் தொகுப்பை இன்று வாசித்தோம். (யூதாவை தேவன் தக்கவைத்திருந்தாலும், அவர்களும் பின்னர் பாபிலோனிடம் கொடுக்கப்பட்டனர்).

நமது ஆண்டவர் அநியாயமாய் தண்டிக்கிறவரும் அல்ல; எச்சரிக்காமல் எதையும் செய்கிறவரும் அல்ல. பார்வோனுக்கே எச்சரிப்புக் கொடுத்தவர் தமது பிள்ளைகளுக்கு அநீதி செய்வாரா? கர்த்தருக்கு விரோதமாக நடந்தால் என்னவாகும் என்று இஸ்ரவேலுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவர்கள் கர்த்தருக்குப் விரோதமாக தங்களைச் சுற்றிலும் இருந்தவர்களைப் பின்பற்றி சோரம்போனார்கள். இப்போது என்ன சொல்லுவோம்! இஸ்ரவேலைக் கர்த்தர் கைவிட்டாரா? இஸ்ரவேல் கர்த்தரைக் கைவிட்டதா? இன்று நம்மைக் குறித்து என்ன முடிவுக்கு வரப்போகிறோம். தேவனுக்காக வாழ அல்லது எனக்கு நானே சுயம் சாக தீர்மானிப்பேனா? அல்லது நாலும் சொல்லுகின்ற இந்த உலகின் பின்னே போவேனா? கர்த்தர் சகலத்தையும் எழுதி நமது கைகளில் கொடுத்திருக்கிறார். கீழ்ப்படிந்தால் மேல்படி நிச்சயம். கீழ்ப்படியாவிட்டால், அவருடைய தண்டனைக்கு எப்படி தப்பித்துக்கொள்வோம்? அவருக்கே சாக்குச் சொல்லுவது எப்படி?

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, என்வாழ்வில் நீர் தரும் தருணங்களையும் எச்சரிப்புகளையும் கண்டு மனந்திரும்ப உதவி செய்யும். ஆமென்.