அபியா ராஜா
தியானம்: 2025 நவம்பர் 5 புதன் | வேதவாசிப்பு: 2நாளாகமம் 13:1-22

எங்களுக்கோ கர்த்தரே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை… (2நாளாகமம் 13:10).
எவ்வளவு காலம் வாழுகிறோம் என்பதல்ல; எப்படி வாழுகிறோம் என்பதே காரியம். நாம் எப்படிப்பட்டவர்களாயினும், நமது செயல்கள் நிச்சயம் நினைவு கூரப்படும். அது அடுத்த சந்ததிக்கு பலனுள்ளதாய் இருக்கவேண்டுமென்று வாஞ்சித்து வாழுவது நல்லது அல்லவா.
ரெகொபெயாம் மரித்துப்போக, மகன் அபியா யூதாவுக்கு ராஜாவானான். எருசலேமில் இவனுடைய ஆட்சிகாலம் மூன்று வருஷங்கள் மாத்திரமே. 1இராஜா.15ம் அதிகாரத்தில் அபியா, அபியாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இவனைக் குறித்து, “அவன் இருதயம் …தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உத்தமமாயிருக்கவில்லை” (வச.3) என்று இவனைக்குறித்து எதிர்மறையாய் எழுதப்பட்டுள்ளது. 2நாளா.13ல் இவனுடைய நல்ல பக்கங்களைக் காணலாம். இவனுக்கும், இஸ்ரவேலின் ராஜா யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்தது. அபியாவின் வீரரைவிட இரண்டு மடங்கு யுத்தவீரரை யெரொபெயாம் எதிராக நிறுத்தியபோதும், இஸ்ரவேலரும் யெரொபெயாமும், அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிந்தோடினார்கள். இது எப்படி முடிந்தது? இஸ்ரவேலுக்கும் ராஜாவுக்கும் முன்பாக அபியா ஒரு மலையின்மீது ஏறி நின்று கர்த்தரை முன் வைத்துச் சாவாலிட்டதுதான் அபியாவைக் குறித்த நேர்மறையான முக்கிய குறிப்பாகும் (வச.4-12). “எங்களுக்கோ கர்த்தரே தேவன், நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை” என்றும், “இதோ, தேவன் எங்கள் சேனாபதியாய் எங்களோடே கூடஇருக்கிறார்” என்றும் அபியா சூளுரைத்தான் என்றால், நெருக்கத்தில் தைரியமாக அவன் எப்படிக் கர்த்தரைச் சார்ந்திருந்தான் என்பது விளங்குகிறது. மேலும், அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவன் நல்லவனா கெட்டவனா என்றில்லாமல் தம்மை நோக்கிக் கூப்பிட்ட யூதாவுக்காக அபியாவுக்காக கர்த்தர் யுத்தம் பண்ணினார்.
அபியா பிரபல்யம் இல்லாதவன் என்றாலும், நெருக்கத்தில் கர்த்தரிடம் முறு முறுக்காமல், அவரை மேன்மைப்படுத்தினான். அவன் தாவீதின் வழியில் நடக்காதிருந்தும், கர்த்தரும் அவன் கூப்பிடுதலுக்குச் செவிகொடுத்தார். இப்படியிருக்க, இன்று இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட பிள்ளைகள் நமது கூப்பிடுதலுக்கு அவர் செவிகொடுக்காமல் விடுவாரா? விசுவாசிகள் துன்புறுத்தப்பட்டு, பேதுரு சிறைவைக்கப்பட்டிருந்தபோது, “அநேகர் கூடி ஜெபம் பண்ணிக்கொண்டிருக்க”, கட்டியிருந்த சங்கிலி விழவில்லையா? சிறைச்சாலையின் காவற்கதவுகள் திறக்கவில்லையா? அபியா ராஜாவே “கர்த்தரே தேவன்” என்று அறிக்கையிட்டிருக்க, நாளை மாறிப்போகும் அற்ப பிரச்சனைகளைக்கண்டு நாம் பயப்படுவது ஏன்? “யூதா புத்திரரோ தங்கள் கர்த்தரைச் சார்ந்து கொண்டதினால் மேற்கொண்டார்கள்.” இன்று நம்மைக் குறித்து சொல்லப்படக்கூடிய சாட்சி என்ன?
ஜெபம்: தேவனே, எந்த நிலையிலும் உம்மையே சார்ந்துகொள்ளவும் உமக்கு சாட்சியாக வாழவும் எங்களை ஒப்புவிக்கிறோம். ஆமென்.