ஆசா இராஜா

தியானம்: 2025 நவம்பர் 6 வியாழன் | வேதவாசிப்பு: 2நாளாகமம் 15:1-19

YouTube video

நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால் உங்களுக்கு வெளிப்படுவார் (2நாளாகமம் 15:2).

நாம் உலகரீதியான ராஜாக்களாக இல்லாவிட்டாலும், நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கிய தேவனுக்கு முன்பாக நாம் ராஜாக்கள்தான். ஆகவே அன்றைய ராஜாக்களைக் குறித்த இத் தியானங்கள் நம்மை சிந்திக்க வைக்கட்டும். ஏறத்தாழ ராஜாக்களின் முடிவு துக்ககரமானதாக இருந்தாலும், யூதாவை ஆண்ட பல ராஜாக்களின் வாழ்வில் பல நல்ல படிப்பினைகள் உண்டு. நம்மை அந்த இடத்தில் நிறுத்தி தியானிப்போம்.

அபியாவுக்கு பின் அவனது மகனாகிய ஆசா யூதாவுக்கு ராஜாவானான். “ஆசா தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.” இதுவே ஆசாவைக்குறித்த முதற்குறிப்பு. அந்நிய தேவர்களின் பலி பீடங்களை மேடைகளை சிலைகளையெல்லாம் அழித்தான். அடுத்ததாக, “பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப் பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் மக்களுக்குக் கற்பித்தான். அதாவது கர்த்தரின் வார்த்தைக்கு நேராகத் திரும்பினான். முக்கியமான குறிப்பு, அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின தனது தாயான மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு விலக்கிப்போட்டு, அவளுடைய சகலத்தையும் சுட்டெரித்துப் போட்டான். மேலும், எத்தியோப்பியனாகிய சேரா எதிர்கொண்டு வந்தபோது, தன்னிடமிருந்த பலத்தை நம்பாமல், ஆசா கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, “எங்களுக்குத் துணை நில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் வந்தோம்” என்று ஜெபித்தான். கர்த்தரும் அவர்களுக்கு ஜெயத்தைக் கொடுத்தார்.

ஆசாவிடம் பராக்கிரமசாலிகளான வீரர்கள் ஏராளமாக இருந்தனர். என்றாலும், அவன் தன் சுயபெலத்தில் சார்ந்திராமல், தன்னைத் தாழ்த்தி கர்த்தரைத் தேடினான். ஆம், நம்மைத் தாழ்த்தி, கர்த்தரோடிருந்தால் அவர் நம்மோடிருப்பார், நமக்காக வெளிப்படுவார். அன்று ஆசா தன் பெலத்தை நம்பி பெருமையுடன் எத்தியோப்பியனை எதிர்க்கப் புறப்பட்டிருந்தால் ஜெயத்தைப் பெற்றிருக்கமுடியாது. மேலும், கர்த்தர் வெறுக்கின்ற அத்தனையையும் ஆசா வெறுமனே வீசியெறியவில்லை, சுட்டெரித்துப்போட்டான். தன் தாய் என்றும் பாராமல் அவளையும் தள்ளினான். இன்று நாம் கர்த்தர் வெறுக்கின்ற காரியங்கள் எவற்றை இன்னமும் நமக்குள் மறைத்து வைத்திருக்கிறோம். உறவுகளைக் கண்டிக்கவோ தள்ளிடவோ மனதின்றி, அவர்களோடு இசைந்து நின்று தேவனைத் துக்கப்படுத்துகிறோம். சிந்திப்போம். ஆசா கர்த்தரைச் சார்ந்து நின்றான். கர்த்தர் அவனுக்கு ஜெயத்தைக் கொடுத்தார். இன்று நமது தோல்விகளுக்குக் காரணம் என்ன?

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, பலமுள்ளவனுக்காகிலும் பலமில்லாதவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லோசன காரியம். ஆசாவைப்போல எங்கள் வாழ்க்கையில் அதை நாங்கள் அப்பியாசப்படுத்திட உதவி செய்யும். ஆமென்.