பூட்டப்பட்ட ஆலயக் கதவுகள்

தியானம்: 2025 நவம்பர் 11 செவ்வாய் | வேதவாசிப்பு: 2 நாளாகமம் 29:1-15

YouTube video

ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம் (1கொரி.3:17).

அன்று கர்த்தருடைய ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தின் கிருபாசனத்திலிருந்து தேவபிரசன்னம் இஸ்ரவேலை நடத்தி வந்தது. சாலொமோன் ராஜா இதைக் கட்டி முடித்தபோது மேகமானது அந்த ஆலயத்தை நிரப்பிற்று. கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று (1இராஜா.8:10-11) என்றும் வாசிக்கிறோம். ஆம், ஆலயம் அங்கீகரிக்கப்பட்டது.

ஆனால் ராஜாக்கள் ஆளத்தொடங்கிய பிற்பாடு, பலர் இந்த ஆலயத்தைக் கனப்படுத்தாமல் விட்டுவிட்டார்கள். கர்த்தரைத் தேடுவதை விடுத்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொன் வெள்ளியினால் செய்யப்பட்ட பணிமுட்டுகளை புறவின ராஜாக்களுக்குக் கொடுத்து, அவர்களிடம் உதவி கேட்டு கர்த்தரைக் கோபப்படுத்தினார்கள். அந்தவரிசையில் மிக முக்கியமானவன் ஆகாஸ்ராஜா. தான் நெருக்கப்பட்ட வேளையிலும் கர்த்தரைத் தேடாமல், சீரியரின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணைசெய்வதுபோல தனக்கும் துணைசெய்யும் என்று நம்பி, அவற்றுக்குப் பலியிட்டான். “தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைத் துண்டுதுண்டாக்கி, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைப் பூட்டிப்போட்டு, எருசலேமில் பலிபீடங்களை உண்டுபண்ணி… கர்த்தருக்குக் கோபமூட்டினான்” (2நாளா.28:22-25). தன்னை முறியடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்குப் பலியிட்டான். இது, அவனும் இஸ்ரவேல் அனைத்தும் நாசமாகிறதற்கு ஏதுவாயிற்று. ஆம், கர்த்தருடைய ஆலயக் கதவுகள் பூட்டப்பட்டாயிற்று. தேவனுடைய பிரசன்னத்தை ஆகாஸ் தடுத்துவிட்டான். கர்த்தருடைய பிரசன்னம், அவரது வார்த்தை இல்லாத எதுவும் செத்ததற்குச் சமமல்லவா!

மக்களுடைய கீழ்ப்படியாமையினால் காலப்போக்கில் அந்த ஆலயம் இடிக்கப்பட்டுப்போயிற்று. இன்று தேவன் தங்கி வாழும் ஆலயங்களாக தமது பிள்ளைகளாகிய நம்மையே காண்கிறார். அன்று ஆகாஸ் அந்நிய தெய்வங்களை நாடி கர்த்தருடைய ஆலய கதவுகளை அடைத்துபோட்டான். தேவ பிரசன்னமும் தடுக்கப்பட்டு, மக்களும் தொழுதுகொள்ள முடியாது போனது. இன்று தேவன் தங்கி வாழும் ஆலயமான நமது இருதயத்தின் கதவுகள் கர்த்தருக்காக திறந்திருக்கிறதா? அல்லது, உலகத்தையும் அந்நிய காரியங்களையும் நாடி, கர்த்தரை ஒதுக்கிவிட்டு, இருதயத்தின் கதவுகளை நாமே அடைத்துப்போட்டுள்ளோமா? கர்த்தரையே சார்ந்து, எல்லா நிலையிலும் அவர் நம்மோடிருப்பார் என நம்பி, எவ்வித நெருக்கங்களிலும் அவரில் மாத்திரமே நிலைத்து நிற்க நாம் தடுமாறுவது ஏன்? நாம் நிச்சயமாக அந்நிய தெய்வங்களை நாடமாட்டோம்; ஆனால் கர்த்தரை முழுதாக நம்பமுடியாமல் போவது ஏன்? நமது கதவுகள் அடைக்கப்பட்டால் பிற மக்களும் கர்த்தரை நம்மில் காணவும் முடியாதே!

ஜெபம்: சர்வ வல்லவரே, என் இருதயமாகிய ஆலயக்கதவினைத் திறந்து, நீர் தங்கும் ஆலயமாக மாற்றியருளும். ஆமென்.