பிரதியுத்தரம்
தியானம்: 2025 நவம்பர் 18 செவ்வாய் | வேதவாசிப்பு: 2 இராஜா.18:28-36; 2நாளா.32:9-22

ஒரு வார்த்தையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாக இருந்தார்கள் (2 இராஜா. 18:36).
பேசாமல் அமைதியாயிருப்பது மனிதராகிய நமக்குக் கடினமான விஷயமேதான். நமக்கு எதிராக சவாலிடுகிறவர்கள், குற்றப்படுத்திப் பேசுகிறவர்கள் (குற்றம் நமதாகவுமிருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்) கோபமாக சத்தமிடுவது வழக்கம். இவர்களின் முன்னிலையில் நாமும் சத்தமிட்டால், நமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இன்னொரு புறத்தில், நாம் நல்லது என்று செய்திருக்க, அதைப் புரிந்துகொள்ளாமலும் அவர்கள் நம்மை வைய இடமுண்டு. எதுவானாலும், கிறிஸ்துவின் பிள்ளைகள் நாம் மறு உத்தரவு கொடுப்பது எப்படி?
எசேக்கியாவின் பதினான்காம் வருஷத்திலே அசீரியா ராஜா யூதாவுக்கு எதிராக வந்தான். எசேக்கியா அவனுக்குக் காணிக்கைகளைக் கொடுத்து திரும்பி போய்விடும்படி கேட்டும், அவன் திரும்பவில்லை. பதிலுக்கு, மக்களையும் ராஜாவையும் பேசியே சோர்ந்துபோகப்பண்ணும் வியூகத்தைக் கடைப்பிடித்தான். தனது கைக்கு எந்த தேவர்களாலும் யூதாவைத் தப்புவிக்க முடியாது என்று ஜனங்கள் கேட்க உரத்து பேசினான். கர்த்தர் தப்புவிப்பார்’ என்று எசேக்கியா கூறி ஏமாற்றுவான் என்றும் சொன்னான். ஜனங்களோ ராஜா சொன்னபடி மறுஉத்தரவு எதுவும் கொடுக்காமல் அமைதியாயிருந்தார்கள். ராஜா தன்னையும் திடப்படுத்தி, “நமக்குத் துணை நின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் கர்த்தர்” என்று மக்களையும் திடப்படுத்தினான். அசீரியா ராஜா இஸ்ரவேலின் தேவனை நிந்திக்க ஆரம்பித்தபோதும் எசேக்கியாவும் ஏசாயாவும் தங்கள் சுயபெலத்தில் எதுவும் செய்யவில்லை; மாறாக, வானத்தை நோக்கி அபயமிட்டார்கள். “அப்பொழுது” கர்த்தரின் கரம் உயர்ந்தது. அன்று இராத்திரியிலே கர்த்தருடைய தூதன் புறப்பட்டு அசீரியரின் பாளயத்தில் 1,85,000 பேரைச் சங்கரித்தான். கர்த்தர் யுத்தத்தைச் செய்து முடித்தார். அசீரியன் தோற்று திரும்பினான்.
சுயத்தில் நாம் செயற்படுமளவும் தேவனுடைய கரம் உயரமுடியாது. நாம் மறுஉத்தரவு கொடுத்து எதிரியின் தொனியில் சத்தமிடுவோமானால், நமது நீதியை நாமே நிலைநாட்டுவது போலாகும். “நானே பேசவா, அல்லது தேவ கரத்தில் விட்டுவிடவா” என்ற தடுமாற்றம் நிச்சயம் வரும். அதிலும் நாம் செய்த தவறு தெரியாதபோது, இன்னும் அதிகமாக நமக்குள் ஒரு வேகம் எழும்பும். வாழ்வில் எவ்வேளையிலும் நாம் ஏறிட்டு பார்க்கவேண்டியது நமது ஆண்டவரையே! அடிக்கப்பட்டவராய் யூதரின் முன்னே நிறுத்தப்பட்டபோது, இயேசு அமைதியாகவே நின்றிருந்தார் (மத்.26:63). யோவான் எழுதியபடி (யோவா.18:36,37; 19:11) பிலாத்துவிற்கு சில உத்தரவுகளை சொன்னாலும், எந்த இடத்திலும் தாம் குற்றமற்றவர் என்று இயேசு தமக்காக வழக்காடவில்லை. எதுவானாலும் கர்த்தரிடத்தில் விட்டுவிட்டு, அமைதியாக காத்திருக்கப் பழகுவோமா?
ஜெபம்: கர்த்தாவே, எங்கள் காரியங்களுக்காக நாங்களே வழக்காடுகிறவர்களாக இராமல், உமது கரத்தில் கொடுத்து அமைதியாக காத்திருக்க உமது பெலன் தாரும். ஆமென்.