யோசியா ராஜா
தியானம்: 2025 நவம்பர் 23 ஞாயிறு | வேதவாசிப்பு: 2இராஜா.22:1-13; 2நாளா.34:1-21

அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான் (2இராஜா.22:2).
கர்த்தர் சொன்னால், சொன்னதைச் சொன்னபடி செய்வார் என்பதை நாம் விசுவாசிக்கிறோம்; ஆனால், சந்தர்ப்பங்கள் நெருக்கும்போதும் அந்த விசுவாசத்தில் உறுதியாய் நிற்கிறோமா என்பதே கேள்வி. “நான் உன்னோடு கூடவே இருப்பேன்”, “நான் பெரியகாரியம் செய்வேன்” என்றெல்லாம் கர்த்தருடைய ஏராளமான வாக்குகளை நாம் மனதில் வைத்திருக்கிறோம். ஆனால், அதை நம்பி, கர்த்தர் செய்வாரென எதிர்பார்த்து, காத்திருக்கிறோமா? கண்டிப்புகள், தண்டனைகள்கூட கர்த்தர் சொன்னதைச் செய்வார்; ஆனால் ஒருபோதும் அவர் திடீரென நம்மைத் தண்டிப்பதுமில்லை, தள்ளிவிடுவதுமில்லை. நாம் மனந்திரும்ப அவர் நமக்கு ஏராளமான தருணத்தைத் தருகிறார். பார்வோனுக்கு என்ன செய்தார் என்பதையும், இஸ்ரவேலுக்கு என்ன செய்தார் என்பதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
முன் அறிவித்தபடி, ஏறத்தாழ 290 ஆண்டுகளுக்குப் பின்னர், யோசியா ராஜாவானான். அப்போது அவனுக்கு வயது எட்டு. இளமையிலேயே இவன் கர்த்தரைத் தேட ஆரம்பித்தான். இவனுடைய தகப்பன் ஆமோனையும், பேரன் மனாசேயும் போலல்லாமல், தன் பூட்டனான எசேக்கியா ராஜாவைப்போலவே பல வழிகளிலும் இவன் செயற்பட்டான். இந்த இருவரும் தேவனுடன் நல்லுறவில் இருந்தார்கள்; மக்களை தேவனது வழிகளில் நடத்த மிகவும் பிரயாசப்பட்டார்கள். இருண்ட காலத்திலும், அதாவது கீழ்ப்படியாத அரசர்கள் மத்தியிலும், இவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்னிலையில் தங்கள் கீழ்ப்படிவைக் காட்டினார்கள். தனது ராஜ்யத்தில் ஆவிக்குரிய பஞ்சம் நிறையவே இருப்பதை யோசியா தன் இளவயதிலேயே உணர்ந்தான். தேவனுடைய ஆராதனைக்குப் புறம்பான சகலத்தையும் அழித்துப்போட தாமதமின்றி செயற்பட்டவன் தான் யோசியா. தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்த இவன், சகல விக்கிரக ஆராதனைகளையும் ஒழித்து, அவற்றின் பூசாரிகளையும் அழித்துப்போட்டான். மொத் தத்தில் யூதாவையும் எருசலேமையும் இவன் சுத்திகரித்தான். அதாவது தேவனுடைய மனுஷன் சொன்னபடியே யோசியா செய்து முடித்தான் (1ராஜா.13:2).
1இராஜா.13:2 இல் கர்த்தர் சொன்னது சொன்னபடியே 2இராஜா.22:1 இல் நிறைவேறியது. ஏறத்தாழ 290 ஆண்டுகள் இடைவெளி. இஸ்ரவேலுக்கு நடந்ததையும் கண்ட யூதா, தனக்குக் கொடுக்கப்பட்ட கால இடைவெளியைப் பயன்படுத்தி மனந்திரும்பவில்லை. கர்த்தரோ பொறுமையாய் இருந்தார். கர்த்தர் எதையும் சொல்லாமல், நேரம் கொடுக்காமல் செய்வதில்லை. இன்று நம் மத்தியில் நடப்பவைகூட முன் அறிவிக்கப்பட்டவையே. இன்று ஆண்டவராகிய இயேசு தாமே பேசிச் சொல்லிய வார்த்தைகளைக் கொண்டிருக்கிற நாம், அவற்றை உணர்ந்து மனந்திரும்பி, தேவனைச் சார்ந்து ஜீவிக்கிறோமா?
ஜெபம்: வாக்குமாறாத ஆண்டவரே, வானமும் பூமியும் அழிந்துப்போனாலும் என்றென்றும் ஒழிந்துப் போகாத ஜீவனுள்ள வார்த்தைகளுக்காக நன்றி செலுத்துகிறோம். ஆமென்.