யூதாவும் சிறைப்பட்டது!
தியானம்: 2025 நவம்பர் 27 வியாழன் | வேதவாசிப்பு: 2 நாளாகமம் 36:1-21

கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு… (2நாளாகமம் 36:21).
யோசியாவிற்குப் பின்னர் யோவகாஸ் ராஜாவானபோது, எகிப்தியர் வந்து இவனைத்தள்ளி இவன் தம்பியை ராஜாவாக்கிற்று. இவனும் தேவனுக்கு விரோதமாக நடந்தான். இதன் பின்னர் கர்த்தர் சொன்னபடியே பாபிலோன் மூன்று தடவைகளாக எருசலேமுக்குள் நுழைந்தது (2நாளா. 36:6,10,18). யோயாக்கீமின் பின் சிதேக்கியாவின் நாட்களுடன் யூதா சிறைப்பட்டது. பாபிலோன் வருவான், நகரத்திலே தரிக்கிறவன் சாவான், அவனுடன் புறப்பட்டுப் போகிறவன் பிழைப்பான் என்று எரேமியா மூலம் கர்த்தர் சொன்னதை சிதேக்கியா கேட்கவில்லை. இறுதியில் பாபிலோன் தேவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, பணிமுட்டுகளையும் கைப்பற்றினான். சிதேக்கியாவின் குமாரர் கண்கள் முன்பாக வெட்டப்பட்டு, இவன் கண்களும் குருடாக்கப்பட்டு, விலங்கிடப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு போகப்பட்டான்.
இந்த சகல சம்பவங்களும் இன்று நமக்கு எச்சரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் சிந்திக்கவேண்டும். இது ராஜாக்களின் கதை என்று நம்மால் விலக்கி வைக்க முடியாது. தங்களுக்கென்று ஒரு ராஜாவைக் கேட்ட காலத்திலிருந்து ராஜாக்களின் காலமெல்லாம் நடந்தவற்றையும், அந்தந்தக் காலத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களையும், வடராஜ்யத்தின் முடிவையும், யூதா ராஜ்யத்திற்கு நடந்ததையும் சிந்திக்கும்போது நமது ஆண்டவரைக்குறித்து இரண்டு காரியங்களை நாம் கற்றுக்கொள்கிறோம். ஒன்று, ஆண்டவர் முன் அறிவிப்பு ஆலோசனையின்றி, எச்சரிப்பின்றி எதையும் செய்கிறவரே அல்ல. ஆம், அவர் சொல்லாமல் எதையும் செய்யார். இரண்டாவது, தருணம் கொடுக்காமல் (2நாளா.36:15), மனந்திரும்ப காலம் கொடுக்காமல் திடீரென தண்டிக்கிற வரும் அல்ல. அன்று சிதேக்கியா, எரேமியாவின் சொல்கேட்டு பாபிலோனுக்குப் போயிருந்தால் தப்பியிருப்பான் அல்லவா!
இன்றும் நமக்கு சகலமும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சாக்குப் போக்குச் சொல்ல இடமில்லை. கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நமக்கு அவர் ஏராளமான தருணத்தையும் எச்சரிப்பையும் தந்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் அவர் நமக்கு மனந்திரும்புதலுக்கான தருணத்தையே தருகின்றார். இப்படியிருக்க, வேதவாக்கியங்களில் அவர் முன் அறிவித்தபடியே இயேசு வரும்போது, நியாயத்தீர்ப்பின் நாளில் நாம் நிறுத்தப்படும்போது, நாம் நமது ஆண்டவரை எப்படி எதிர்கொள்வோம்? இன்று தேவன் தருகின்ற எச்சரிப்பின் வார்த்தைகளை சிந்திக்கின்றோமா? அந்த எச்சரிப்பின் வார்த்தையின் மத்தியிலும் கிருபையாக தந்துள்ள தருணங்களுக்காக அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோமா என சிந்திப்போம்.
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, உமக்கு முன்பாக கணக்கொப்புவிக்க வேண்டிய நாளிலே நாங்கள் வெட்கப்பட்டு போகாமல் எங்கள் ஜீவிய நாட்களில் எங்களை நாங்களே சோதித்து மனந்திரும்பவும் நீர் எங்களுக்கு தரும் தருணத்தை பயன்படுத்திக்கொள்ளவும் உதவி செய்யும். ஆமென்.