கர்த்தருடைய சிநேகிதனே!

தியானம்: 2025 நவம்பர் 29 சனி | வேதவாசிப்பு: யோவான் 15:10-17

YouTube video

ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார் (யாத். 33:11).

கர்த்தர் உங்களோடே பேசின அனுபவம் உங்களுக்கு உண்டா? கர்த்தர் என்னோடே பேசினார் என்று பலர் சொல்வதுண்டு. ஆரம்பத்தில் இது என்னை மிகவும் குழப்பியது. மாத்திரமல்ல, கர்த்தருடன் பேசியவர், கர்த்தரின் குரலைக் கேட்டவர் என்று சொல்லி அந்த ஊழியர்களை மிக ஆச்சரியத்துடன் பார்ப்பேன். ஒருநாள் ஒரு தாயார், தான் முதன்முதலாக கர்த்தருடைய குரலைக் கேட்டதாகச் சொன்னார். குறிப்பிட்ட ஜெபக்குழு பரிசுத்தமற்றது, வனாந்தரத்திலே அழிந்துபோன மோசேயையும் இஸ்ரவேலரையும் போன்றது, அதிலே இனிமேல் நீ பங்குபெற வேண்டாம் என்று அந்தக் குரல் சொன்னதாகக் கூறியபோது இது தேவகுரலா என்று நான் விழித்துக்கொண்டேன்.

தேவபிள்ளையே, கர்த்தர் பேசுகிறவர், அது சத்தியம். ஆனால் அவர் தம் வார்த்தைக்குப் புறம்பாகப் பேசுகிறவர் அல்ல. இன்னொருவரை வேதனைப்படுத்தி குறைசொல்லி அநியாயம் பேசுகிறவர் அல்ல. நித்தமும் அவருடைய வார்த்தையை நாம் வாசித்துத் தியானிக்கும்போது அவர் நம்மோடு பேசுகிறார். அவர் நமது உணர்வுகளுடன் பேசுகிறார். நாம் தனித்திருந்து தியானித்து ஜெபிக்கும்போது அவர் நம்மோடு பேசி நம்மை நடத்துவதை நாம் அனுபவிக்கலாம். அன்று மோசேயுடன் தேவன் முகமுகமாய் பேசினார். அது ஒரு பிரத்தியேகமான அனுபவம். மோசே பரிசுத்தன் என்பதால் தேவன் பேசவில்லை. மோசே பரிசுத்தவானுமல்ல; தேவன் மோசேயைத் தெரிந்தெடுத்திருந்தார். அதேபோல மோசேயும் முழுமனதோடு தேவனையே நம்பி அவரையே சார்ந்திருந்தார். அன்று தேவனைக் கிட்டிச்சேரவே பயப்பட்ட இஸ்ரவேலர் நடுவிலே மோசேக்குக் கிடைத்த தேவனுடைய சிநேகிதம் மோசேக்குக் கிடைத்தற்கரிய பாக்கியம் அல்லவா!

ஆனால் இன்று கர்த்தராகிய இயேசுவையும் அவருடைய வார்த்தைகளையும் அறிந்திருக்கிற நாம் யாவரும் அவருடைய சிநேகிதர் ஆகின்ற பேறு பாக்கியம் பெற்றிருக்கிறோம். அப்படியானால் அவர் நம்மோடு பேசுவாரா என்ற சந்தேகம் எதற்கு? அவர் நம்மோடு பேசவேண்டுமானால் நாமும் அவருக்கு நண்பர்களாக இருக்கவேண்டும். மோசேயைப்போல, நாமும் மெய்யாகவே ஆண்டவரை நம்பி, அவரையே சார்ந்து, அவருக்கேக் கீழ்ப்படிந்து ஜீவிக்கவேண்டும். அந்தப் பற்றுதல் நம்மிடம் உண்டா? தேவன் ஒரு நண்பனைப்போல பேசுகிறவர். நாம் பேசுவதையும் அவர் செவிகொடுக்கின்றவர். அவருக்கு உண்மையாயிருக்க அவர் பேசுவதைக் கேட்க வாஞ்சையோடு அவரது பாதத்தண்டையில் அனுதினமும் தரித்திருப்போமாக. கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் (1சாமு.3:9).

ஜெபம்: எங்களை சிநேகிக்கின்ற ஆண்டவரே, உம்மையே நம்புகிறோம். எங்களோடே பேசும், உம்முடைய வார்த்தைகளை எங்களுக்குத்தாரும். இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.