இந்த நாளிலிருந்து!
தியானம்: 2025 நவம்பர் 30 ஞாயிறு | வேதவாசிப்பு: யாத்திராகமம் 33:12-17

உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும் (யாத்திராகமம் 33:15).
மோசே செய்த ஜெபங்கள் எல்லாவற்றிலும் முக்கியமான இரண்டு ஜெபங்கள் எவருடைய இருதயத்தையும் உடைக்கக்கூடிய ஜெபங்கள் என்று சொல்லலாம். ஒன்று, தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் (யாத்.32:32). யாராவது இன்னொருவரின் நிமித்தம் தான் தள்ளப்பட்டுப் போவதை விரும்புவானா? அடுத்தது, மேலே நாம் காண்கின்ற ஜெபமானது…. இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும். இது ஒரு உறுதியான ஜெபம். 1991ஆம் ஆண்டு, இதே ஜெபத்தை ஒரு சகோதரி செய்ததைக் கேட்டேன். இன்னுமொரு புதிய வருடத்திற்குள் என்னைக் கொண்டுபோகாதிரும் என்று அவள் ஜெபித்தாள். அதன் அர்த்தம் என்னவென்று கேட்டபோது, தேவனுடைய சமுகம் மாத்திரம் என்னோடே வராவிட்டால், ஆண்டவர் இப்போதே என்னை எடுத்துக்கொள்ளட்டும் என்று சொன்னாள்.
பலத்த வல்லமையான காரியங்களைச் செய்யும்படி கர்த்தர் மோசேக்கு அதிகாரத்தையும் கிருபையும் வல்லமையும் கொடுத்திருந்தார். அதற்காக மோசே தற்பெருமை கொள்ளவுமில்லை; தேவன் தந்த வல்லமையை அதிகாரத்தை அவருடைய வார்த்தைக்கு மாறாக அல்லது புறம்பாக பிரயோகிக்கவுமில்லை. என்ன இருந்தாலும் எப்போதும் தேவனுடைய சமுகத்தை நாடிய ஒரு உத்தமதலைவன்தான் மோசே. அப்படியானால் தேவசமுகத்தின் பெறுமதிப்பு, அதன் அவசியம் எப்படிப்பட்டது? எப்பொழுதும் தேவனுடைய சமுகத்தையே நாடிய மோசேகூட கோபத்தினால் ஆத்திரத்தினால், தேவன் தன்னோடேகூட இருக்கிறார் என்பதை மறந்தவராய், மலையோடு பேசு, அது தண்ணீர் கொடுக்கும் என்று தேவன் சொன்னதற்கு மாறாக மலையை அடித்ததால், அவர் கானானுக்குப் போகும் மேன்மையான ஆசீர்வாதத்தை இழந்தது நமக்கெல்லாம் பெரிய எச்சரிக்கையாகவே இருக்கிறது.
ஒரு இமைப்பொழுது தேவசமுகத்திலிருந்து நாம் விலகினோமானால் சத்துருவானவன் நம்மை கீழே வீழ்த்திப்போடுவான். நமக்கு வருகின்ற பல கஷ்டங்களுக்குக் காரணம் தேவசமுகம் நம்மோடு இல்லாததுதான். கர்த்தரைவிட்டுப் பின்வாங்கியபடியால் கர்த்தர் உங்களோடே இரார் என்று சொன்னதையும் கேளாமல் மலையேறிய இஸ்ரவேலர் முறியடிக்கப்பட்டதை நாம் மறந்துபோகலாமோ? (எண்.14:41-45). மோசே செய்த இந்த ஜெபத்தை, அந்த சகோதரி ஏறெடுத்த மனநிலையோடு உமக்குச் சித்தமிராவிட்டால் என்னை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும் என்ற ஜெபத்தை ஏறெடுத்து ஒப்புக்கொடுக்க நாம் தயாரா?
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, உம்மைவிட்டு பின்வாங்கிப்போகாமலும், உமது சமுகத்திலிருந்து விலகிப்போகாதிருக்கும் கிருபையை அனுதினமும் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.