திரள் கூட்டமாகிய ஜனங்கள்
தியானம்: 2025 டிசம்பர் 2 செவ்வாய் | வேதவாசிப்பு: வெளிப்.7:9-17

அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத் தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக் குட்டியானவருக்கும் உண்டாவதாக (வெளி.7:10).
தேவாதி தேவன் ஒரு மனுஷனாக உலகில் வந்துதித்ததை வருடந்தோறும் நினைவுகூர்ந்து கொண்டாடுகிற நாம், அவருடைய இரண்டாவதும் இறுதியுமான வருகையைக்குறித்தும் சற்று விழிப்புள்ளவர்களாக இருப்பது அவசியம். நமது இன்றைய தியான வசனம் ஆரம்பிக்கிறதான “அவர்கள் என்ற கூட்டத்தில் நாம் இருப்போமா அல்லது இருக்கிறோமா” என்பதைச் சிந்தித்து, மனந்திரும்பி வாழவே இடமளிக்காதபடி உலகம் இன்று ஆண்டவரின் பிள்ளைகளைக்கூட திசைமாற்றி இழுத்து சென்றுகொண்டிருக்கிறது. இதற்குள் நாம் அகப்படக் கூடாது.
வேதாகமத்தின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தலில் திரளான ஜனக்கூட்டம் கூடி நிற்கும் காட்சியை காண்கிறோம். ஆனால், இந்த வெளிப்பாடு ஆதியாகம புத்தகத்திலேயே கொடுக்கப்பட்டுவிட்டது என்பது நம்மைச் சிந்திக்கவைக்கட்டும். யாக்கோபு தன் குமாரரை அழைத்து, கடைசி நாட்களில் அவர்களுக்கு நேரிடும் காரியங்களை ஒவ்வொருவருக்கும் அறிவித்தபோது, யூதாவை நோக்கி, “சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவை விட்டு நீங்குவதும் இல்லை, … ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்” (ஆதி.49:10) என்கிறார். உலகின் சகல நாடுகள் ஜாதிகளிலுமிருந்து ஜனங்கள் தேவன் அண்டையில் ஒன்று கூடியிருப்பது என்பது நமது கற்பனைக்கும் எட்டாத புல்லரிக்கச் செய்யும் ஒரு காட்சி. எத்தனை ஆச்சரியம்! மாத்திரமல்ல, கடைசி நாட்களைக் குறித்து இயேசு: “அவர் தம்முடைய தூதர்களை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களைப் பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனை மட்டுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்” என்றார் (மாற்கு 13:27). ஆக, நிச்சயம் கடைசியில் ஒன்றுகூட்டப்பட்டு, ஆட்டுக்குட்டியானவரைத் துதித்து ஆர்ப்பரிக்கும் ஜனக்கூட்டத்தில் நான் இருப்பேனா! “இருப்பேன்” என்ற நிச்சயத்தைத் தருவதற்கே இயேசு என்னைப்போல ஒரு மனிதனாக உலகில் வந்து பிறந்தார்.
பாவத்திலே உற்பத்தியான என் பாவத்தைப் பரிகரித்து, தேவ பிரசன்னத்திலிருந்து துரத்திவிடப்பட்ட என்னை மறுபடியும் பிதாவுடன் ஒப்புரவாக்குவதற்காக, தேவ கோபத்தைச் சமாதானப்படுத்தும்படி தமது பரிசுத்த இரத்தத்தையே சிந்தி, என்னை மீட்டெடுத்து, பிதாவுடன் என்னை ஒப்புரவாக்கின இயேசுவை இவ்வுலகில் என் இரட்சகராக நான் கொண்டாடவில்லையென்றால், அந்த திரள் கூட்டத்தில் எனது தலைதெரிவது சந்தேகம்தான். ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தல்வரைக்கும் நமக்கு உறுதிப்படுத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில் நாம் இருக்கவேண்டும் என்றால், நமது இரட்சகராகிய இயேசு நமது இருதயத்தில் வர வேண்டும். இது சமய சடங்காசாரம் அல்ல; இயேசுவுடனான வாழ்வு. அவருடனான உறவு.
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, திரள்கூட்டமாகிய தேவஜனங்கள் ஆராதிக்கிற கூட்டத்தில் அடியானும் இருக்க ஆயத்தமாய் நான் காணப்பட உதவும். ஆமென்.