தாமதம், நடக்காது என்பதல்ல!
தியானம்: 2025 டிசம்பர் 3 புதன் | வேதவாசிப்பு: சங்கீதம் 90:1-12

உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள் போலவும் இராச்சாமம் போலவும் இருக்கிறது (சங்.90:4).
கர்த்தர் தாமதிப்பது போலவும், அல்லது இனி எதுவும் நடக்காது என்பது போலவும் காரியங்கள் தோன்றும்போது நாம் மனமுடைந்து விடுவதுண்டு. நாம் எதிர்பார்த்த சில விஷயங்கள் பதில் இன்றியே ஆண்டுகள் கடந்துபோவது போல தெரியலாம். என்றாலும் மனம் தளரக்கூடாது.
தாமே தமக்கென்று படைத்த மனிதன், பாவத்தில் விழுந்தபோது, தேவனாகிய கர்த்தர், அதற்குக் காரணனான சாத்தானிடம்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்” என்று சொன்னார். ஏவாள் தன் முதற்பிள்ளையைப் பெற்றெடுத்து, “கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்” என்று சொல்லி அவனுக்கு காயீன் என்று பெயரிட்டபோது, இவன்தான் கர்த்தர் சொன்ன பிள்ளையோ என்று அவள் நினைத்திருப்பாளோ என்னவோ! ஆனால் அவனே பாவத்தின் முதல் விளைவை உலகில் செய்துமுடித்த கொலைகாரனானான். ஆக, வாக்குப்பண்ணப்பட்டவர் உலகில் வந்து பிறக்க ஏறத்தாழ நாலாயிரம் வருடங்கள் ஆயின. அப்படியானால் கர்த்தர் நீண்டகாலம் தாமதித்தார் என்றாகுமா? இல்லை. மனித பார்வைக்கு இது நீண்டகாலம் போல தெரியலாம். ஆனால் அத்தனை காலத்திலும் மேசியாவின் வருகைக்காக கர்த்தர், மனுக்குலத்தை பலவிதங்களிலும் ஆயத்தம் செய்தார் என்பதை வேதவாக்கியங்களில் அறிந்துகொள்ளலாம். கர்த்தருடைய பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலிருக்கிறது; அதாவது, இந்தப் பிரமாண்டத்தின் தேவனை மனிதன் தன் நேர அட்டவணைக்குள் அடக்கிக்கொள்ள முடியாது. அவர் நமது கால அளவீட்டுக்கு அப்பாற்பட்டவர்.
ஆக, வாக்களிக்கப்பட்ட இயேசு ஏறத்தாழ நாலாயிரம் வருடங்களுக்குப் பிறகு வந்துபிறந்தார். பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி முடித்து, பரமேறிய ஆண்டவர் மீண்டும் வர ஆயத்தமாக இருக்கிறார்! ஆகவேதான் பேதுரு: கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருஷம் போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள் போலவும் இருக்கிறதென்கிற காரியத்தை அறியாதிருக்கவேண்டாம் என்று எச்சரிக்கிறார். பேதுருவின் நாட்களில் சபை உபத்திரவப்பட்டது, அப்பொழுதே இயேசு ஏன் வரவில்லை என்று ஏங்கித் தவித்தது. ஆனால், “மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன்” என்றவர் பொய் சொல்வதில்லை. ஆனால், அவருடைய வருகையின் தாமதம், அது அன்பின் தாமதம். மக்கள் மனந்திரும்ப வேண்டு மென்ற ஆதங்கத்தின் தாமதம். இன்றும் வியாதிகள் வேதனைகள் நம்மை வாட்டும்போது, வீணாக முனங்கிக் கொண்டிராமல், பிறரையும் அவருடைய வருகைக்கு ஆயத்தம் செய்ய இந்த நாட்களைப் பயன்படுத்துவோமாக. சொன்னவர் சொன்னபடி வருவார்!
ஜெபம்: அன்பின் தேவனே, எங்கள் வாழ்வின் தாமதங்களை உமது வருகையின் ஆயத்தங்களுக்காக நாங்கள் பிரயோஜனப் படுத்திக்கொள்ள கிருபை செய்யும். ஆமென்.