தம்மைத் தாமே…
தியானம்: 2025 டிசம்பர் 5 வெள்ளி | வேதவாசிப்பு: கலாத்தியர்; 1:3-5

… அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார் (மத்தேயு 20:28).
வீதியிலே நடந்த ஒரு சண்டையிலே ஒருவன் கையிலே கூரிய ஆயுதம் இருந்தது. அதனால் யாவரும் பயந்து, தூர நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு வீடீயோ எடுத்துக்கொண்டு நின்றிருக்க, அந்த வழியே வந்த ஒருவர் திடீரென பாய்ந்து சென்று, அந்த ஆயுதத்தைப் பறிக்க முயன்றார். விளைவு, அவர் உயிராபத்து அடையும்படி காயப்பட்டார். இப்போது நாம் என்ன சொல்வோம்? இந்த மனிதருக்கு இது தேவையா என்போமா? அல்லது, வெட்கப்படுவோமா? ஆனால், தான் குத்தவந்தவன் காப்பாற்றப்பட்டதைக் கண்டவனும், காப்பாற்றப் பட்டவனும் திகைத்து நிற்க, காயமடைந்தவரோ வேதனையிலும் சந்தோஷப்பட்டார். ஏன் தெரியுமா? அந்த நபர் இவரின் அன்புக்குரிய மகன். அவனுக்காக இவர் தன் உயிரையும் கொடுக்கத்தயாராக இருந்தார். இதுதான் அன்பு. இன்று இப்படி நடக்குமா?
கிறிஸ்துமஸ் ஆரவாரங்கள் சூடுபிடித்திருக்கிற இந்த நாட்களில், இயேசுவின் பிறப்புடன் சம்மந்தமே இல்லாத பல அடையாளங்கள் வீதியெங்கும் தொங்க விடப்பட்டு, விற்பனைகளும், சமூகப் பணிகளும் அதிகரித்து இருப்பதை மறுக்க முடியாது. நல்ல விஷயம்தான். நாமும் இதில் பங்கெடுக்கலாம். என்றாலும், வருடா வருடம் இயேசு பிறப்பின் முக்கியத்துவம் குறித்து பல விதங்களில் நாம் தியானங்களைச் செய்து வந்தாலும், எவ்வளவுக்கு நாம் உணர்வுள்ளவர்களாக இந்த நாட்களைக் கடந்து செல்கிறோம் என்பது இன்னமும் கேள்விக்குறிதான்.
பவுல், கலாத்தியருக்கு எழுதியபோது, கிறிஸ்து பிறப்பின் அடிப்படை அஸ்திபாரமான நோக்கத்தின் ஆழமான சிந்தனையை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்: “அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி தம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்தார்.” ஆண்டவர் வலுக்கட்டாயமாக கொல்லப்படவில்லை. பிதாவின் சித்தப்படி அவர் “தம்மைத் தாமே” நமக்காகவே மரணத்துக்கு ஒப்புவித்தார். அநியாயம் அக்கிரமம் சோதனைகள் வேதனைகள் நிறைந்த சாத்தானின் இந்த தீய பிரபஞ்சத்தின் வல்லமையிலிருந்து நாம் மீட்கப்படுவதற்காக நாம் கேட்டா அவர் நம்மை மீட்க வந்தார்? இல்லை. அவர் தாமே ஒரு மனிதனாக இந்த உலகிற்கு வந்து, பிதாவின் அநாதி சித்தப்படி தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்து நம்மை மீட்டுக் கொண்டார்; இதுவே ஒப்பற்ற அன்பு. இதன் பலன், இந்த உலகுக்கும் சாத்தானின் தீய வல்லமைக்கும் இனி நாம் அடிமைகள் அல்ல என்பதாகும். இது எத்தனை பெரிய அற்புதம்! அப்படியானால் மீட்கப்பட்ட நமது வாழ்வில் மீட்கப்பட்ட அந்த நன்றி, அந்த சாட்சி வெளிப்படவேண்டுமே! மீட்கப்படாத மக்களைக் குறித்த ஆத்தும பாரம் இருதயத்தை அழுத்தவேண்டுமே! அதுதான் மெய்யான கிறிஸ்மஸ்.
ஜெபம்: ஆண்டவரே, எங்களை மீட்க தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்த உமதன்பை பிறருக்கு கூறி அவர்களை உம்மண்டை வழிநடத்த வாழ எங்களுக்கு உதவிசெய்தருளும். ஆமென்.