சிங்காசனத்திலிருந்து சிலுவைக்கு
தியானம்: 2025 டிசம்பர் 6 சனி | வேதவாசிப்பு: சங்கீதம் 47:1-9; பிலிப்பியர் 2:6-11

அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், … தம்மைத்தாமே வெறுமையாக்கி … மனுஷர் சாயலானார் (பிலிப்பியர் 2:6,7).
‘கிறிஸ்துமஸ்’ கொண்டாடுவதற்கு ஆயத்தமாகின்ற நாம், அவர் எங்கிருந்து வந்தார், பிறப்பதற்கு முன்னர் எதை விட்டுவந்தார், பரிசுத்தர் எதற்காக பாவிகள் மத்தியில் மனிதனாக வந்து பிறந்தார் என்பதையெல்லாம் நிதானித்துச் சிந்தித்திருக்கிறோமா? தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்’ (1தீமோ.3:16). இந்த மகா மேன்மையான சத்தியத்தை நாம் மெய்யாகவே உணர்ந்திருப்போமானால், நமது மனநிலையும், கொண்டாட்ட சம்பிரதாயங்களும் நிச்சயம் மாற்றமடையும்.
‘கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது’ (சங்.11:4); ‘தேவன் தமது சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறார்’ (சங்.47:8); ‘தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது’ (சங்.45:6). ஆக, தேவாதி தேவன், பரலோகத்தில் வாசம்பண்ணும் தேவன், தமது சிங்காசனத்தில் அமர்ந்திருந்து ஆட்சிசெய்யும் தேவன், இவர் இந்தப் பூமிக்கு வந்திறங்கினார் என்றால், இதனை ஜீரணிக்கத்தான் முடிகிறதா? நாம் அவரை அழைத்தோமா? இரட்சியும் என்று கதறினோமா? அவர் தம்மைத் தாமே வெறுமையாக்கி, வெறும் மனிதனாக மாத்திரமல்ல, ஒரு அடிமையைப்போல ரூபம் எடுத்துத்தான் மனிதசாயலில் இயேசுவாக வந்து பிறந்தார். தேவ குமாரனுடைய இச்செயற்பாடு முன் குறிக்கப்பட்டது. அவர் தமது தெய்வத் தன்மையை இழந்து மனிதனாக வரவில்லை; அவர் முழுமையான தேவனாக, ஆனால் அவர் தமது மகிமைக்கும் வல்லமைக்குமான உரிமையை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, பிதாவின் சித்தத்தைச் செய்வதற்காக, தமது வல்லமையைக் கட்டுப்படுத்தி, ஒரு மனிதனானார். கடவுள் மனிதனாக உலகில் உலாவினார். இதைச் சற்று சிந்தித்துப் பார்ப்போம்.
பரலோகில் தமது சிங்காசனத்தில் கெம்பீரமாக தமது மகிமையில் வீற்றிருந்த அவர், இப்போது ஒரு தாசனாக அடிமையாக சிலுவையில் தொங்கி, தாமே பிதாவின் முகத்தைத் தேடிக் கதறினாரே, யாருக்காக? சிங்காசனத்தின் தேவன் சிலுவையில் அநாதையாய் தொங்கியது எதற்காக? இவர் மனிதனாக பிறந்தாலும், பாவமற்றமற்றவராக வாழ்ந்ததுவே, மானிட வர்க்கத்திலிருந்து அவரைப் பிரித்து தனித்துவமானவராக அவரை நமக்கு முன்னே நிறுத்தியது. இந்த மனித சாயலில் தேவாதி தேவனுடைய குணாதிசயங்களை மனித முறையிலே நமக்கு வெளிப்படுத்தினார். அவருடைய மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் நிகழ்ந்திராவிட்டால் கிறிஸ்துமஸ் என்று ஒன்று முக்கியத்துவம் பெற்றிருக்குமா? இருந்திருக்குமா? ஆக, மானிடராக வந்த கிறிஸ்துவை அவரது சாயலை நாமும் நமது வாழ்வில் பிரதிபலிப்போமாக.
ஜெபம்: சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவனே, மனிதசாயலில் நீர் வெளிப்பட்டு மரணபரியந்தமும் தம்மை தாழ்த்தினீர். உமது சாயல் எங்களில் பிரதிபலிக்க ஜெபிக்கிறோம். ஆமென்.