அந்த சாயல்!

தியானம்: 2025 டிசம்பர் 14 ஞாயிறு | வேதவாசிப்பு: ஏசாயா 52:13-15; 2கொரி.3:13-18

YouTube video

… ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம் (2கொரி. 3:18).

குயவன், தனது கையிலேயே கெட்டுப்போன மண்பாண்டத்தைத் தன் பார்வைக்கு விரும்பியபடி திரும்ப வனைகிறான். பொன்னைப் புடமிடுகின்றவன், அதை அக்கினிப்பிழம்பிலே போட்டு, தனது முகம் அதில் பிரதிபலிக்கும் வரைக்கும் அதை உருக்கி புடமிடுகிறான். இப்படியிருக்க, நமது பரம தகப்பன், தமது சாயலில் தமக்கென்று தம்மால் படைக்கப்பட்ட மனிதன் மாசுபட்டுப்போக நம்மைத் தொலைந்துபோக விட்டு விடுவாரா? ஆக, அவனை மீண்டும் தமது சாயலில் மறுரூபப்படுத்தும்படி அவனைத் தேடியவராக தாமே உலகில் வந்து பிறந்தார்.

மகிமை நிறைந்த தேவசாயலில் படைக்கப்பட்ட மனிதன், தேவவாக்கை அலட்சியம் பண்ணி, அந்தச் சாயலை மாசுபடுத்தியபோது, அவரது பிரசன்னத்திலிருந்து தள்ளப்பட்டுப்போனான். அவன் மீண்டும் தேவபிரசன்னத்திற்குக் கொண்டுவரப்பட அவன் மறுரூபப்படவேண்டும். அதைச் செய்ய அவனால் முடியாது. ஆகவே, ஆண்டவர்தாமே மனிதனாக வந்து, நமது பாவங்களையும் அக்கிரமங்களையும் தாமே சுமந்து, பாவத்தின் ஏக நிவாரண பலியாக தம்மைச் சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தார். இக்காரியங்கள் நமக்குப் புதிதல்ல. ஆனால், ‘இயேசு பிறந்தார்’ என்று இன்று நம்மைக் களிகூரச் செய்யும்படிக்கு அவர் என்ன செய்தார் என்பதை ஏன் நாம் சிந்திப்பதில்லை?

தாசனாகிய கிறிஸ்துவைக் குறித்து ஏசாயா, “மனுஷனைப் பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக் கேடு அடைந்தபடியினாலே, அவரைக் கண்டவர்கள் பிரமிப்படைந்தார்கள்” (ஏசா.52:14) என்கிறார். அவர் அந்தக்கேடு’ அடைய பிதாவாகிய தேவன் அனுமதித்தது எதற்காக? “அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு” (ரோம.8:29). அந்த சாயல், கிறிஸ்துவின் அந்த மகிமையின் சாயலை அடைவது என்பது ஒரு படிமுறை. அவரை நாம் முகமுகமாய் சந்திக்கும்வரைக்கும் இந்த மறுரூபமாக்கப் படுதலை பரிசுத்த ஆவியானவர் நம்மில் செயற்படுத்திக்கொண்டே இருக்கிறார். பின்னர் அந்த நாளில் நாமும் அவருடன் எடுத்துக்கொள்ளப்பட்டு, எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம் (1தெச.4:17).

இழந்துபோன தேவசாயலை மீண்டும் நாம் பெற்றுக்கொள்ள ‘அந்தக்கேடு’ அடைந்த இயேசுவை மறந்து ஆரவாரங்களில் மூழ்கிடவேண்டாமே! கிருபையாய் மறுரூபப்படுத்தும் ஆவியானவர் கைகளில் நாம் இருக்கிறோமா? நாம் இயேசுவை ஆகாயத்தில் சந்திப்போமா?

ஜெபம்: அன்பின் பிதாவே, சீக்கிரமாய் வரப்போகும் உம்மை முகமுகமாய் சந்திக்க எங்களை மறுரூபப்படுத்தும் ஆவியானவர் கரங்களில் ஒப்புவித்து ஜெபிக்கிறோம். ஆமென்.