பிதாவுடனான உறவுக்கு மாதிரி
தியானம்: 2025 டிசம்பர் 16 செவ்வாய் | வேதவாசிப்பு: லூக்கா 6:12-13; 22:39-46

… அவர் ஜெபம் பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார் (லூக்கா 6:12).
இயேசுவானவர், சிறுவயது முதற்கொண்டு தமது பெற்றோருடன் எப்படிப்பட்ட உறவுகொண்டிருந்தார் என்பதை வேதவாக்கியங்கள் நமக்கு நன்கு உணர்த்துகின்றன. சிறுவயது முதற்கொண்டு கீழ்ப்படிந்திருந்தவர், பன்னிரு வயதிலும் ஆலயத்திலிருந்து அவர்களுடன் திரும்பிச் சென்று கீழ்ப்படிந்திருந்து, யோசேப்பு மரித்துப்போக தகப்பன் தொழிலைச் செய்து, மரியாளுக்குப் பிறந்த தன் சகோதரர்களைக் கவனித்து, தமது வேளை வரும்வரைக்கும், அதாவது முப்பது வயதுவரைக்கும் பொறுப்புடன் நடந்துகொண்டார் என்பதை நாம் அறிவோம். மாத்திரமல்ல, மரிக்கும் போதும் தம்மைச் சுமந்த தாயின் பொறுப்பிலிருந்தும் அவர் விலகவில்லை. இதன் இரகசியம் என்ன? முதலாவது, இயேசு, பரம பிதாவுடன் உறுதியான உறவுகொண்டிருந்தார் என்பதே.
நான்கு சுவிசேஷங்களையும் எழுதியவர்கள், இயேசு தமது மனித வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு முன்னர், நேரமெடுத்து, தனிமையில் சென்று, பிதாவுடன் உறவாடி ஜெபித்தே முன்னெடுத்தார் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். லூக்கா 6:12 இல் இயேசு, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார் என்று வாசிக்கிறோம். தமது ஊழியத்தில் தமக்கென்று பன்னிரு சீஷர்களை அதாவது ஒரு உள்வட்டத்தை உருவாக்கும் முன்பதாக அவர் இராமுழுவதும் ஜெபிக்கிறார். இப்படி ஜெபித்தும், ஏன் யூதாஸ் தெரிந்தெடுக்கப்பட்டான் என்று சிலர் கேட்பது உண்டு. யூதாசும் பிதாவின் திட்டத்திற்குள் உட்பட்டவன்தான் என்பதை நாம் உணர வேண்டும். தாம் சிலுவைக்குப் போகும் வேளை வந்தபோதுகூட, ஒரு மனிதனாக, இயேசு, கெத்சமெனேயில் தமது உணர்வுகளை ஊற்றி வியாகுலத்துடன் தமது பிதாவை நோக்கி ஜெபித்தார். அவருடைய வியர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழும் அளவுக்கு அவர் பிதாவுடன் ஜெபித்தார்.
இப்படியிருக்க, இன்றைய ‘பிள்ளைகள் பெற்றோர் உறவு’ சற்று மாறுபட்டுவிட்டதை மறுக்க முடியாது. பிள்ளைகள், பெற்றோர் எடுக்கின்ற முடிவுகள் பல தோல்வியில் முடிவதையும் மறுக்கமுடியாது. காரணம் என்ன? சிந்திப்போம். பரம பிதாவுடனான உறவில் உறுதியாய் தரித்திருக்கிறவன், தனது பெற்றோருடன் நல்லுறவில்தான் இருப்பான். ஆக, பிதாவுடனான உறவு எப்படிப்பட்டது, எது எப்படி இருக்கவேண்டும் என்பதை நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவதற்கு வந்த இயேசுவின் பிறப்பின் கொண்டாட்டத்தில் திளைத்திருக்கின்ற நாம், இயேசுவின் மாதிரியில் நின்று உண்மையாகவே பிதாவுடனும், பெற்றோர் உற்றோருடனுமான உறவில் உண்மையாய் இருக்கிறேனா என்பதை சிந்திப்பேனாக. இல்லையானால் கிறிஸ்துமஸ் எப்படிப்பட்டது?
ஜெபம்: தேவனே, பிதாவோடு உள்ள உறவிலும், நீர்தாமே எங்களுக்கு கொடுத்த அன்பின் உறவுகளோடும் உண்மைத்துவமாய் நடந்து உம்மை மகிமைப்படுத்த அருள் செய்யும். ஆமென்.