வாசம் பண்ண வந்துதித்தார்!

தியானம்: 2025 டிசம்பர் 25 வியாழன் | வேதவாசிப்பு: யோவான் 1:1-14

YouTube video

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார் (யோவான் 1:14).

கிறிஸ்துமஸ் சுதந்திரம்; விருந்துண்ணும் நாட்கள்; வெளிநாட்டிலிருந்து உறவினரின் வருகை; இப்படியே நமது கிறிஸ்துமஸ் கடந்துபோகிறது. ஆனால் எப்படியோ வெளிநாட்டவர்கள் புறப்பட்டாகவேண்டும்; ஆம், உலகத்துக்கடுத்த உறவுகள் எதுவும் நிரந்தரம் இல்லை. அதனால்தானோ என்னவோ, அழைப்பு விடுக்காமலே நம்மைத் தேடி வந்து, நமக்குள்ளேயே வாசம்பண்ணி, நம்முடன் உறவாடுகின்ற ஒருவர் இன்று நமக்குள் இருக்கிறார். அவர் இருக்கிற வண்ணமாகவே வந்தால் நம்முடன் உறவாட முடியாது என்பதால், அவர் தேவனாயிருந்தும், நம்மைப்போலாகி, கிருபையையும் சத்தியத்தையும் தமக்குள் பூரணமாய்க் கொண்டவராக உலகில் பிறந்து, நமக்குள் வாசம் பண்ணினார். அவருடைய பிறப்பின் நாள் அறியப்படாவிட்டாலும், மனிதனாய் தேவன் வந்ததையே இன்று நினைவுகூர்ந்து கொண்டாடுகிறோம்.

‘வாசம்பண்ணினார்’ என்பது வெறுமனே வசித்தார் என்றல்ல; ஆசரிப்புக் கூடாரத்திலே தேவ மகிமை இறங்கி, மகா பரிசுத்த ஸ்தலத்திலே கிருபாசனத்தி லிருந்து மக்களை தேவன் எப்படி நடத்தினாரோ, அந்த மாதிரியைத்தான் நாம் இங்கு காணவேண்டும். கிறிஸ்து உலகிலே வந்து பிறந்தபோது, ஆதியிலே தேவனாயிருந்த வார்த்தை, தமக்குள் ஜீவன் கொண்டிருந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம் பண்ணினார், அதாவது தேவன் மனிதனானார். அவர் மனிதனின் ஒரு பகுதியல்ல; அவர் முழுமையான மனிதன், அதேசமயம் தேவத்துவத்தில் மாறாத முழுமையான தேவன். “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது” (கொலோ.2:9). ஆனால், உலகில் அவர் தமது தேவத்துவத்தை செயற்படுத்தவில்லை. நம்மைப்போல முழு மனிதனாகவே வந்து, பாவமில்லாதவராக நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்து, பரிசுத்தராக, நமது பாவங்களுக்காக கிருபாதர பலியாகத் தம்மைக் கொடுத்தார். இயேசு மனிதனுடைய பார்வைக்குத் தெரிந்தவராக, தொட்டு அனுபவிக்கத்தக்கவராக வந்ததால், தேவனை கிறிஸ்துவில் நாம் அனுபவிக்கிறோம். கிறிஸ்துவே, மனிதனாகி வந்த தேவனுடைய பரிபூரண வெளிப்பாடாகும்.

இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவர், எந்த மனித அறிவுக்கும் எட்டாதவர், மனிதனது கண்களாலே காணக்கூடாதவருமாகிய ஒப்பற்ற, நிகரற்ற தேவனை அன்று வாழ்ந்தவர்கள் கிறிஸ்துவில் காணவும், இன்று வாழும் நாம் விசுவாசத்தில் அனுபவிக்கவும், அவருடைய அன்பில் திளைத்தவர்களாய் வாழவும் நமக்குக் கிருபை தந்த தேவனை ஸ்தோத்தரிப்போம். பாலகனாக பிறந்த இயேசுவின் நாமத்தில், யாவருக்கும் அன்பின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்!

ஜெபம்: கர்த்தாவே, நீர் எனக்காகவே பிறந்து எனக்குள் வாசம் பண்ணுகிறீர். தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்காக உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.