பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கு…

தியானம்: 2025 டிசம்பர் 26 வெள்ளி | வேதவாசிப்பு: 1யோவான் 3:5-10

YouTube video

பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார் (1யோவா.3:8).

கடந்த நாட்களில் நாம் தியானித்த கிறிஸ்து பிறப்பின் நோக்கங்கள் யாவுக்கும் சிகரம் வைத்தாற்போல, இன்றைய வாக்கியம் நம்மை மேலும் பெலப்படுத்தட்டும். காலில் ஒரு முள்ளுக் குத்தினால், அதைப் பிடுங்கி எறிகிறோம். என்றாலும், அந்த இடம் சீழ்பிடித்துவிடுகிறது. அதை வெளியேற்றி மருந்து போட்டாலும் திரும்பவும் சீழ் பிடிக்கும். ஆக, அந்த இடத்தை சற்றுக் கீறினால், முள்ளின் ஒரு பகுதி முறிந்து உள்ளே குத்திக்கொண்டிருப்பதைக் காணலாம். அது அகற்றப்படுமட்டும், சீழ் பிடிக்கத்தான் செய்யும், புண்ணும் ஆறாது, இல்லையா!

பாவத்துடனான நமது போராட்டமும் இப்படித்தான். நமக்குத் தெரிகிற பாவங்களை அறிக்கை செய்ய வேண்டும். இயேசு என்னை மீட்கவே வந்தார் என்று விசுவாசித்தாலும், நமது கண்களுக்குத் தெரியாமல் நமது உணர்வுகளையும் மீறி உறைந்திருக்கும் காரணத்தை அழிக்காவிட்டால், நாம் திரும்பத் திரும்ப பாவம் செய்கிறவர்களாகவே இருப்போம். வெளியே சொல்ல முடியாமலும் சரிசெய்ய முடியாமலும் பல வருடங்களாக தன்னுள்ளே ஒரு விஷயத்தைக் குறித்துப் போராடிக்கொண்டிருந்த ஒரு கிறிஸ்தவ விசுவாசி, “ஆண்டவரே, இதிலிருந்து விடுதலையாக விரும்பி நான் ஜெபித்தும், நான் திரும்பத் திரும்ப விழுந்துவிடுகிறேனே; உதவி செய்யும்” என்று மனவேதனையுடன் ஜெபித்து வந்தார். ஒருநாள், “பாவியான என்னை மீட்ட இரட்சகர் பாவத்துக்குக் காரணனான பிசாசையும் அழிக்கவே உலகுக்கு வந்தார்” என்ற சத்தியம், (இதை முதலில் அறிந்திருந்தாலும்) அந்த நாளிலே அவர் உள்ளத்திலே பளிச்சிட்டது. அன்றைக்கே அவர் விடுதலையானார் என்று அவர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

“தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான்” என்ற வார்த்தை, மெய்யானது. ஒரு விசுவாசி பாவம் செய்வதைத் தனது நடைமுறையாகக் கொண்டிரான், அத்துடன் அவன் தேவனுடைய ஒழுக்க நெறிகளை உதாசீனம் செய்யவும் மாட்டான். நாம் யாவரும் பாவம் செய்யலாம்; ஆனால், அதை மேற்கொள்ள எழுந்திருப்போம். “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் எழுந்திருப்பான்” (நீதி.24:10). ஆம், தேவனால் பிறந்தவனுக்குள் தேவனுடைய வித்து, அவர் அருளிய புதிய வாழ்வு இருக்கிறது. பிசாசுக்கு இனி எதிலும் பங்கு இல்லை. ஏனெனில் இயேசு பிசாசின் கிரியைகளை சிலுவையில் நீர்மூலமாக்கிவிட்டார். இதற்காகத் தானே அவர் உலகில் வந்து பிறந்தார். ஆக, இனி நாம் பாவத்தின் பயமுறுத்தலுக்கு இடங்கொடுக்கவோ உடன்படவோ தேவையில்லை. நாம் கிறிஸ்துவுக்குள் வெற்றிசிறக்க, மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டவர்கள். தைரியமாக இன்னுமொரு புதியஆண்டிற்குள் பிரவேசிக்க நம்மைத் தயார்ப்படுத்துவோமாக!

ஜெபம்: எங்களை புதுச்சிருஷ்டியாய் மாற்றுகிற கர்த்தாவே, பாவத்திற்கான எல்லா வேர்களும் களையப்பட்டு வெற்றியுள்ள வாழ்வு வாழ உமது கிருபையை தாரும். ஆமென்.