அக்கினி அவசியம்!
தியானம்: 2025 டிசம்பர் 28 ஞாயிறு | வேதவாசிப்பு: ஏசாயா 43:1-4; தானியேல் 2:19-25

நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன் … நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது (ஏசா.43:2).
ஒரு விஞ்ஞானி, நெருப்புச் சுடர் ஒவ்வொன்றின் மத்தியிலும், ஒரு அமைதி மிகுந்த வெறுமையான காலி இடம் ஒன்றுண்டு என்பதை செயல்முறையில் காட்ட முயற்சித்தார். ஒரு சிறு அளவு வெடிமருந்தை மிகவும் பாதுகாப்பாக சுடரின் மத்திக்குக் கொண்டுசென்று, அதன் பாதுகாப்பை மிகக் கவனமாக அகற்றினார். அந்த வெடி மருந்து தீப்பிடித்து வெடிக்கவில்லை. இரண்டாம் தடவையாக, அவர் அதே சோதனையைச் செய்ய முயற்சித்தபோது, அவருடைய கைகள் சிறிது ஆடியதால், அவர் இட்டிருந்த பாதுகாப்பு விலக, வெடிமருந்து தீப்பற்றி வெடித்துவிட்டது.
பற்றியெரியும் அக்கினியின் மத்தியிலும் ஓர் அமைதி உண்டு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஆக, “நமது ஆத்துமாவின் பாதுகாப்பு அமைதியில்தான் தங்கியிருக்கிறது. நாம் பயந்து, விசுவாசத்தைவிட்டு, அல்லது புரட்சித் தன்மையுடனும், அமைதி இன்மையுடனும் இருப்போமானால் ஆபத்துக்குள்ளாவோம்” என்று ஒருவர் எழுதினார். இது எத்தனை உண்மை! தானியேலின் நண்பர்கள் மூவரும் கட்டப்பட்டு, “எரிகிற அக்கினிச் சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள்” என தானி.3:21ல் வாசிக்கிறோம். “நடுவிலே” என்பதைக் கவனியுங்கள். அவர்களைத் தூக்கி அக்கினியின் நடுவிலே எறிந்துவிட்டவர்கள் அக்கினியின் அகோரத்தினால் எரிந்து போனார்கள். ஆனால் அக்கினி நடுவிலே விழுந்த நண்பர்களுடன், நாலாவது நண்பர் உலாவியதை அந்த ராஜாவே கண்டான். ஆம், எரிகிற அக்கினி போன்ற சோதனைகளைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை. அக்கினியின் நடுவிலே அமைதியைக் காண்பதுபோல, நமது ஆத்துமாவும் கர்த்தருக்குள்ளான அமைதியில் இருக்குமானால் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை. தண்ணீர்கள் ஆறுகளைக் கடக்காதபடி, அக்கினியில் நடக்காதபடி நான் உன்னைக் காப்பேன் என்று கர்த்தர் வாக்களிக்கவில்லை. “நீ நடக்கும்போது” என்றுதான் கூறினார். அப்படியானால் அப்படிப்பட்ட சோதனைகள் நிச்சயம் வரும். ஆனால், தேவன் நம்மீது கொண்டுள்ள அன்புக்கும் நம்பிக்கைக்கும், நமக்கு வரும் சோதனைகள்தான் நிரூபணமாக இருக்கிறது.
சோதனையில் நமது விசுவாச உறுதியும் அவர்மீது நாம் வெளிப்படுத்தும் நம்பிக்கையும் அவருக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆண்டவர் நம்மீது எவ்வளவு நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்பதை நேரிடும் சோதனைகள்தான் அளவிட்டுக்காட்டும். ஏனெனில் தண்ணீரோ ஆறுகளோ அக்கினியோ எது நம்மைச் சூழ்ந்தாலும், அவருக்குள் நாம் அமைதி காண்போமாயின், அதுவே நமது வாழ்வின் வெற்றி. நாம் தடுமாற வேண்டியதில்லை.
ஜெபம்: “அன்பின் பிதாவே, இதுவரை நேரிட்ட அக்கினி போன்ற சோதனைகளில் நீர் எங்களை கைவிடாமல் அவற்றின் மத்தியிலும் எங்களுக்கு ஆறுதலையும் அமைதியையும் தந்து எங்களை நடத்திவருகிறீர். உமக்கே எல்லாத் துதிகளையும் செலுத்துகிறோம். ஆமென்.”