கனப்படுத்துபவர்!

தியானம்: 2025 டிசம்பர் 29 திங்கள் | வேதவாசிப்பு: ஆதியாகமம் 43:26-30; 44:11-16

YouTube video

ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன் (சங்கீதம் 91:15).

இந்த வசனத்தை வாசிக்கும் போதெல்லாம் ஒரு போதகர் கூறிய சாட்சி என் ஞாபகத்திற்கு வரும். முகாமொன்றிலே, பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்ட ஜனக்கூட்டத்துடன், ஒருதடவை அந்தப் போதகரும் அகப்பட்டுக்கொண்டார். என்ன நடக்குமோ என்று யாவரும் பயந்து, நடுங்கி, தத்தமது தெய்வங்களை கண்ணீரோடு வேண்டிக்கொண்டார்கள். போதகரும் ஜெபித்தார். திடீரென சங். 91:15ம் வசனம் அவருக்கு ஞாபகம் வந்தது. போதகருக்கு ஒரு புதிய பெலன் உண்டானதுபோலிருந்தது. உள்ளம் சமாதானத்தினால் நிறைந்தது. அவரும் திரும்பத் திரும்ப இந்த வசனத்தைக் கூறிக்கொண்டும் துதித்துக்கொண்டும் இருந்தார். அதிசயம் நிகழ்ந்தது. அருகிலே பயங்கரமான சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தபோதும் மிகவும் ஆச்சரியமாக, எவ்வித விசாரணையுமின்றி போதகர் மிகுந்த மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டார். இத்தனைக்கும் இவர் போதகர் என்று அங்கிருந்த ஒருவரும் அறிந்திருக்கவில்லை.

யோசேப்பிற்கும் பல ஆபத்துக்கள் வந்தன. ஆனால் அவனோ எந்த சூழ்நிலையிலும் தன் தேவனை மறந்துவிடவேயில்லை. அவன் தேவன் பேரில் வாஞ்சையுள்ளவனாகவும்;, அவருக்கு உண்மையுள்ளவனுமாகவே இருந்தான். குழியிலும், போத்திபார் அரமனையிலும், சிறைக்கூடத்திலும், அவனோடே கூட தேவனிருந்தார். யோசேப்பு எகிப்தின் அதிபதியாக உயர்த்தப்பட்ட பின்னரும் தேவன் அவனைவிட்டு விலகிவிடவில்லை. எகிப்தியரின் முன்னிலையில் தேவன் அவனைக் கனப்படுத்தினார். அவனை வெறுத்து ஒதுக்கிவிட்ட சகோதரர்களுக்கு முன்பாக உயர்த்தினார். அவனை அடிமையாக விற்றுப்போட்ட சகோதரர்கள், அவனுக்கு முன்னே தம்மையே அடிமைகள் என்று ஒப்புக்கொண்டு அடிபணியும் அளவிற்கு, தேவன் யோசேப்பைக் கனப்படுத்தினார்.

தேவபிள்ளையே, உன் குடும்பத்தில் நீ அற்பமாக எண்ணப்படுகிறாயா? ஆபத்தில் அகப்பட்டிருக்கிறாயா? வருகிற புதிய ஆண்டிலும், இந்தச் சூழ்நிலைகள் தொடருமா என்று அங்கலாய்ப்புடன் இருக்கிறாயா? பயப்படாதே! உன் தேவனை நோக்கி நீ நம்பிக்கையுடனே கூப்பிடு. அவர் உனக்குச் சமீபமாக இருப்பார்; உன்னைத் தப்புவிப்பார்; மாத்திரமல்ல, யார் முன்னிலையில் நீ கனவீனமடைந்தாயோ, அவர்கள் முன்னிலையிலேயே கர்த்தர் உன்னை உயர்த்துவார். நீ எந்த நிலையிலும் தேவனைக் கனப்படுத்த ஜாக்கிரதையாய் மாத்திரம் இருந்துகொள். ஏனெனில், என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் (1சாமு.2:30). நீ எந்த சூழ்நிலையிலும் தேவனாகிய கர்த்தரை மாத்திரம் கனம் பண்ணுவாயா?

ஜெபம்: “கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிற வருமாயிருக்கிறீர். எந்த சூழ்நிலையிலும் உம்மை மாத்திரமே நாங்கள் கனப்படுத்த எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.”