நன்றியுள்ள இருதயம்!
தியானம்: 2025 டிசம்பர் 31 புதன் | வேதவாசிப்பு: சங்கீதம் 116:9-13 லூக்கா 7:36-48

கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், … இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன் (சங். 116:12,13).
வருடத்தின் இறுதி நாளுக்குள் வந்துவிட்டோம். புதுவருட ஆரவாரங்களைச் சற்று ஒதுக்கிவிட்டு, இதுவரை அற்புதமாக நம்மை நடத்திவந்த தேவாதி தேவனுக்கு மனதார நன்றி கூறுவோமா! நன்றிகூறுகின்ற இருதயத்தில் தேவன் மகிழுகிறார். இந்த ஆண்டு முழுவதும், நாம் கடந்துவந்த பாதைகளில், நமக்கு நன்மையல்ல என்று நாம் கருதுபவையும் தேவனுடைய அன்பு பரிசுதான் என்று நேற்றைய நாளில் தியானித்தோம். ஆகவே முழு மனதுடன் நன்றி செலுத்துவோமாக!
ஒரு பாவியான பெண், தனது ஊராரால் வெறுக்கப்பட்டவள். அவள் எப்படிப் பட்டவள் என்று அநேகர் அறிவார்கள். அது பரிசேயன் வீடு என்றும் பாராமல், ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து, அங்கே பந்தியமர்ந்திருந்த இயேசுவின் பாதங்களின் அருகே பின்னால் நின்று, அவரது பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவரது பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தை பூசினாள். இது எப்படி ஆனது? பரிமளதைலம் மிக மிக விலை உயர்ந்த ஒன்று. அவ்வளவு பணம் இவளுக்கு எப்படிக் கிடைத்தது? நீண்டகாலமாக அவள் அந்தப் பணத்தைச் சேகரித்திருப்பாள்; அவ்வளவு பணத்தையும் செலவு செய்து, இந்த நறுமண தைலத்தை வாங்கியிருந்திருப்பாள். இத்தனைக்கும் அவள் இயேசுவை முதலில் சந்தித்ததாகவோ, மன்னிப்புப் பெற்றுக்கொண்டதாகவோ எழுதப்படவில்லை. ஆனால் அவள் தன்னைத் தானே உணர்ந்து, மனதார இயேசுவின் மன்னிப்பைப்பெற்று விடுதலையாகி இருந்திராவிட்டால் இந்த நன்றிச் செயலை அவளால் செய்திருக்க முடியாது. இந்த வெளிப்படையான செயலுக்குக் காரணம், அவளுடைய உள்ளான வாழ்வு விடுதலை அடைந்ததுதான். அதற்குக் காரணரான அவரை அவள் கண்டு, தனக்குள் உள்ள எல்லாவற்றையும் கொட்டிக் கொடுத்து, அவரை வணங்கி தன் நன்றியைத் தெரிவிக்கிறாள். “கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்?” தான் பெற்றுக்கொண்ட இரட்சிப்பின் பாத்திரம், மன்னிப்பு, புதிய வாழ்வு இவைதான் சங்கீதக்காரனின் இருதயத்தை நிறைத்தது. நாம் ஆண்டவருடைய மன்னிப்பைப் பெற்றது மெய்யானால், நன்றி சொல்லாமல் இருக்கமுடியாது, அதைப் பிறருக்கு அறிவிக்காமலும் இருக்கமுடியாது. இப்படிப்பட்ட ஒரு நன்றிச் செயலுக்கு எதுவும் ஈடாகாது. மற்றவையெல்லாம் இதற்குப் பிறகுதான். இந்த நாளில் நன்றி நிறைந்த இருதயத்துடன் தேவன் அருளிய இரட்சிப்பின் ஜீவனுள்ள சாட்சியை யாராவது ஒருவருக்காவது அறிவித்து, ஒரு புதிய ஆத்துமாவை ஆண்டவரிடம் நடத்திய மகிழ்ச்சியுடன் புதிய ஆண்டுக்குள் பிரவேசிப்போமாக!
ஜெபம்: “நல்ல ஆண்டவரே, நீர் செய்த எண்ணிலடங்காத நன்மைகளுக்காக வருடத்தை நிறைவு செய்கிற இந்தநாளில்தானே உம் பாதம் பணிந்து தொழுதுகொள்ளுகிறோம். ஆமென்.”