கர்த்தரோடு அதிகநேரம்

தியானம்: 2026 ஜனவரி 2 வெள்ளி | வேத வாசிப்பு: யாத்திராகமம் 34:27-31

YouTube video

மோசே … சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர்; பேசினதாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான் (யாத்.34:29).

வெளிநாடொன்றில் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோது, என் பேச்சின் போக்கு மாறிவிட்டதாக எல்லோரும் என்னைக் கேலி பண்ணினார்கள். அப்போதுதான் நானும் அதை உணர்ந்தேன். அந்த இடத்திலே வேலை பார்த்தது, ஆராதித்தது எல்லாம் அநேகமாக இந்தியர்களோடுதான். ஆகவே என்னையும் அறியாமல் அவர்களைப் போலவே பேசப்பழகிவிட்டேன் போலும். நாம் அதிகமாக யாரோடு பழகுகிறோமோ, யாரோடு அதிக நேரத்தைச் செலவிடுகிறோமோ, அவர்களுடைய பல காரியங்கள் காலப்போக்கில் நம்மிலே வெளிப்பட ஆரம்பிக்கும் என்பதை மறுக்கமுடியாது.

நாற்பது நாட்கள் என்பது இலகுவானதொன்றல்ல. அதிலும் சாப்பாடு தண்ணீர்கூட இல்லாமல் இரவும் பகலுமாய் ஒருவரோடு தரித்திருப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அந்த சமயத்தில் ஒளியாகிய தேவனுடைய வெளிச்சம் மோசே மீது பிரகாசிக்க ஆரம்பித்தது. அந்த நாட்கள் முடிந்தபோது தனது முகம் பிரகாசித்திருப்பதுகூட மோசேக்குத் தெரியவில்லை. அந்தளவிற்கு மோசே தேவனோடு தரித்திருந்தார். திரும்பிவந்த மோசேயை நேருக்குநேர் சந்திக்க அவருடைய சகோதரன் ஆரோனே பயந்தார். தேவனுடைய மகிமையை ஜனங்கள் மோசேயின் முகத்திலே கண்டார்கள். ஜனங்கள் பயந்ததினாலே மோசே ஒரு முக்காடு போடவேண்டியிருந்தது. “என் இயேசுவைப்போல் ஆவதே என் வாஞ்சை” என்று ஆரவாரமாகப் பாடுகின்ற நாம், அந்த வாஞ்சை நிறைவேற என்ன செய்கிறோம்? இயேசுவைப்போல நாமும் மாற, அவரை நம் வாழ்வில் பிரதிபலிக்க, கடந்த ஆண்டிலே நாம் எடுத்த முயற்சிகள் என்ன? நாம் வீணடித்த தருணங்கள் எத்தனை? கிறிஸ்துவுடன் தரித்திருந்து அவரில் நிலைத்திருந்த வேளைகள் எத்தனை? “அவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) நிலைத்திருக்கிறேன்” என்று சொல்லுகிறோம்; ஆனால் அவர் நடந்தபடியே நாமும் நடக்கிறோமா (1யோவா.2:6) என்பதைச் சிந்திப்போம்.

கிறிஸ்து ஒரு மனிதனாக நமக்கு முன்மாதிரியாக நடந்த பாதையில் நடக்கும்போது நிச்சயம் ஆண்டவர் சாயல் நம்மில் பிரகாசிக்கும். அந்த சாயல் வெளிப்படவேண்டுமென்றால் இந்த உலகுக்குரிய பல காரியங்கள் நம்மைவிட்டு அகற்றப்படவேண்டும்! பேச்சிலும் செயலிலும் நடக்கையிலும் நாம் வைக்கும் விழாக்களிலும்கூட ஆண்டவரின் சாயல் வெளிப்படவேண்டும் என்ற வாஞ்சை இருந்தால், அதற்கு நாம் கவனிக்கவேண்டியது, தேவனோடு செலவழிக்கும் ஜெபநேரம், வாசிக்கும் தேவவார்த்தை, அதைத் தியானிக்கும் தியானம். இவை அதிகரிக்க அதிகரிக்க தேவனுடைய சாயல் தானாகவே நம்மில் அதிகமதிகமாக பிரதிபலிக்குமல்லவா! தேவனோடு என்றும் நாம் இணைந்திருக்க நம்மை அவரிடமே அர்ப்பணிப்போமாக.

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, இந்த ஆண்டிலே எங்கள் ஜெபநேரமும், வேதத்தை வாசித்து தியானிக்கிற நேரமும் அதிகரித்து, அனுதினமும் உம்மோடு தரித்திருக்க தூய ஆவியினால் எங்களை நிரப்பும். ஆமென்.