பொறுப்புகளை நிறைவேற்று!

தியானம்: 2026 ஜனவரி 4 ஞாயிறு | வேத வாசிப்பு: நெகேமியா 6:1-16

YouTube video

நான் அந்த வேலையை விட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப்போவானேன் (நெகேமியா6:3).

நாம் ஏதாவது திட்டம் போட்டால், அல்லது ஒரு பயணம் ஒழுங்கு செய்தால் அதை எப்படியாவது வெற்றியுடன் செய்ய முயற்சிப்போமல்லவா! வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் வாய்ப்புகளை நாமே ஏற்படுத்தியாவது அவற்றை நிறைவேற்றி விடுகிறோம். ஆனால் ஒரே வாஞ்சையோடு நல்ல பங்காகிய தேவனருளிய வார்த்தையைத் தெரிந்துகொண்டு அதன்படி வாழ முற்படும்போது பல தடவைகள் நாம் தோற்றுப்போவது ஏன்? இனிமேல் கட்டாயம் ஒருமணி நேரம் ஜெபிக்கவேண்டும். வேதம் வாசித்துத் தியானித்து எழுதிவைக்க வேண்டுமென்று எப்போது தீர்மானம் செய்கிறோமோ அன்றைக்கென்று பலவித தடைகள் வரும். ஒருநாளும் வராத உறவினர்கள், நண்பர்கள் வருவார்கள். தவிர்க்க முடியாத தொலைபேசி அழைப்பு வரும். அல்லாவிட்டால் தாங்கமுடியாத தூக்கமாவது வரும். இது அநேகருடைய அனுபவம்.

அன்று பாபிலோனிலே பான பாத்திரக்காரனாய் இருந்த நெகேமியா, எருசலேமின் நிலைமையைக்கேட்டு மனவேதனையடைந்து, ராஜாவின் உத்தரவோடு எருசலேமுக்கு வந்தார். இடிந்துபோயிருந்த அலங்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற பாரத்தை தேவனே நெகேமியாவின் மனதிலே வைத்தார். (நெகே.2:12) அதற்காக எல்லாமே இசைவாகவே அமைந்ததா? இல்லை. பல தடைகள், அவமானப் பேச்சுக்கள், நிந்தனைகள், மாத்திரமல்ல. நெகேமியாவுக்கு பொல்லாப்புச் செய்ய ஒரு கூட்டத்தார் பல தந்திரமான வழிகளிலே முயற்சி செய்தனர். அந்த வேலை நடந்தேறாதபடிக்கு அவர்களுடைய கை சலித்துப் போகுமளவுக்கு தடைகளை ஏற்படுத்தினர். மாத்திரமல்ல. தீர்க்கதரிசிகளை அனுப்பி தேவன் சொன்னதாகக் கூறி பல தீய ஆலோசனைகளைக்கூட சொன்னார்கள். இவை எவற்றிலிருந்தும் நெகேமியா தன் வேலையில், அதாவது தேவனுடைய வேலையிலிருந்து பின்வாங்கிப் போகவில்லை. அலங்கத்தை ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டிமுடித்தார். இந்தக் காரியம் தேவனாலே கைகூடியது என்று யாவரும் அப்பொழுது உணர்ந்துகொண்டனர்.

தீர்க்கதரிசிகள் வந்து சொல்லியும் தடுமாறாத நெகேமியாவின் மன உறுதி நமக்குண்டா? தேவனோடுள்ள அன்பின் உறவில் நிலைகொண்டு வளர முடியாதபடிக்கு குறுக்கிடுகின்ற உலக சோதனைகளைப் பார்த்து, “நான் பெரிய வேலை செய்கிறேன் நான் வரக்கூடாது“ என்று நம்மால் பதில் கொடுக்க முடியுமா? தேவன் நமக்குத் தந்த பொறுப்புகளைத் தவிர நமக்கு வேறே முக்கியம் ஏது? அவ்வழியில் வருகின்ற தடைகளை தகர்த்தெறிவோமாக! தேவனுடைய சித்தத்தை மாத்திரம் நிறைவேற்ற துடிப்போமாக!

ஜெபம்: “கர்த்தாவே, நீர் என்னை நம்பித் தருகின்ற பொறுப்புகளை நிறைவேற்றுவதில் வருகின்ற தடைகளை மேற்கொள்ள பெலன் தாரும். ஆமென்.”