ஒரு தொடுகை போதும்!

தியானம்: 2026 ஜனவரி 10 சனி | வேத வாசிப்பு: மத்தேயு 8:1-4

YouTube video

இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு … (மத்தேயு8:3).

ஒருமுறை, நோயாளர்களின் தேவைகளைச் சந்தித்து, இயேசுவின் அன்பைப் பகிர்ந்து, ஜெபிப்பதற்காக ஒரு குஷ்டரோக வைத்தியசாலைக்குச் சென்றோம். நாம் கொடுத்த பொருட்களிலும்பார்க்க, அவர்களைத் தொட்டு அணைத்துப் பேசியதே அவர்களை அதிகம் சந்தோஷப்படுத்தியது. ஆனால் நாம் வெளியே வந்தபோது, நம்மோடு வந்த சிலர் தண்ணீர்க் குழாயைக் கண்டு, விரைந்து சென்று, தமது கைகளைத் தேய்த்துகழுவினார்கள். அதை அந்த நோயாளர்களில் சிலரும் கண்டனர். அவர்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்!

சமுதாயத்திலே மற்றவர்களைப்போல சகஜமாக நடந்து திரிய தடைசெய்யப்பட்ட ஒரு குஷ்டரோகி, திரளான ஜனங்கள் இயேசுவுக்குப் பின்சென்று கொண்டிருந்தபோது, தயக்கமின்றி இயேசுவிடம் ஓடிவந்து, அவரைப் பணிந்து “உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்று ஜெபித்தான். தீண்டத்தகாதவன் என எண்ணப்பட்டவன், தன்னைத் தொடும்படி ஆண்டவரிடம் கேட்கவில்லை. ஆண்டவரோ அவனது குஷ்டரோகத்திலும்பார்க்க அவனது உடைந்த உள்ளத்தைக் கண்டார். அவர் ஒரு வார்த்தை சொல்லியே சுகம் கொடுத்திருக்கலாம், ஆனால் அவரோ தமது கரத்தை நீட்டி அவனைத் தொட்டார். அவர் அருவருக்கவில்லை. தமக்கு வியாதி வந்து விடும் என்று தயங்கவில்லை. தொட்டபின் கைகழுவியதாகவும் சொல்லப்படவில்லை. தொழுநோயாளர்கள் மத்தியிலும், தள்ளப்பட்ட சமுதாயத்தினர் மத்தியிலும், எயிட்ஸ் நோயாளர்கள் மத்தியிலும் சேவை செய்து இயேசுவை அறிவித்த எத்தனை மிஷனரிமார், தங்கள் குடும்பங்களையும் தங்கள் வாழ்வையும்கூட இழந்திருக்கிறார்கள். இவர்களில் வெளிப்பட்டது எது? இயேசுவின் மனதுருக்கமும் அன்புமல்லவா!

சுகாதாரம் அவசியம்தான். ஆத்துமா அதிலும் முக்கியமானது. நம்மைச் சுற்றிலும் எத்தனைபேர் ஏக்கங்களோடும் வேதனைகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எத்தனைபேர் புற்றுநோய், எயிட்ஸ் போன்ற பயங்கர வியாதிகளோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். தனிமை, சரியான கவனிப்பற்ற முதிர்வயதோர் எத்தனைபேர்! நமது பணம் பொருள் வேண்டாம். அவர்களுக்காக செலவிடும் ஒரு நிமிடம், ஒரு அன்பின் வார்த்தை, ஒரு தொடுகை, ஒரு நற்செயல், இது போதுமே! நாங்கள் இயேசுவைப்போல் மாறியபின் பார்க்கலாம் என்று நினைக்காதே. இயேசு காட்டிய மனதுருக்கத்தை நாம் பிறரில் காட்டும்போது, அவரது மனதுருக்கம் நம்மை நிறைக்கிறது. நமது கரங்களை, அவர்களிடம் நீட்டுவோம். ஒரு தொடுகை, அது ஒரு ஆத்துமாவையே அசைத்துவிடும். இன்றிலிருந்து இந்த மனதுருக்கத்தை வெளிப்படுத்துவோமா!

ஜெபம்: அன்பின் தேவனே, கைவிடப்பட்ட சூழ்நிலையிலும், வியாதியின் பிடியிலும் உள்ள மக்களை நேசித்து மனதுருக்கத்தோடு ஊழியம் செய்யும் கிருபை வரங்களை எங்களுக்குத் தாரும். ஆமென்.