நம்மை நிறைத்திருப்பது எது?
தியானம்: 2026 ஜனவரி 13 செவ்வாய் | வேத வாசிப்பு: மத்தேயு 6:19-21; 8:18-20

மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை (மத்தேயு 8:20).
“எனது சொத்துக்கள் யாவையும் என்னிடமிருந்து பறித்த என் உறவினர் இருக்கும் இடத்திற்கு நான் எப்படிப் போவது?” இந்தக் கேள்வியைக் கேட்ட சகோதரியின் பேச்சிலே ஆத்திரம் மாத்திரமல்ல, ஒருவித வைராக்கியமும், கூடவே உலக சொத்து மீதான பற்றுதலும் தெரிந்தது. இத்தனைக்கும் அவர் ஒரு உதவியற்ற நோயாளி.
ஆண்டவரைப் பின்பற்ற விரும்பிய ஒரு வேதபாரகன் இருந்தான். அவன் சட்டதிட்டங்களைக் கற்றுக்கொடுத்து, ஒரு பதவியிலே மதிப்போடு வாழ்ந்தான். இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறான். அவரைப் பின்பற்றுவதற்கு அவன் கொடுக்கவேண்டிய விலை என்னவாக இருக்கும் என்று இயேசு அவனிடம் விளக்கினார். “என் வீடு” என்று சொல்லுவதற்கே ஆண்டவருக்கு ஒரு இடம் இருக்கவில்லை. உலக வாழ்விலே இயேசுவுக்கென்று எதுவுமே இருக்கவில்லை. தமது பரம பிதாவின் சித்தத்தை நிறைவேற்றவேண்டும் என்ற ஒரே வாஞ்சை இயேசுவின் இருதயத்தை நிறைத்திருந்தது.
இயேசு, அவர் ‘ஐசுவரிய சம்பன்னர்’ என்று வேதவாக்கியம் கூறுகிறது. தமது பரலோக செல்வம், புகழ், மகிமை யாவையும் விட்டு நமக்காகத் தம்மைத் தாழ்த்தி, இந்த உலகுக்கு வந்தார். அவர் பிறப்பதற்குக்கூட தங்குமிடம் கிடைக்கவில்லை. இவரைப் பின்பற்றவது என்றால் அவர் நடந்தபடியே நாமும் நடக்கவேண்டும். அவர் நடந்த பாதை, அது பிதாவின் சித்தத்தின் பாதை. இயேசு எப்படி தமக்காகப் பிதா கொண்டிருந்த சித்தத்தைச் செய்வதையே நோக்காகக் கொண்டிருந்தாரோ, அப்படியே பிதா கொண்டிருக்கும் சித்தத்தை நாம் அறிந்து, அதன் பாதையில் நடப்பதே நமக்கான பொறுப்பாகும். இது சாதாரண விஷயம் அல்ல. ஆனாலும் நமது இருதயம் எப்போதும் தேவனைப் பிரியப்படுத்தும் நினைவினால் நிறைந்திருக்குமானால் நமது வாழ்வுப் பாதையும் நிச்சயம் மாறும். இன்று நம்மை நிறைத்திருக்கிற காரியங்கள் எவை?
கிறிஸ்துவைப் பின்பற்றுவது என்பது சொகுசான வாழ்வல்ல; அது பெறுமதி மிக்க வாழ்வு. சிலவேளை நமது பிரபல்யம், சிநேகிதம், ஓய்வுநேர அற்ப சந்தோஷங்கள், உலக நாகரீகக் கவர்ச்சிகள், அலங்காரங்கள், நம்மைச் சந்தோஷப்படுத்தும் சில பழக்க வழக்கங்கள் இப்படியாக பலவற்றைக் கொடுத்து, தியாகம் செய்தே கிறிஸ்துவைப் பின்பற்றுவதன் ஒப்பற்ற மகிழ்ச்சியை நாம் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். வீடு, வாசல், சொத்து, சுகம் அவசியம்தான்! ஆனால் அவற்றின்மீதான பற்றுதல் தடையாக மாறும். கிறிஸ்துவின் மெய் சீஷனாக வாழ்வதன் பெறுமதி மிக உயர்ந்தது. வாழ்வின் அடிப்படைத் தேவைகளைக் கூட விட்டுவிட்டு, தலைசாய்க்க இடமின்றி வாழ்ந்து, பிதாவின் சித்தம் ஒன்றையே சிந்தித்து, அதை நிறைவேற்றி முடித்த கிறிஸ்து நமது வாழ்வில் பிரதிபலிக்கிறாரா? சிந்திப்போம்.
ஜெபம்: “நல்ல ஆண்டவரே, பிதாவின் சித்தம் ஒன்றையே சிந்தித்து நிறைவேற்றி முடித்த உம்மைப் பின்பற்றும் நாங்கள் உலககாரியங்களில் வழுவிப் போய்விடாதபடி உம்மையே நோக்கி ஓட எங்களுக்கு உதவும். ஆமென்”.