இச்சித்தார்கள்

தியானம்: 2026  பிப்ரவரி 4 புதன் | வேத வாசிப்பு: எண்ணாகமம் 11:1-20

YouTube video

அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள் இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக் கொடுப்பவர் யார்? (எண்ணாகமம் 11:4).

திருப்தியுள்ள மனமே மகிழ்ச்சியான வாழ்வின் இரகசியம். இந்த வாசகம் மிகவும் உண்மையானதும், ஏற்றுக்கொள்ளக்கூடியதுமாகும். ஆனால் நாம் பல வேளைகளில் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எவ்வளவுதான் ஆசீர்வாதங்களைப் பெற்றிருந்தாலும், அதை மறந்தவர்களாய், பின்னிட்டுப் பார்த்து, பல காரியங்களைக் குறித்து முறையிடுகிறவர்களாகவும், முறுமுறுக்கிறவர்களாகவுமே இருக்கிறோம்.

இஸ்ரவேலரும் அன்று, தேவன் தங்களை வழிநடத்தி வந்த காலங்களையும், அவரது அற்புதமான வழிநடத்துதல்களையும், ஒரு நிமிடத்தில் மறந்து போனவர்களாய், இச்சையென்ற கொடிய பாவத்துக்குள் விழுந்தார்கள். எகிப்தில் தங்களது வாய்க்கு ருசியாய் உண்ட உணவுகளை நினைத்தார்கள். இறைச்சி வேண்டும் என்று அழுதார்கள். இஸ்ரவேலருக்குள்ளே சில அந்நிய ஜனங்களும் இருந்தார்கள். அவர்கள் மிகுந்த இச்சைக்குள்ளானார்கள். அவர்களோடு சேர்ந்து இவர்களும் அந்தப் பாவத்துக்குள் விழுந்தார்கள். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, பகலில் மேகஸ்தம்பமாய், இரவில் அக்கினிஸ்தம்பமாய் பாதுகாத்து வழிநடத்தி வந்த தேவன், பசிக்கு மன்னாவைக் கொடுத்தவர், அவர்களுடைய அனைத்துத் தேவைகளையும் சந்திக்க வல்லவர் என்பதை மறந்து போனார்கள். இப்பொழுது தங்கள் தங்கள் கூடார வாசலில் நின்று அழுகிறார்கள். இது தேவனுக்கு மிகுந்த கோபத்தை உண்டுபண்ணியது. மோசேக்கும் இது பொல்லாப்பாய்க் கண்டது. இப்போது மோசே தேவனிடத்தில் முறையிடுகிறான். “இந்த ஜனங்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லும்படிக்கு நீர் எனக்கு உத்தரவு கொடுத்தீர். சிறு குழந்தைகளைப்போல இவர்களைச் சுமந்துகொண்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இடத்துக்குப் போகும்படிக்குச் சொன்னீரே, அதற்கு இவர்களை நானா கர்ப்பந்தரித்தேன்” என்று மோசே தேவனிடத்தில் புலம்புவதைக் காண்கிறோம். அவ்வளவுக்கு தங்களை வழிநடத்திவந்த தேவனை அவர்கள் துக்கப்படுத்தி, வழிகாட்டியாகிய மோசேக்குக் கிலேசத்தை உண்டுபண்ணும் அளவுக்கு ஜனங்கள் முறைகேடாக நடந்துகொண்டார்கள்.

அவர்களுடைய இச்சையினாலேயே அழிந்துபோகும்படிக்கு, தேவனுடைய கோபம் அவர்கள் மேலே வந்தது. இறைச்சிக்காக அழுதவர்கள் தெவிட்டிப் போகும்படி சாப்பிட்டார்கள். அவர்கள் பற்கள் நடுவில் இருந்த இறைச்சியை மென்று விழுங்குவதற்கு முன்னரே கர்த்தருடைய கோபாக்கினையினால் அழிந்துபோனார்கள். இன்றைக்கும் நாம் அளவுக்கு மீறின ஆசைகளால் இச்சித்துக்கொண்டு வாழுகிறோமா? இன்றே மனந்திரும்புவோம். இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம் பண்ணியதால் அந்த ஸ்தலத்திற்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான் (எண்ணா.1:34).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, உலக இச்சைக்கு விலகி ஆவியின் கனியாகிய சாந்தகுணத்தை தரித்துக்கொள்ள எங்களுக்கு உதவியருளும். ஆமென்.