கர்த்தரின் நாமம்!

தியானம்: 2026  பிப்ரவரி 9 திங்கள் | வேத வாசிப்பு: 1 சாமுவேல் 17:41-50

YouTube video

… கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் (மாற்கு 11:9).

யேகோவாயீரே. யேகோவா ஷாலோம் ஆலோசனைக் கர்த்தர், அதிசயமானவர், இப்படியாகக் கர்த்தருடைய நாமம் பலவிதத்தில் பழைய ஏற்பாட்டிலும், அதேபோல் கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர், இயேசுவின் நாமத்தில் முழங்கால் யாவும் முடங்கும், என் நாமத்தினாலே அற்புதங்களைச் செய்வார்கள், என்றெல்லாம் புதிய ஏற்பாட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கர்த்தரின் நாமம் வல்லமையுள்ளது. பத்துக் கற்பனைகளில் என்னுடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக என்பதை மூன்றாம் கட்டளையாகவும் தேவன் மோசேக்குக் கொடுத்திருந்தார்.

இந்த பரிசுத்த நாமத்தை நிந்திப்பது என்பது கோலியாத்துக்கு ஒரு அற்பமான காரியம். ஏனெனில் அவன் தேவனை அறியவுமில்லை. அவரோடு அவனுக்கு எவ்வித உறவும் இல்லை. ஆனால் தாவீதுக்கு தேவனுடைய நாமம் நிந்திக்கப்படுவதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் தன் தேவன் யார் என்பதை தாவீது அறிந்திருந்தான். அந்த தேவனுடைய நாமத்தின் வல்லமையையும் அவன் உணர்ந்திருந்தான். அவரோடு அவன் உறவு கொண்டிருந்தான். அதனால் அவரது நாமம் ஒரு அந்நியனால் உதாசீனம் செய்யப்பட்டபோது, அவனுக்கு எதிராக யுத்தம் புரிய தாவீது துணிந்து எழுந்தான். தாவீதைப்போல, கர்த்தரோடு உறவாடுகிறவனால்தான் கர்த்தருடைய நாமத்தின் வல்லமையையும் உன்னதத்தையும் உணர்ந்துகொள்ள முடியும். கர்த்தருடைய நாமத்தை நாகூசாமல் உச்சரிக்கின்ற நமது காரியம் என்ன? கர்த்தருடைய நாமம் நிந்திக்கப்படும் வேளைகளில் நம்முடைய பங்கு என்ன? சிந்திப்போம்.

இயேசுவின் நாமத்தினால் பவுல் செய்த அற்புத அடையாளங்களைப் பார்த்த சிலர், தாங்களும் அந்த நாமத்தினால் பொல்லாத ஆவிகளைத் துரத்த எண்ணி, பொல்லாத ஆவி பிடித்த ஒருவனுக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது அம்மனிதனுக்குள் இருந்த பொல்லாத ஆவி, “இயேசுவையும் தெரியும், பவுலையும் தெரியும், நீங்கள் யார்“ என்று சொல்லி அவர்கள்மீது பாய்ந்து அவர்களைக் கீறிப்போட்டதையும் அவர்கள் நிர்வாணிகளாய் அவ்விடத்தை விட்டு ஓடிப்போனதையும் நாம் வேதத்தில் வாசிக்கிறோம் (அப். 19:13-16) தேவனுடைய நாமத்தினால் உங்களுக்கு விடுதலை வேண்டுமானால் அவரது நாமத்தை நீங்கள் நம்பி விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரது நாமம் வல்லமையுள்ளது. அது வல்லமையான காரியங்களைச் செய்யும்.

ஜெபம்: கிருபையுள்ள கர்த்தாவே, உமது நாமத்தினால் விடுதலையடைந்த நான், உமது நாமம் நிந்திக்கப்படாதபடிக்கு நல்லதொரு வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும் ஆண்டவரே, ஆமென்.