ஸ்தோத்திர பலி!

தியானம்: 2026  பிப்ரவரி 13 வெள்ளி | வேத வாசிப்பு: எண்ணாகமம்; 28:1-31

YouTube video

… குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு (எண்ணா. 28:2).

இயேசு குணமாக்கிய பத்து குஷ்டரோகிகளின் கதை நமக்குத் தெரிந்ததே. பத்துபேர் அவரால் குணமானார்கள். ஆனால் நன்றிசொல்ல ஒருவனே திரும்பி வந்தான். இயேசு அவனைப் பார்த்து, மற்ற ஒன்பது பேரும் எங்கே என்றார். நாமும் பல தடவைகளிலும் இந்த ஒன்பது குஷ்டரோகிகளைப் போலவே நடந்துகொள்ளுகிறோம்.

இன்றைய தியானப்பகுதியின் அதிகாரம் முழுவதுமே, தகனபலிகளைக் குறித்தும், காணிக்கைகளைக் குறித்தும், பானபலியைக் குறித்தும் இப்படியாக, தேவனுக்கு செலுத்தும் சகல காரியங்களைக் குறித்தும் எழுதப்பட்டுள்ளது. காலையில் ஒரு ஆட்டுக்குட்டியை, மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியை செலுத்துவதும், அத்தோடு போஜனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தக்கடவீர்கள் என்கிறார் கர்த்தர். இது சீனாய் மலையில் கட்டளையிடப்பட்ட நித்திய சர்வாங்க தகனபலி. இது கர்த்தருக்கு சுகந்த வாசனைக்கான தகனபலி. இது கர்த்தருக்குப் பிரியமான பலி.

இன்று நாம் இந்தத் தகனபலிகளோ, பானபலிகளோ அல்லது எந்தவிதமான பலிகளோ செலுத்துவது கிடையாது. நாம் செலுத்தும் ஒரே பலி ஸ்தோத்திரபலி மாத்திரமே. அதை நாம் எப்போது எப்படியாகச் செலுத்துகிறோம். தேவன் அதைச் சுகந்த வாசனையாக முகர்கிறாரா? அன்று காயீனும், ஆபேலும் தேவனுக்குக் காணிக்கை கொண்டுவந்தபோது, காயீனின் காணிக்கையைத் தேவன் அங்கீகரிக்கவில்லை. ஆனால் ஆபேலின் காணிக்கையோ அவருக்குப் பிரியமாய் இருந்தது. அதுபோலவே நாம் தேவனுக்கு ஏறெடுக்கும் துதி ஸ்தோத்திரமும் அவருக்குப் பிரியமாய் இருக்கிறதா என்பதை நம்மை நாமே ஆராய்ந்து பார்த்துக் கண்டுபிடிப்போம்.

ஆண்டவருக்கு, “துதிகளின் மத்தியில் வாசம் பண்ணுகிறவர்” என்ற நாமம் உண்டு. ஆனால் நாம் எதற்காக அவருக்குத் துதிகளை ஏறெடுக்கிறோம். அவருடைய கிருபை, தயவை அல்லது அவரது ஈவுகளை நினைந்தா? அல்லது நமது உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களை நினைத்தா? உன்னதமானவரோடு சரியான உறவில் இருப்பவன் அவருடைய மகத்துவங்களையும், ஈவுகளையும் நினைந்து தேவனைத் துதிப்பான். ஆனால் உலக ஆஸ்திகளுக்காக தேவனில் நம்பிக்கை கொண்டிருப்பவன் தனது உலக ஆஸ்திகளுக்காகவே தேவனுக்கு நன்றி சொல்லுவான். நாம் எந்த ரகம்? ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம் (எபி.13:15 ).

ஜெபம்: துதிக்குப் பாத்திரராகிய கர்த்தாவே, எங்களது உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை தேவரீர் சுகந்தவாசனையாக ஏற்றுக்கொண்டு எங்களை ஆசீர்வதியும். ஆமென்.