பரிசுத்த வாழ்வின் ஆசி

தியானம்: 2026  பிப்ரவரி 21 சனி | வேத வாசிப்பு: உபாகமம் 7:11-26

YouTube video

கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும் … அடிமைத் தன வீடாகிய எகிப்தினின்றும் … உங்களை மீட்டுக்கொண்டார் (உபாகமம் 7:8).

ஆண்டவரின் வார்த்தைகளில் ஒவ்வொரு ஆசீர்வாதம் அல்லது வாக்குத் தத்தங்களுக்கு முன்பதாக ஒரு கட்டளையோ அல்லது ஒரு நிபந்தனையோ இருப்பதை கவனிக்க முடியும். ஆனால் பொதுவாக நாம் அந்தக் கட்டளை, நிபந்தனைகளைப் புறம்பே தள்ளிவிட்டு, அவரது ஆசீர்வாதம் அல்லது வாக்குத்தத்தத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக்கொள்வோம். இன்றைய வாசிப்புப் பகுதியில், “எனது கட்டளைகளை நீ கேட்டு, அவற்றைக் கைக்கொண்டால், அப்பொழுது நான் உன்னுடைய பிதாக்களுக்குப் பண்ணிக்கொடுத்த உடன் படிக்கையை நினைவுகூர்ந்து அதன்படி உனக்கு சகலவற்றையும் ஆசீர்வதித்துக் கொடுப்பேன்” என்கிறார் கர்த்தர். “உன்னில் அன்புவைத்து, உன்னை ஆசீர்வதித்து, பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசத்தில் உன்னைத் திருப்தியோடு வாழவைப்பேன்” என்கிறார்.

“உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் விளைச்சலையும் வர்த்திக்கப் பண்ணுவேன். சகல ஜனங்களுக்குள்ளும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உங்களுக்குள்ளும், உங்கள் மிருகஜீவன்களுக்குள்ளும் ஆணினாகிலும், பெண்ணினாகிலும் மலடு இருப்பதில்லை. சகல நோய்களிலிருந்தும் உன்னை விலக்கிக் காப்பார். எகிப்தியருக்கு வந்த எந்த ரோகமும் உனக்கு வராது” என்றெல்லாம் கர்த்தர் வாக்களிக்கிறார். தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குக் கர்த்தர் எத்தனை பெரிய ஆசீர்வாதத்தைக் கொடுக்க ஆயத்தமாய் இருக்கிறார். ஆனால், மக்கள் அவருக்குப் பரிசுத்த ஜனமாய், அவருக்குள் பரிசுத்த வாழ்வு வாழுகிறவர்களாக இருக்கவேண்டும். அப்பொழுது இத்தனை ஆசிகளையும் கொடுக்க கர்த்தர் ஆயத்தமாக இருக்கிறார். “கர்த்தர் அருவருக்கும் எந்தக் காரியங்களையும் நீ உன் நடுவில் வைக்கவேண்டாம். அவற்றை சீ போ என்று துரத்திவிடுவாயாக” என்றும் எழுதப்பட்டுள்ளது.

இன்றும் ஆண்டவரின் ஆசீர்வாதங்கள் நமக்கு எப்போதும் வேண்டும் என்றே நாம் விரும்புவதுண்டு. அதேநேரம் தேவன் வெறுக்கும் காரியங்களையும் நாம் செய்து கொண்டும், அவருக்குப் பிரியமற்ற காரியங்களை நமக்குள் வைத்துக் கொண்டும் அவருடைய ஆசியைத் தேடுவது எப்படி? உலகத்துக்கும் தேவனுக்கும் ஒரே நேரத்தில் முக்கியத்துவம் கொடுக்கமுடியாது. இரண்டு எஜமான்களுக்கு ஒரே நேரத்தில் ஊழியம் செய்யமுடியாது. தேவனுக்குப் பிரியமானபடி வாழ்ந்து அவருடைய ஆசிகளைப் பெறுவோமாக. உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பு இல்லை (1யோவா.2:15)

ஜெபம்: அன்பின் தகப்பனே, இருமனமுள்ளவர்களாய் நாங்கள் வாழாதபடி உம்மை கனப்படுத்தி, உமக்குப் பிரியமாய் வாழ்ந்து உம்முடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள கிருபை செய்யும். ஆமென்.