ஆயத்தமுள்ள வாழ்வு!
தியானம்: 2026 பிப்ரவரி 23 திங்கள் | வேத வாசிப்பு: நீதிமொழிகள் 6:6-11

சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள் (நீதி.6:6)
பல எறும்புகள் சேர்ந்து ஒரு உணவைச் சுமந்துகொண்டு தங்கள் இருப்பிடத்திற்குச் செல்ல முற்பட்டன. ஒரு கதவுக்குக் கீழாக அதைச் சுமந்து செல்வதற்கு மிகவும் பிரயாசப்பட்டன. அது முடியாததாக இருந்தது, ஆனாலும் அவைகள் அதை விட்டுவிடவில்லை. பலவாறாக முயற்சி செய்து ஒருவாறு அதைக் கதவுக்குக் கீழாகக் கொண்டுசென்றன. இதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நம்மோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது எறும்பு என்பது மிகவும் அற்பமான ஒரு பிராணி. ஆனால் அதற்கு இருக்கும் சுறுசுறுப்பும், விடாமுயற்சியும் வியக்க வைக்கிறது.
இங்கு சிறந்த ஞானியென்று அறிமுகம் பெறும் சாலொமோன் இவ்விதமாக எறும்பைக் குறித்து எழுதுகிறார்: “சோம்பேறியே! நீ எறும்பினிடத்திற் போய் அதன் வழிகளைப் பார்த்து ஞானத்தைக் கற்றுக்கொள்.” அது கோடை காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்து வைக்கும். எறும்பு தான் சேர்த்து வைத்திருக்கும் தானியத்தைப் பாதுகாப்பதற்கு இடம் மாறிப்போகும். மழை காலத்தில் தனக்கு ஆபத்து வந்து விடும் என்றறிந்து, தனது தானியத்தை எடுத்துக்கொண்டு இடம்மாறும். எறும்பு இடம் மாறுவதைப் பார்த்து, மழை வரப்போகிறது என்றும் சொல்லுவார்கள்.
பிரியமானவர்களே, மழைகாலத்துக்கு முன்பு தனக்குத் தேவையான உணவை ஆயத்தத்தோடு சேர்த்துவைக்கும் எறும்பைப்போல நமது வாழ்வில் எதிர்நோக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் நாம் தாக்குப்பிடிக்கும் வண்ணம் நமது இருதயத்தை தேவனுக்குள்ளாக ஆயத்தப்படுத்தி வைக்கவேண்டும். சோதனை வந்தபின் தேவனை நோக்கி நாம் வேண்டுவதிலும் பார்க்க, அதற்கு முன்னரே அவருடைய சமுகத்திலும், அவருடைய வார்த்தையிலும், அவருடைய உறவிலும் நம்மை ஆயத்தப்படுத்திப் பெலனாக வைத்திருப்பதே, ஆயத்தமுள்ள வாழ்வுக்கு உகந்ததாகும். எறும்பிலும் பார்க்க, நாம் எவ்வளவு காரியங்களில் விசேஷித்தவர்கள். தேவன் நம்மை தமது சாயலிலும், ரூபத்திலுமே உருவாக்கினார். அவரது சாயலில் உருவாக்கப்பட்ட நாம் அவருக்கு எவ்வளவு விசேஷித்தவர்களாய் இருக்கிறோம் என்பதை உணருகிறோமா? ஆயத்தமில்லாத வாழ்வில் பிசாசானவன் இலகுவாக நுழைந்துவிடுவான். இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கான கர்த்தருடைய வார்த்தையே, சத்துருவை எதிர்த்து நொருக்க உதவிடும். “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.” யோவான் 1:12.
ஜெபம்: கர்த்தாவே, நாங்கள் ஞானஇருதயமுள்ளவர்களாகும்படி எங்கள் நாட்களை எண்ணும் அறிவை கிருபையாய் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.