ஆவியானவரால் வழிநடத்தப்பட்டார்

தியானம்: 2026 மார்ச் 1 ஞாயிறு | வேத வாசிப்பு: மத்தேயு 4:1-11

YouTube video

அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார் (மத்.4:1).

இம்மானுவேலராய் நம்மோடுகூட இருந்து வழிநடத்தின தேவாதிதேவன் இந்தப் புதியமாதத்திற்குள் பிரவேசிக்க உதவி செய்தபடியால் கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துவோம். உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்க காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர் (யோபு 5:24) குறைவுகளை நிறைவாக்குகிற கர்த்தர்தாமே நமக்கு வேண்டிய புதிய கிருபைகளைத் தந்து வழிநடத்துவாராக.

ஒருமுறை கிறிஸ்துமஸ் ஆராதனை முடிந்து வீடு திரும்பியபோது, எனது சிறிய மகள், “இன்னும் மூன்று மாதத்தில் ஈஸ்டர் வந்துவிடும்தானே” என்றாள். அந்த வயதில் அவளுக்கு என்ன புரிந்திருக்குமோ தெரியாது; ஆனால், அவள் கவனித்ததைக் கொண்டு இப்படி ஒரு அறிக்கையை விடுத்தாள். இது பொய்யல்ல. இந்த லெந்து நாட்களிலாகிலும் நமது வாழ்க்கையில் ஒரு மாற்றம் வரவேண்டுமென்று வாஞ்சிப்போமாக.

லெந்து நாட்களில், ஆண்டவரின் நாற்பது நாட்கள் உபவாச காலங்களை கூடுதலாக நினைத்துப் பார்ப்பதுண்டு. வாழ்க்கையிலே பிரச்சனைகள் வந்து விட்டால் உபவாசித்து நாம் ஜெபிப்போம் என்று எண்ணுவதுண்டு. ஒருமுறை இயேசுவிடம் சீடர்கள் வந்து, தங்களால் ஏன் பிசாசைத் துரத்த முடியாமற் போயிற்று என கேட்டனர். இயேசுவோ, “இவ்விதமான பிசாசுகளை ஜெபத்தினாலும், உபவா சத்தினாலுமேயன்றி துரத்த முடியாது” என்கிறார். இதை கருத்திற் கொண்டு சிலர் அதிக சோதனை வரும்போது, இது பொல்லாத பிசாசின் தந்திரமே; இதை விரட்ட உபவாசிக்கவே வேண்டும் என்று உபவாசிப்பதுண்டு. இவைகள் எல்லாமே நல்ல காரியங்கள்தான். உபவாசிப்பது எப்போதும் நமது சரீரத்தை ஒடுக்கி ஆவியை உற்சாகப்படுத்தி தேவனோடுள்ள உறவில் வளரச்செய்யும். ஆனால் இன்றைய தியானப்பகுதி, இயேசு, பிசாசினால் சோதிக்கப்படுவதற்கென்றே ஆவியானவர் அவரை வனாந்தரத்துக்குக் கொண்டு சென்றார் என்பதைக் கூறுகிறது. ஆண்டவர் நாற்பது நாட்கள் இரவும் பகலும் புசியாது உபவாசத்தில் இருந்தார். அதன் பின்னர் அவருக்குப் பசியுண்டானபோது, அங்கே உணவு கிடைக்கவில்லை. பதிலாக சோதனைக்காரன் வந்து நின்றான் என்று காண்கிறோம். அவருக்கு உண்டான பசியைக்கொண்டே தனது முதலாவது சோதனையை அவரை நோக்கி அவிழ்த்து விடுகிறான். ஆண்டவரும் தேவனுடைய வார்த்தையைக் கொண்டே அவனுக்குப் பதிலளித்தார். இயேசுவானவர் தமது பணியை ஆரம்பிக்கும் முன்பதாக, ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றது மாத்திரமல்ல, பிசாசையும் அவனது சோதனைகளையும் ஜெயித்தவராகவே தமது ஊழியத்தை ஆரம்பித்தார்.

நாமும் கூட தேவனுடைய அபிஷேகத்தை மட்டும் பெற்றுக்கொண்டால் போதாது; நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பிசாசானவனையும் ஜெயித்து ஜீவிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

ஜெபம்: கர்த்தாவே, இந்த லெந்து நாட்கள் வெறும் பட்டினியிருக்கும் உபவாச நாட்களாக மாத்திரம் இராமல் ஆண்டவரோடு நெருங்கிச் சேரும் நாட்களாக வாழ எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.