கர்த்தருக்குப் பயப்படும்படிக்கு…

தியானம்: 2026 மார்ச் 12 வியாழன் | வேத வாசிப்பு: உபாகமம் 28:58-68

YouTube video

கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு, … நியாயப்பிரமாண வார்த்தைகளின் படியெல்லாம் நடக்கக் கவனமாயிராவிட்டால் … (உபா.28:58).

இந்தப் பயம் என்பது, கர்த்தர் கொடுமைக்காரர் என்பதனால் உண்டாகும் பயம் அல்ல. அலுவலகத்தில் வேலை செய்யும்போது, நமது முதலாளியைக் கனப்படுத்தும் வகையில் அவருக்குப் பயப்படுவதாயின் என்ன செய்வோம்? அவருக்குப் பிரியமானபடி நடந்து, அவர் சொல்லாத பணிகளையும் செய்து, அவர் முன்னிலையில் நல்ல பெயர் எடுக்கவே பிரயாசப்படுவோம் அல்லவா!

இங்கே கர்த்தரைக் கனப்படுத்தும் வகையில் அவருக்குப் பயப்படும்படி கூறப்படுகிறது, தேவன் கேட்பதெல்லாம், இந்த நியாயப்பரமாண வார்த்தைகளின்படி நடக்கக் கவனமாயிரு என்பதேயாகும். இன்று அநேகர் நினைப்பதென்ன? கர்த்தருக்குப் பயப்படுவதென்றால், அவர் நம்மைத் தண்டித்து விடுவாரோ? அல்லது ஏதாவது எதிர்பாராத பிரச்சனையில் மாட்டிக்கொள்வோமோ என்றுதான் நினைத்து பயந்து நடுங்குகிறார்கள். ஆனால் அதுவல்ல காரியம், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவருக்குப் பயப்படும் பயம் என்கிறது வேத வாக்கியம். இஸ்ரவேலரை தேவன் எச்சரிக்கும்போது, நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடித்து நடக்காவிட்டால் உனக்கு சாபமும், வியாதியும் உண்டாகும்; தேவகோபாக்கினைக்கு ஆளாகுதலுக்கும் முகங்கொடுக்க வேண்டிவரும் என்பதே தேவனுடைய எச்சரிப்பாய் இருந்தது. ஆனால், இன்று நாம் வாழும் காலகட்டத்தில் தேவனுடைய வார்த்தையை விட்டு நாம் விலகும்போது, நாமே நமக்கு அழிவைத் தேடிக்கொள்கிறோம் என்பதுவே உண்மை.

பிரியமானவர்களே, நாம் தேவனுடைய வழியை விட்டு விலகிப் போகாத படிக்கு எச்சரிக்கவே தேவன் தம்முடைய வார்த்தையை நமது கால்களுக்குத் தீபமாகவும், நமது பாதைக்கு வெளிச்சமாகவும் வைத்திருக்கிறார். பாதையில் வெளிச்சமும், கால்களண்டையில் தீபமும் இருக்கும்போது நாம் வழி விலகியோ, பாதை மாறியோ போகமுடியாது. அதுபோலவே வார்த்தையாகிய அந்த ஒளியில் நாம் நடக்குமிடத்து தேவனை விட்டு வழிவிலகியோ, பாதை மாறியோ போகமாட்டோம் என்பது திண்ணம். அப்போது நாம் அவருக்குப் பயந்தவர்களாய் ஜீவிப்பதும் உறுதி.

“கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங்.1:2). இன்று கர்த்தருடைய வேதத்தை வாசிக்கவும் தியானிக்கவும் கூடாதபடிக்கு நம்மை தடுக்கும் கற்கள் எத்தனையோ நம் முன்பாக உள்ளது. தொலைபேசியில் ஜெபித்தால் போதும் என்று நினைக்க வேண்டாம். தேவன் நம்முடன் அவர் பேசவேண்டுமானால் நாம் தான் அவரது பாதத்தில் அமரவேண்டும் என்பதை மறவாதிருப்போமாக.

ஜெபம்: “அன்பின் தேவனே, தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்ட மரியாளைப் போல உமது பாதத்தில் காத்திருக்க உமதருள் தாரும். ஆமென்.”