மனுஷருக்குப் பயப்படும் பயம்
தியானம்: 2026 மார்ச் 14 சனி | வேத வாசிப்பு: நீதிமொழிகள் 29:1-27

மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான் (நீதி.29:25).
இன்று நாம் தேவனுக்குப் பயப்படுவதைவிட மனுஷருக்கே அதிகமாகப் பயப்படுகிறோம். மனுஷரைப் பிரியப்படுத்தவே நாம் பல காரியங்களையும் செய்ய எத்தனிக்கிறோம். அதனால் பலவேளைகளிலும் நாம் வேஷதாரிகளாயும் மாறிவிடுவதுண்டு. மனுஷருக்கு முன்பாக நல்லவர்கள்போல காட்டுபவர்களும் உண்டு.
இங்கே, மனுஷருக்குப் பயப்படும் பயம், அது நமக்குக் கண்ணியைத்தான் வருவிக்கும். கர்த்தரை நம்பி அவருக்குப் பயந்திருக்கிறவனோ உயர்ந்த அடைக்கலத்தில் இருப்பான் என்று தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது. ஆண்டவர் இயேசுவின் காலத்தில் பரிசேயரும், வேதபாரகரும் இப்படியாக வெளிவேஷதாரிகளாகவே இருந்தார்கள். தங்களுடைய நீதி விளங்கும்படிக்கு மனுஷருக்கு முன்பாக தங்களைப் பக்திமான்களாகக் காட்டிக்கொண்டு இருந்தார்கள். அவர்களைப் பார்த்து இயேசு, “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை போல இருக்கிறீர்கள்” என்று கடிந்துகொள்வதைக் காண்கிறோம். பாத்திரத்தின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்கிறீர்கள், உட்புறமோ அழுக்காக இருக்கிறது. அதுபோல உங்கள் வாழ்வும் இருதயமும் அக்கிரமத்தால் நிறைந்திருக்கிறது என்று ஆண்டவர் சுட்டிக்காட்டுவதையும் காண்கிறோம்.
நாம் மனுஷருக்குப் பயந்து அவர்களைப் பிரியப்படுத்த ஒரு வெளி வேஷமான வாழ்வை வாழ்வதைத் தேவன் வெறுக்கிறார். நாம் தேவனுக்கு முன்பாக அவருக்குப் பிரியமான வாழ்வை வாழவே அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவனுக்குப் பிரியமாய் அவருக்கு உண்மையாய் வாழும்போது, சில வேளைகளில் மனுஷரின் வெறுப்பைச் சம்பாதிக்க நேரிடலாம். மனுஷரால் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம். நமது குடும்பத்தில் கூட பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டி வரலாம். ஆனால், எல்லா சூழ்நிலைகளிலும் தேவன் நமக்குத் துணையாகவும், பெலனாகவும் இருக்கிறார் என்பதுதான் உண்மை.
அன்று யோசேப்பு போத்திப்பாரின் மனைவியைத் திருப்திப்படுத்தி சுகமாக வாழ எண்ணவில்லை. மாறாக, அவன் தேவனுக்குப் பயந்ததினால் பாவ சூழ்நிலையிலிருந்து தப்பி ஓடினான். ஆனால், அவனுக்குக் கிடைத்தது, வரவேற்பல்ல, சிறைவாசமே. ஆனாலும் சிறையிலும் கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அதுதான் கர்த்தர் யோசேப்புக்குக் கொடுத்த கனம். ஏற்றகாலத்தில் கர்த்தர் அவனை உயர்த்தினார். இன்று நமது வாழ்வில் நாம் யாரைப் பிரியப்படுத்தி வாழப்போகிறோம்? “தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்” (நீதிமொழிகள் 8:13).
ஜெபம்: “பயபக்திக்குரியவரே, கர்த்தருக்கு பயப்படும் பயத்தால் நாங்கள் வாழும்போது பிரச்சனைகள் வந்தாலும் எங்கள் பட்சத்தில் நீர் எங்கள் துணையாயிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறோம். ஆமென்.”