எனக்குப் பயப்படும் பயம் எங்கே?

தியானம்: 2026 மார்ச் 15 ஞாயிறு | வேத வாசிப்பு: மல்கியா 1:1-14

YouTube video

… நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே? … (மல்கியா 1:6).

கர்த்தர் அன்புள்ளவர், அவர் கிருபையுள்ளவர், இரக்கமுள்ளவர் இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டு பலவேளைகளிலும் நாம் அவருக்குக் கொடுக்க வேண்டிய கனத்தையும், மகிமையையும் கொடுக்கத் தவறிவிடுகிறோம். “அதில் என்ன கர்த்தருக்குத் தெரியும்தானே, அவருக்கு என்னுடைய நிலைமை புரியும்தானே” என்று சாக்குச் சொல்லித் தப்பிவிடுகிறோம்.

இங்கே மல்கியா தீர்க்கன்மூலம் கர்த்தர் கேள்வி கேட்கிறார். யாரிடத்தில் கேட்கிறார்; அவருக்குப் பணிவிடை செய்கிற ஆசாரியரிடத்திலேயே கேட்கிறார். “நீங்கள் ஊனமானதையும் சொத்தையானதையும் எனது பலிபீடத்தில் பலியிட்டுவிட்டு, அது பொல்லாப்பு இல்லை என்கிறீர்கள். உங்கள் அதிபதிக்கு இப்படியாகச் செய்தால் அவன் உங்கள் மேல் பிரியமாய் இருப்பானோ” என்று கர்த்தர் கேட்கிறார். “எனது பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறீர்கள். பின்பு எதினாலே உம்மை அசட்டை பண்ணினோம் என்கிறீர்கள். நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே?” என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டை பண்ணுகிற ஆசாரியரைக் கேட்கிறார்.

நாமும் பலவேளைகளிலும் இப்படியாகவே தேவனுடைய அநேக கட்டளைகளை அசட்டை பண்ணினவர்களாய் நடந்துகொண்டு, எங்கே? எப்போது? என்ன செய்தோம்? என்று அசட்டையாய் கேள்விகளைக் கேட்பதுண்டு. அவருடைய இரக்கங்களையும், கிருபைகளையும் நாம் அசட்டை பண்ணி நமது இஷ்டம்போல் வாழக் கற்றுக்கொண்டோம். பின்னர் பிரச்சனை என்று வரும்போதுதான் ஆண்டவரிடம் மீண்டும் ஓடி வருவோம். நாம் உண்மையிலேயே கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களாயின், அவருடைய கட்டளைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழக் கற்றுக்கொள்வோம். அதை யாரும் நமக்குச் சொல்லித்தரத் தேவையில்லை. அது நமது கரங்களிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. அதைத் தினமும் வாசித்துத் தியானித்து நடக்க வேண்டியதே நமது பொறுப்பு.

அடுத்தது, நாம் பொல்லாப்புக்கு விலகி நடப்போம். எதுவெல்லாம் தேவனுடைய பார்வையில் பொல்லாப்பு என்று காண்கிறோமோ அவற்றையெல்லாம் விட்டு சரியான நீதியின் பாதையில் நடக்கக் கற்றுக்கொள்வோம். ஆண்டவரே, பொல்லாப்புக்கு என்னை விலக்கிக்காரும் என்று தினமும் ஆண்டவரிடம் மன்றாடுவோம். தேவபயமுள்ளவர்கள் பொல்லாப்பானவற்றிற்கு விலகி நடப்பார்கள். உமது வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன் (சங்.119:101).

ஜெபம்: அன்பின் தகப்பனே, தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழிவிலகுகிறவர்களின் செய்கையை வெறுத்து உம்மைப் பற்றிக்கொள்கிறேன். ஆமென்.