தேவனுக்குப் பயந்ததினால்…

தியானம்: 2026 மார்ச் 18 புதன் | வேத வாசிப்பு: யாத்திராகமம் 1:1-22

YouTube video

மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல் …. (யாத்திராகமம் 1:17).

நாம் வேலை செய்யும் இடத்திலோ, அல்லது ஏதாவதொரு பொறுப்பை நாம் செய்யும்போதோ, நமக்கு மேலே அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒரு காரியத்தைச் செய்யும்படி நம்மை நிர்ப்பந்திக்க நேரிட்டால் நாம் என்ன செய்கிறோம்? அவர்கள் பேச்சை எப்படி மீறுவது என்று சொல்லி, அது தவறு என்று தெரிந்தாலும் பலவேளைகளிலும் அதைத் துணிவோடு செய்துவிடுகிறோமா? இப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையிலே நமது கிறிஸ்தவ சாட்சியை எப்படிக் காத்துக்கொள்வது? சாட்சியா, வேலையா? என்று சிந்தித்துவிட்டு, வேலையைத் தக்க வைத்துக்கொள்வதற்காக, “ஆண்டவரே, இன்று என்னை மன்னியும்” என்று கூறி காரியத்தைப் பூர்த்தி செய்துவிடுவோரும் உண்டு.

இங்கே இதேபோல ஒரு சூழ்நிலைதான் எபிரெய மருத்துவச்சிகளுக்கு வந்தது. இஸ்ரவேலர் எகிப்திலே பலமாகப் பெருகினதைக் கண்ட புதிய பார்வோன், மருத்துவச்சிகளைக் கூப்பிட்டு, ஆண் பிள்ளைகள் பிறக்கும்போது உடனடியாக அவர்களை கொன்றுபோடும்படிக்குக் கட்டளையிட்டான். ஆனால் மருத்துவச்சிகளோ தேவனுக்கு பயந்ததினாலே இதைச் செய்ய துணியவில்லை. பார்வோன் கேட்டபோது, எபிரெய பெண்கள் மிகவும் பலமுள்ளவர்கள், நாம் போவதற்கு முன்னமே பிரசவித்து விடுகிறார்கள் என்று பொய்யைச் சொல்லித் தப்பித்துக்கொண்டார்கள். அவர்கள் ஆண் பிள்ளைகளையும் கொன்றுபோடாமல் காப்பாற்றினார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், அவர்கள் தேவனுக்குப் பயந்ததினால் இதைச் செய்தார்கள் என்பதேயாகும். இப்படிச் செய்வதினால் பார்வோன் தங்களுக்கு தண்டனை தரக்கூடும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும் பார்வோனுக்குப் பயப்படுவதிலும் பார்க்க அவர்கள் தேவனுக்குப் பயந்ததினால் நம்பிக்கையோடே இதைச் செய்தார்கள் என்றே சொல்லவேண்டும். தேவனும், மருத்துவச்சிகள் செய்த காரியத்தைக் கனப்படுத்தினார். மருத்துவச்சிகளுக்குத் தேவன் நன்மை செய்தார். அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படிச் செய்தார்.

ராஜ கட்டளையை மீறுவது என்பது அந்தக் காலத்தில் மிகவும் கடுமையான ஒரு தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்பட்டது. ராஜா கூப்பிட்டவுடன் வராததால் ராஜாத்தியான வஸ்தி அவளது ராணி ஸ்தானத்திலிருந்தே தள்ளப்பட்டாள் என்று வாசிக்கிறோம். ராஜாத்திக்கே இந்த நிலைமையென்றால் சாதாரணமான மருத்துவச்சிகள் எம்மாத்திரம்! ஆனாலும் அவர்கள் தேவாதி தேவனுக்கே பயந்ததினால் துணிவோடு இக் காரியத்தைச் செய்தார்கள். “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும், கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கப்படுவான்” (நீதி. 29:25).

ஜெபம்: “கர்த்தாவே, மனிதர்களைப் பிரியப்படுத்த உமது நாமத்தை நாங்கள் கனவீனப்படுத்தாதபடி, உமது நாமத்தை மட்டுமே நாங்கள் பிரஸ்தாபப்படுத்தி வாழ கிருபை செய்யும். ஆமென்.