தேவனுக்குப் பயந்திரு

தியானம்: 2026 மார்ச் 22 ஞாயிறு | வேத வாசிப்பு: லேவியாராகமம் 19:1-37

YouTube video

செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர் (லேவி.19:14).

ஒற்றுமையாக இருந்த இரண்டு குடும்பங்கள், திடீரென அடிதடி சண்டையில் பிரிந்துபோனார்கள். ஒரு குடும்பம் ஆலயத்தைவிட்டே தொலைந்தும் போனார்கள். இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தபோது, அந்த இரண்டு குடும்பத்தோடும் அதிக நட்பாக இருந்த ஒரு கிறிஸ்தவ சகோதரியே இதற்குக் காரணம் என்று கண்டறிய நேர்ந்தது. அதாவது ஒருவரைப் பற்றி மற்றவரிடம் புறங்கூறியதால் கடைசியில் இரண்டு குடும்பத்திற்கும் பகை வந்தது.

லேவியராகமம் 19ல் ஆண்டவர் அநேக கட்டளைகளை இஸ்ரவேலருக்கு கூறியுள்ளார். அதில் ஒன்றுதான் செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்பாக தடைக்கல்லை வைக்காமலும் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்பாயாக என்பதாகும். செவிடனுக்குக் காது கேட்காது, ஆகவே, அவனை நிந்திக்கக்கூடாது. அவனுக்கு கேட்காவிட்டாலும் அவனை உருவாக்கிய தேவனுக்குக் கேட்கும் அல்லவா? அதுபோல குருடனுக்குப் பார்க்கமுடியாது, அவனுக்கு முன்னால் தடைக்கல்லை வைத்தால் அவன் விழுந்துவிடுவான். அவனுக்குப் பார்க்க முடியாவிட்டாலும், அவனை உருவாக்கிய தேவனுக்குப் பார்க்கமுடியும் அல்லவா? ஆம், உண்மையில் நாம் தேவனுக்குப் பயந்தவர்களானால், அவர் அனைத்தையும் பார்க்கிறாரே என்ற உள்ளுணர்வு நமக்கு இருக்கும்; அப்படியானால் எப்படி இவ்விதமான காரியங்களில் ஈடுபடமுடியும்?

இன்று அநேகர் ஒளிப்பிடங்களில் தவறு செய்கிறவர்களாகவும், தவறிப்போகிறவர்களாகவும் இருக்கிறார்கள். பூனை பால் குடிக்கும்போது, தன்னை யாரும் பார்க்கவில்லையென்று எண்ணி கண்ணை மூடிக்கொள்ளுமாம். அதுபோலவே நாமும் பல வேளைகளிலும் கண்மூடித்தனமாக தவறுகளைச் செய்துவிட்டு, நம்மை யாரும் பார்க்கவில்லையென்று எண்ணி வாழுகிறோம். நம்மைத் தேவன் எந்நேரமும் பார்த்தவண்ணம் இருக்கிறார் என்ற உள்ளுணர்வு நமக்கு இருக்குமேயானால் நாம் இலகுவில் தவறிப்போகமாட்டோம். மற்றவர்கள் முன்னிலையில் அவர்களைப்பற்றிப் புகழ்ந்து பேசிவிட்டு, அவர்கள் போனதும், அவர்களைக்குறித்து அவதூறு பேசுகிறோம். அவர்களுக்கு அது தெரியாது என்று எண்ணுகிறோம். ஆனால் ஆண்டவர் அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை நாம் உணருகிறோமா? பிறரைப்பற்றி தவறான காரியங்களைச் சொல்லித் திரிகிறோம். அதைச் சொல்லுவது நாம் என்று அவர்களுக்குத் தெரியாது என்று எண்ணுகிறோம். ஆனால், தேவன் அதை அறிவார் என்று எண்ணத் தவறிவிடுகிறோம். “வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்கு வராத மறைபொருளுமில்லை” (லூக்.8:17). ஆகவே நாம் விழிப்புடன் வாழுவோமாக.

ஜெபம்: “அன்பின் கர்த்தாவே, ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நியாயத்தில் கொண்டுவந்த நிறுத்துகிற உமக்கு பயந்து வாழ உமது கிருபைகளைத் தந்தருளும். ஆமென்.