தீபமும் வெளிச்சமும்!
தியானம்: 2026 மார்ச் 24 செவ்வாய் | வேத வாசிப்பு: சங்கீதம் 119:105-112

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. (சங்.119:105).
இருளிலே வேலைபார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா? பொருள் இருக்கும் இடம் தெரிந்தால், சில வேளைகளில், அதை நாம் இருளில்கூட எடுத்துவிடலாம், எதற்காக மின்சாரத்தை வீணாக்கவேண்டும் என்று நாம் நினைக்கலாம். ஆனால், தேடி அலுத்துப்போய் ஸ்விட்ச் ஆன் பண்ணினதும் அப்பொருள் கண்முன்னாலேயே இருப்பதைக் கண்டு, பின்னர் ஏன் ஸ்விட்ச் ஆன் பண்ணினோம் என்று அலுத்துக்கொள்ளுவதும் அடிக்கடி நடப்பதுண்டு. ஆனால் ஒரு காரியத்தைச் செம்மையாகச் செய்வதென்றால் நிச்சயமாக வெளிச்சம் தேவையாக இருக்கிறது. அதுபோலவே இங்கே சங்கீதக்காரரும், தேவனுடைய வசனம் தன் கால்களுக்குத் தீபமாகவும், பாதைக்கு வெளிச்சமாகவும் இருப்பதாக கூறுகிறார். நாம் இருளிலே நடப்பது என்பது கடினம். வீதி விளக்குகள் இருந்தாலும் சில வேளைகளிலே நுணுக்கமாக குன்றுகளையும், குழிகளையும் பார்த்து நடப்பதற்கு, நமது கைகளில் ஒரு டார்ச்லைட் வெளிச்சம், அல்லது தீபம் தேவை. அதைக் காலடியில் அடித்துப் பார்த்து கவனமாக நாம் நடப்பதுண்டு. ஆம், பாதைக்குப் பெரிய வெளிச்சமும் தேவை, அதேவேளை கால்களுக்குத் தீபம்போல சிறிய வெளிச்சமும் வேண்டும்.
கர்த்தருடைய வசனம் தனக்கு இந்த இரண்டுமாக இருப்பதாக சங்கீதக்காரர் கூறுகிறார். அப்போது தடுக்கியோ, வழுக்கியோ, தேவனுடைய பாதையை விட்டு விலகியோ போவதற்கு எந்த சாத்தியமும் கிடையாது. ஆவிக்குரிய வாழ்விலே சரியாக நாம் பயணிக்கமுடியும். ஆனால், ஒளியாகிய வார்த்தையைக் கடைப்பிடிக்காவிட்டால், நாம் விழுந்துபோய் விடுவோம். பாதை வழுவிப்போய் விடுவோம்.
சில வேளைகளில், நடக்கும் பாதையில் எதிர்பாராமல் இருள் வந்துவிட்டால், வெளிச்சத்திற்கு தடுமாறுவோம். ஆனால், இருட்டில் நடப்பதற்கு முன் ஆயத்தமாக நமது கைகளில் டார்ச்லைட் வைத்திருப்பதுண்டு. அது போலவேதான், தேவ வார்த்தையைத் தியானித்து, எப்போதும் நமது இருதயத்தில் வைத்து வைத்திருப்பின் அது இருளிலே நம்மை வழிநடத்தும். இருள் வந்தபின் நாம் விளக்குகளை ஆயத்தப்படுத்துவதில்லை, வருமுன்னரே ஆயத்தமாக இருப்பது அவசியம். அதுபோலவேதான் எப்போதும் தேவ வார்த்தையைத் தியானித்து நமக்குள் வெளிச்சமாக வைத்திருப்போமேயாகில், இருளான வாழ்விலே அது நம்மைத் தடுமாறிப் போகவிடாமல் காத்துக்கொள்ளும். “உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன்; ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்” (சங்.119:104). நமது வாழ்வில் தேவ வார்த்தைக்கு நாம் எவ்வளவாய் முக்கியத்துவம் கொடுக்கிறோம்?
ஜெபம்: கர்த்தாவே, பாவமாகிய இருளிலிருந்தும் அந்தகார லோகாதிபதியின் வலையிலிருந்தும் நாங்கள் பாதுகாக்கப்பட, தேவவார்த்தை என்னும் சத்திய ஒளியினால் எங்கள் இருதயம் காக்கப்பட உதவி செய்யும். ஆமென்.