ஒளித்து வைக்காதே!

தியானம்: 2026 மார்ச் 27 வெள்ளி | வேத வாசிப்பு: யோவான் 4:1-30

YouTube video

நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள் (யோவான் 4:29).

சாட்சி வேளையில் சாட்சி சொல்லுவதற்கு இன்று பலர் தயங்கி நிற்பதைக் காண்கிறோம். சில வேளைகளில் ஆண்டவர் செய்ததைப் பகிரங்கமாகச் சொன்னால் தங்களைப் பற்றிய காரியங்கள் மற்றவர்களுக்குத் தெரிந்துவிடுமே என்று எண்ணுவோரும் உண்டு.

இங்கே இந்த சமாரிய ஸ்திரீயின் சாட்சியோ வித்தியாசமானது. இயேசு அவளோடு பேசிக்கொண்டு இருக்கிறார்; அநேக கேள்விகளை அவளும் கேட்கிறாள். “நீர் யூதனாயிருக்க, சமாரிய ஸ்திரீயாகிய என்னிடத்தில் தண்ணீர் கேட்பது எப்படி” என்கிறாள். ஆண்டவரோ, “நான் தரும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு ஒருக்காலும் தாகம் எடுக்காது” என்று சொன்னவுடன் அந்தத் தண்ணீரைத் தரும்படிக்குக் கேட்கிறாள். இயேசு அவளுடைய புருஷனை அழைத்துவரும்படி சொன்னபோது, அவளோ புருஷன் இல்லை என்கிறாள். இயேசுவும், “ஆம், உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள்; இப்பொழுது இருப்பவனும் உனக்குப் புருஷன் அல்ல, இதை உள்ளபடி சொன்னாய்” என்று, தனது உண்மையைச் சொன்ன அவளுக்கே அவளை வெளிப்படுத்தினார். அப்பொழுது அவள், “ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்” என்றவள் பேச்சை மாற்றியவளாக, “இஸ்ரவேலை மீட்பதற்கு மேசியா ஒருவர் வருவார்” என்கிறாள். இயேசுவோ, “உன்னோடு பேசிக்கொண்டிருக்கும் நானே அவர்” என்கிறார். இதைக்கேட்ட மாத்திரத்தில் அவள் யாவையும் மறந்தவளாய், கொண்டு வந்த குடத்தையும் அங்கேயே விட்டுவிட்டு, இதுவரை ஊருக்குத் தன்னை ஒளித்து வாழ்ந்தவள், அதே ஊருக்குள் சென்று இயேசுவைக் குறித்து அறிவிக்கிறாள். “ஒரு மனுஷன் என்னைப்பற்றி எல்லாக் காரியத்தையும் சொன்னார். அவரை வந்து பாருங்கள் அவர் கிறிஸ்துதானோ” என்கிறாள். இதுவரை தன்னைத்தானே மறைத்து வைத்திருந்தவள், ஊருக்குள் தன்னை வெளிப்படுத்துகிறாள். மக்களும் புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள்.

சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டிய நமக்கு சமாரிய ஸ்திரீ இன்று ஒரு சவாலாக நிற்கிறாள். நாம் தேவனிடம் நம்மை ஒளித்து வைத்திருக்கும்வரை நமது வாழ்விலும் மீட்பு வர வாய்ப்பு இருக்காது. நம்மை ஆண்டவருக்கு முன்பாக ஒளிவு மறைவு இன்றி அறிக்கை செய்யும்போது நமது வாழ்வில் உண்டாகும் விடுதலையை நம்மால் மறைத்து வைக்கவும் முடியாது. “என்னை எனக்கு வெளிப்படுத்தியவர் இவர்தான்” என்று சாட்சி சொல்லலாமே. இந்த மீட்பைப் பெறாதோர் நம்மைச் சுற்றிலும் ஏராளம். சுவிசேஷம் இன்று நம் ஒவ்வொருவர் மேலும் விழுந்த கடமை என்பதை உணர்ந்து, எதையும் மறைக்காமல் அறிவிப்போமாக.

ஜெபம்: தேவனே, பாவத்தில் வாழ்ந்த எங்களை இரட்சித்தீர்; பாவங்களை மன்னித்தீர். இந்த மீட்பின் செய்தியை சமாரிய ஸ்திரீயைப் போன்று நாங்களும் தைரியமாய் மற்றவர்களுக்கும் சுவிசேஷமாய் அறிவிக்க எங்களுக்கு உதவும். ஆமென்.